Last Updated : 23 Oct, 2013 03:11 PM

 

Published : 23 Oct 2013 03:11 PM
Last Updated : 23 Oct 2013 03:11 PM

காவல் நிலையத்திலா நீதி?

சென்னை அண்ணா சதுக்கம், மகாகவி பாரதி நகர், பெருமாள்புரம், திருப்பூர் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலையங்களுக்கே வக்கீல்கள் சென்றதும் அங்கு ஏற்பட்ட வாய்த் தகராறுகள், அதைத் தொடர்ந்து நடந்த கைதுகள், பின்னர் நீதிமன்ற புறக்கணிப்புகள் நடந்ததைப் படித்தோம்.

அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து காவல்துறைத் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்ற வக்கீல் சங்கத் தலைவர்களை அவர் பார்க்காமல் உதாசீனப்படுத்தியதற்காக அவரது பதவி நீக்கம் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சச்சரவுகளையொட்டி, வக்கீல்கள் காவல் நிலையங்களுக்குப் போகலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்ற விழா ஒன்றில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், “காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு நடத்தாதீர்கள். நீதிமன்றத்துக்கு வந்து வாதாடுங்கள்” என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 20-22 பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. தனக்கு எதிராகவே சாட்சி சொல்ல குற்றவாளிகளை வற்புறுத்தக்கூடாது என்றும், கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்கவும், வக்கீலைக் கலந்தாலோசித்து உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ‘காவலரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை சாட்சியமாகக் கொள்ளக்கூடாது. நீதிமன்றத்திடமே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்பும் கைதியிடம், கொடுக்கப்போகும் வாக்குமூலம் அவருக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்று எச்சரித்த பின்னர் காவலர்கள் உட்பட எவரையும் அனுமதிக்காமல் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்ய வேண்டும்’ என்று காலனியாதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட சான்றியல் சட்டத்தில் பாதுகாப்புள்ளது. கைதிகளைச் சித்திரவதைக்குட்படுத்தி பெற்ற வாக்குமூலத்தை விசாரணையில் பயன்படுத்தி தண்டனை தரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதனால் இத்தகைய சட்டப் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டன..

பம்பாய் தொடர் குண்டு தாக்குதல் கைதியான அப்துல் கசாபிற்கு இதுபோன்ற பாதுகாப்புகள் வழங்காததனால் அவரை விடுதலை செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதடப்பட்டது.” மிராண்டா “ என்பவர் வாக்குமூலம் அளிக்குமுன் அவருக்கு வாக்குமூலம் கொடுக்க கட்டாயமில்லையென்று காவலர்கள் கூறாததனால் அவ்வழக்கு நிலைக்கத் தக்கதல்ல என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கூறிய தீர்ப்பை ஆதாரமாகக் காட்டிய போது நமது உச்சநீதிமன்றம் அவ்வாதத்தை நிராகரித்து அரசியலமைப்புச் சட்டத்திலும் சான்றியல் சட்டத்திலும் கைதிகளுக்குப் பாதுகாப்புகள் இருப்பதனால் மிராண்டா தீர்ப்பு இங்கு பொருந்தாதென்று கூறி விட்டது.

திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் கட்சிக்காரர்களுக்காக சென்ற வக்கீல் அய்யாத்துரை காவலர்களால் தாக்கப்பட்டதையெதிர்த்து நடைபெற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதி பால் கமிஷன்(1979) அமைக்கப்பட்டது. அவர் வக்கீல்கள் காவல்நிலையத்திற்குச் செல்வது முறையற்றது, தொழில் நெறிமுறைக்கு மாறானது என்று அறிக்கையளித்தார்.

தற்பொழுது கிரிமினல் வழக்குகள் மட்டுமல்லாமல், சிவில் வழக்குகளும் காவல்நிலையங்களிலேயே பைசல் செய்யப்படுகின்றன. தகராறுகளை விசாரிக்கும்போது இரு தரப்பு வக்கீல்களும் ஆஜராகின்றனர். ஒரு தரப்பிற்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி எழும் வாய்த்தகராறுகள் முற்றி கைகலப்பாக மாறி காவல்துறையின் மீதே குற்றம் சாட்டி எழும் பிரச்சினைகள், நீதிமன்ற புறக்கணிப்பிற்கும் இட்டுச் செல்கின்றன. இச்செயல்கள் தனிப்பட்டவர்களின் சிவில் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லமையுடைய நீதிமன்றங்களின் நடவடிக்கைகளையே முடக்கிப் போடும் அவலம் உலகில் வேறெங்குமில்லை. காவலர்களின் அத்துமீறலை தடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், உரிமையியல் நடைமுறைச் சட்டத்திலும் போதுமான அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்குள்ளது.

நீதிபதி தந்த அறிவுரையையேற்று வக்கீல்கள் நீதிமன்றத்திற்குள்ளேயே வழக்குகளை நடத்த முற்படுவதே சிக்கல்களைத் தீர்க்கும் ஒரே வழியென்று சொல்லவும் வேண்டுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x