Last Updated : 08 May, 2017 09:24 AM

 

Published : 08 May 2017 09:24 AM
Last Updated : 08 May 2017 09:24 AM

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள நாம் யார்?

கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த நான்கு சம்பவங்கள் இந்திய சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய நெருக்கடியை உணர்த்துகின்றன. முதலாவதாக, நாடாளுமன்ற சிவசேனை உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட், விமான நிறுவன ஊழியரைக் காலணியால் அடித்துவிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று சொன்னது. இரண்டாவதாக, உத்தர பிரதேசத்தில், காவல் துறையிலேயே ஒரு பிரிவு ‘ரோமியோ எதிர்ப்புப் படை’ என்ற பெயரில் இளைஞர்களை அச்சுறுத்துகிறது. மூன்றாவதாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பேலு கான் (50) என்ற அப்பாவி முஸ்லிம் பண்ணை ஊழியரை ஆல்வார் நகர பசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குண்டர்கள் அடித்துக் கொன்றனர். டெல்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க இளைஞரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.

இப்படிப்பட்ட சம்பவங்கள் முன்னரும் நடந்திருக்கின்றன. ஆனால், இப்போது அடுத்தடுத்து நடைபெற்றுவரும் சம்பவங்களின் வேகத்தைப் பார்க்கும்போது இந்நாட்டின் சட்டத் துறையையே ஒட்டுமொத்தமாகத் தாக்கத் தொடங்கிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களோ, எப்போதோ நடைபெறும் விதிவிலக்குகளோ அல்ல, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதன் அடையாளமே.

சட்டப்படியான ஆட்சி

சட்டப்படியான ஆட்சி என்கிறார்களே அப்படியென்றால் என்ன? சட்டப் புத்தகத்திலே சட்டங்கள் வரிசையாக இருப்பது மட்டுமே சட்டப்படியான ஆட்சியல்ல; ஆட்சிக்கு வரும் தலைவரின் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு நிர்வாகத்தின் சட்டங்கள் அடிக்கடி மாற்றப்படுவதும் சட்டப்படியான ஆட்சியல்ல. அதிகாரத்தைச் செலுத்தும்போது விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரையும் சமமாகப் பாவித்து சட்டத்தைப் பராமரிப்பதுதான் சட்டப்படியான ஆட்சி. ஒரு காவலர் என்னைக் கேள்வி கேட்க விரும்பினாலோ கைது செய்ய விரும்பினாலோ முதலில் அவர் தான் யார் என்று தெரிவிக்க வேண்டும், எதற்காக நான் வேண்டப்படுகிறேன் என்று தெரிவிக்க வேண்டும், என் மீதான சந்தேகம் அல்லது குற்றச்சாட்டையும் விவரிக்க வேண்டும்.

அப்படிக் கூற அவர் மறுத்தால், அவரால் விசாரிக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் நான் எதிர்த்தாக வேண்டும். ஏனென்றால், இன்னொரு சக மனிதன்கூட இப்படி என்னிடம் நடக்க முயற்சிக்கலாம். ரோமியோ எதிர்ப்புப் படை காவல் குழுக்கள் சட்டப்படியான ஆட்சிக்கு எதிராகத்தான் நடந்துகொள்கின்றன. தாங்களாகவே சிலரைக் குறிவைத்து, கேள்விகள் கேட்கின்றனர். அரசின் சார்பில் சட்டம் ஒழுங்கை, செயல்படுத்துவதற்காக நியமிக்கப்படும் காவலர்களாக இருந்தாலும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

சட்டத்தின் முன்..

சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்களும் சரி, சட்டத்தின்படி செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகளும் சரி, சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, சட்டப்படி நடக்கக் கடமைப்பட்டவர்களே. சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் நடந்துகொண்ட விதம், சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதைத் தகர்ப்பதாகவே அமைந்திருந்தது. அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் சட்டத்தைக் கடைப்பிடித்தே தீர வேண்டும். ஒரு பிரிவு மக்களுக்கு ஒரு விதமான சட்டமும் இன்னொரு பிரிவினருக்கு இன்னொருவிதமான சட்டமும் கிடையாது.

ஒரு குற்றச் செயலுக்குக் கீழ்நிலைச் சாதியினருக்கு அதிக அபராதமும், மேல் சாதியினருக்கு மிகக் குறைந்த அபராதமும் விதிக்கப்பட்டால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை மீறப்பட்டதாகிவிடும். நிறம், மதம் அல்லது மொழி அடிப்படையில் சிலரைப் பாகுபடுத்திப் பார்ப்பது, நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிறுபான்மைச் சமூக அப்பாவியைக் கொலை செய்துவிட்டு தண்டனை ஏதும் இல்லாமல் தப்பிவிடக் கூடாது. இதேதான் மொழிப் பெரும்பான்மையினருக்கும், நிறப் பெரும்பான்மையினருக்கும்.

நைஜீரிய இளைஞரைத் தாக்கிய டெல்லி கும்பலைச் சேர்ந்த அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட்டாக வேண்டும். அப்பாவி பேலு கானைக் கொன்றவர்களும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பசுவைப் பாதுகாக்கிறவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள் இந்துக்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கைச் சரிவர நடத்தாமல் அவர்களுக்கு உரிய தண்டனையையும் பெற்றுத்தராமல் விட்டுவிட்டால், அது சட்டம் சீர்குலைந்ததாகத்தான் ஆகும். சட்டப்படியான ஆட்சியைச் சீர்குலைப்பது எல்லோரையும் பாதிக்கும் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அபாயச் சங்கு

இன்றைக்கு ஒரு முஸ்லிம் பண்ணைத் தொழிலாளி இப்படிக் கொல்லப்பட்டிருக்கலாம், நாளை அதுவே இந்து மதத்தைச் சேர்ந்த மேய்ச்சல்காரராகவோ, ஏழை விவசாயியாகவோ இருக்கலாம். ஏனென்றால், அவர்களும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மேய்ச்சல் நிலம் தேடி கால்நடைகளுடன் இடம் பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். கோப வெறியை ஏற்றிக்கொண்டவர்களும், தவறாக வழிகாட்டப்படும் சமூகவிரோதிகளும் தாங்கள் யாரைத் தாக்குகிறோம், யாரைக் கொல்கிறோம் என்றெல்லாம் நிதானித்துப் பார்க்க மாட்டார்கள். அமெரிக்க நாட்டில் சீக்கியர்களைக் கொன்றவர்கள் அவர்களை முஸ்லிம்கள் என்று தவறாக நினைத்ததாகப் பிறகு கூறினர்.

உரிமைகளும் சட்டப்படியான ஆட்சியும்

நம் நாட்டில் சட்டப்படியான ஆட்சி என்பதற்கு சிறப்புக் கூறுகள் உண்டு. தான்தோன்றித்தனமாகச் செயல்படவில்லை, பாரபட்சம் பார்க்கவில்லை என்பது மட்டும் போதாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் நம்முடைய சட்டமே, நம்முடைய அந்தரங்க விவகாரத்தில் அரசு ஊடுருவவும், மகளிருக்கு எதிராக பாரபட்சமாக நடக்கவும் சில வேளைகளில் அனுமதி அளித்துவிடலாம். ஆனால், அம்மாதிரியான தவறுகளைக் கூட நீதிமன்றத்தின் கவனத்துக்கு வழக்காகக் கொண்டுவந்து நீதியை நிலைநாட்டிவிடலாம்.

சட்டத்தின்படியான ஆட்சி என்றால், தங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் அடிப்படையில் வழக்கு தொடுத்து நீதியைப் பெறுவதுதான் என்று நீதிபதிகள் பகவதி, சந்திரசூட் ஆகியோர் விளக்கியுள்ளனர்.

சட்டம் என்பது தனி மனிதர்களை குழுக்களை, ஒன்றை இன்னொன்றிடமிருந்தும் அரசிடமிருந்தும் பாதுகாப்பதற்கும்தான். இதன்படி, தனி நபர்களும் குழுக்களும் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள நீதிமன்றத்தை நாடலாம். ஒரு வன்முறைக் கும்பல் அல்லது அரசு சட்டப்படியான உரிமைகளை மீறும்போது நீதித் துறை அதைக் கண்டும் காணாமல் இருந்தால் அந்நாட்டில் அரசியல் சட்டமும், சட்டப்படியான ஆட்சியும் தோற்றுவிட்டது என்றே பொருள்.

சட்டப்படியான ஆட்சி என்பதை மீட்டாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறுவது பெரிய சாதனையாகத்தான் இருக்கும் என்றாலும், பொது தண்டனையியல் சட்டத்தை இந்திய அரசு அதற்கும் முன்னால் நிறைவேற்றுமா?

© ‘தி இந்து’ ஆங்கிலம்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x