Last Updated : 26 Sep, 2013 12:23 PM

 

Published : 26 Sep 2013 12:23 PM
Last Updated : 26 Sep 2013 12:23 PM

Globe ஜாமூன் - அமெரிக்க சோமாலிகளும் அஷ்டமத்துச் சனியும்

அன்றே சொன்னார் அண்ணா என்று யாரும் விசிலடிக்காதீர்கள். நைரோபி நாசகாரத் தாக்குதலில் ஈடுபட்ட அல் ஷபாப் தீவிரவாதிகளில் இரண்டு மூன்று அமெரிக்கக் குடியுரிமையாளர்களும் ஒரு பிரிட்டிஷ் பெண்மணியும் அடக்கம் என்று கென்ய அதிபர் அறிவித்திருக்கிறார். பெண்மணியாவது, கண்மணி யாவது? நாங்கள் இம்மாதிரியான சின்ன வேலைகளுக்கு எங்கள் சகோதரிகளைத் தொந்தரவு செய்வதில்லை என்று அல் ஷபாப்காரர்கள் ட்விட்டரில் இதற்கு பதில் சொல்லியிருந்தாலும், அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு தேசங்களில் வசிக்கும் சோமாலிய இளைஞர்களைத் தேடிப் பிடித்து ட்ரை வாஷ் பண்ணி, இஸ்திரி போட்டுத் தங்கள் திருப்பணிகளில் ஈடுபடுத்துவதில் அல் ஷபாப் ஒரு புதிய வரலாறைத் தொடங்கி வைத்திருப்பது கண்கூடு.

அல் காயிதா போன்ற ஓர் அசகாய அமைப்புக்கு உலகெங்கும் கிளைகள் இருப்பது பெரிய விஷயமல்ல. ஒரு முப்பதாண்டுக் கால விஸ்தீரணத்தில் எல்லா தேசங்களிலும் அவர்கள் எம்.என்.சிக்கள் மாதிரி கிளை திறந்து உள்ளூர் இளைஞர்களுக்கு 'வேலைவாய்ப்பு' வழங்குவதும் வியப்புக்குரியதல்ல. ஆனால் திடீரென்று முளைத்த ஒரு சோமாலியக் குழு; அதுவும் அல் காயிதாவின் கிளை என்றே சொல்லப்பட்ட நிழல் அமைப்பு தனக்கென இப்படி ஒரு ரூட்டைப் பிடித்து ஒரு பிரம்மாண்டமான கோரத்தாண்டவம் ஆடிக் காட்டியிருப்பது, காலம் கவலைப்படவேண்டிய சங்கதி.

இது என்னவாகுமென்றால் சம்பந்தப்பட்ட சாம்ராஜ்ஜியங்களில் வசிக்கும் நல்ல சோமாலியப் பிரஜைகளின் நிம்மதிக்கு முதலில் வேட்டு வைக்கும். அவர்கள் பொதுக் கழிப்பிடங்களில் மூச்சா போகப் போனாலும் முதலில் தம்மை நிரூபித்தாக வேண்டிய அவசியம் உண்டாகும்.

ஏற்கெனவே, மேலை நாடுகளில் குடியேறிய சோமாலியப் பிரஜைகள் பொதுவில் யாருடனும் அதிகம் பழகமாட்டார்கள்; எப்பேர்ப்பட்ட கூட்டத்திலும் தனியே ஒதுங்கியே இருப்பார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. கல்யாண குணங்களாவன ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, சமூகத்துக்கு சமூகம் வித்தியாசப்படும். தவிரவும் ஆதி சோமாலிய இனக்குழுப் பிரஜைகளின் நவீனகாலப் பிரதிநிதிகள், முக்கியமாகப் படிப்புக்காகவே அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் போய்ச் சேர்ந்தவர்கள்.

1920களில் ஆரம்பித்து இந்த இடப்பெயர்ச்சி வைபவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இடம் பெயர்ந்த முதல் தலைமுறையினர், அமெரிக்காவில் இருந்தபடிக்கு சோமாலிய விடுதலைக்காகத் தம்மாலான அணிலுதவிகள் செய்தவர்கள். அறுபதுகளுக்குப் பிறகு அங்கே போன சோமாலியர்களின் பிரதான நோக்கம் படிப்புதான். தன் முயற்சியில் சற்றும் தளராத சோமாலிய விக்கிரமாதித்தர்கள், சூரிய வம்சம் சரத்குமார் மாதிரி ஒரே பாட்டில் முன்னேறாமல், கஷ்டப்பட்டு இங்கிலீஷ் கற்றுக்கொண்டு, பாடம் படித்து, உத்தியோகம் தேடிக்கொண்டு படிப்படியாக மேலுக்கு வந்து செட்டில் ஆனவர்கள்.

மின்னசோட்டா மாகாணத்தில் இன்றைக்குக் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோமாலிய வர்த்தக ராஜாக்கள் வசிக்கிறார்கள். வருஷத்துக்கு சுமார் அறுநூறு மில்லியன் டாலர் பணப்புழக்கம் காட்டுகிற சோமாலியக் குடிஜனங்கள் வசிக்கிறார்கள்.

மாறாக 1990ல் சோமாலிய உள்நாட்டுப் போரின் விளைவாக அகதிகளாக இடம்பெயர்ந்த சோமாலியர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டன் பக்கம் போய்ச் சேர்ந்து அங்கு செட்டில் ஆனவர்கள். ஏழ்மை ஆற்றவும் பட்டோம், இனியென்றும் சோமாலியா வாரோம் என்று பிரிட்டனிலேயே சின்னச்சின்ன வேலை தேடிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள். இன்னாரின் இளைய தலைமுறை இன்று அங்கேயே படித்து வளர்ந்து அன்னை சோமாலியாவை அங்கிருந்தபடிக்கே அவதானித்துக் ்கொண்டிருப்பவர்கள்.

இவர்களையொத்த குடி பெயர் சோமாலியர்கள் பாடுதான் இப்போது பேஜாராகிப் போகவிருக்கிறது. நைரோபி வர்த்தக மையத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள், இறக்காதவர்களை எப்படிக் காப்பாற்றினார்கள், ஆபரேஷனுக்குப் பிறகு என்னென்ன வீர உரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் ரெண்டாம்பட்சம். ஏற்கெனவே தீவிர இஸ்லாமிய ஆயுதவாதிகளால் பலமுறை குலைநடுக்கம் கண்ட மேற்குலக மகாஜனங்கள் இனி தமது தேசத்தில் வசிக்கும் அப்பாவி சோமாலியர்களை எப்படிப் பார்ப்பார்கள் எப்படி நடத்துவார்கள் என்று ஊகிக்கச் சற்று சிரமமாயிருக்கிறது.

எப்படியானாலும் அல் காயிதாவுக்குப் பிறகு அதிக அக்கறை செலுத்தக் கோரும் அமைப்பாக அல் ஷபாப் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

அமெரிக்க, ஐரோப்பிய சோமாலியர்களுக்கு அஷ்டமத்துச் சனி ஆரம்பித்திருப்பதையும் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியாது.

சோமாலியா- ஒருபுறம் விரட்டும் பயங்கரவாதம்… மறுபுறம் வாட்டும் வறுமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x