Last Updated : 13 Apr, 2017 09:20 AM

 

Published : 13 Apr 2017 09:20 AM
Last Updated : 13 Apr 2017 09:20 AM

ஒரே நாடு.. ஒரே வரிக் கொள்கை.. மாநிலங்கள் அதிகாரத்தின் மீதான தாக்குதல்!

நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட விவகாரம் இது. நம் அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவு என்ன சொல்கிறது என்பதை நாம் மீண்டும் நினைவுகூர வேண்டிய சூழலில் இருக்கிறோம். அது என்ன சொல்கிறது என்றால், ‘இந்தியா - அதாவது பாரதம் - மாநிலங்களின் ஒன்றியம்’ என்று வரையறுக்கிறது. ஆக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று கூட்டாட்சித் தத்துவம்.

இந்த நாட்டில் ஆட்சியில் அமரும் எவராக இருந்தாலும் சரி, அவர் இந்த நிலைப்பாட்டை மீறிச் சென்றால், அதனை அணுகுவதில் நாம் மிக மிக விழிப்புடன் இருந்திட வேண்டும். அதனால்தான் நாம் இந்த அரசாங்கத்திடம், ஜிஎஸ்டி சட்ட முன்வடிவைக் கொண்டுவரும்போது, அதனை நிதிச் சட்ட முன்வடிவாகக் கொண்டுவராதீர்கள், அதனை மாநிலங் களவையும் தன்னுடைய அறிவைப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் சாதாரண மான சட்ட முன்வடிவாகக் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொள் கிறேன். ஏனெனில், இச்சட்ட முன் வடிவு நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பு சம்பந்தப் பட்டதாகும். ஆனால், இதற்குச் செவிசாய்த்திட பாஜக அரசு முன் வரவில்லை. மாறாக, நிதிச் சட்ட முன்வடிவாகவே கொண்டு வந்திருக்கிறது. மாநிலங்களின் உரிமை மட்டுமல்ல; மாநிலங்களவையின் உரிமையும் இப்போது பறிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாடு முழக்கத்தின் அபாயம்

நாட்டில் இப்போது ஒலிக்கும் ‘ஒரு நாடு.. ஒரே வரி’, ‘ஒரு நாடு.. ஒரே தேர்தல்’, ‘ஒரு நாடு.. ஒரே மொழி’, ‘ஒரு நாடு.. ஒரே மதம்’, ‘ஒரு நாடு.. ஒரே கலாச்சாரம்’, ‘ஒரு நாடு.. ஒரே உணவு’ என்ற இந்த முழக்கங்கள் குறித்தும் நான் மிக மிக ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறேன். இதுவா கூட்டாட்சித் தத்துவம்? இந்தியா என்பது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட நாடு அல்லவா? இவையெல்லாம் அச்சுறுத்தும் தீய அறிகுறிகள் அல்லவா?

மாநிலங்களின் வருவாயை அல்லது அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய எதுவாக இருந்தாலும், அதுகுறித்து மாநிலங்களவை என்பது ஆழமாகக் கவலைப்பட வேண்டிய அம்சமாகும். அவ்வாறு மாநிலங்களின் உரிமையைப் பறிக்கக்கூடியது எதுவாக இருந்தாலும், அது மாநிலங்களவையால் ஏற்கப்பட முடியாததும் நிராகரிக்கப்பட வேண்டி யதும் ஆகும். இன்று ‘ஜிஎஸ்டி கவுன்சில்’ ஒரு முடிவு எடுக்கிறது என்றால், அது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு வழிவகுக் கிறது என்று மாநிலங்களவை கருது மானால், அதனை நாடாளுமன்ற ஒப்புத லுக்குக் (Parliamentary approval) கொண்டுவர வேண்டும். அது இந்தச் சட்ட முன்வடிவில் மிகப்பெரிய இடைவெளியாக இருக்கிறது. இது சரிசெய்யப்பட வேண்டியிருக்கிறது. இதனை நாடாளுமன்றம் சரிசெய்யாமல் வேறு ஏதேனும் அமைப்பைச் சரிசெய்ய அனுமதிப்பது மிகவும் மோசமான ஒன்றாகும்.

ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம்

தலைவர் அவர்களே, அமைக்கப்படும் ஜிஎஸ்டி கவுன்சிலின் நிலை என்ன? ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. எந்தவொரு முடிவாக இருந்தாலும், நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் எடுக்க வேண்டும். மத்திய அரசாங்கம் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. எனவே, இது மிகவும் தெளிவான ஒன்று. எந்தவொரு முடிவும் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க முடியாது. இதில் மாநிலங்களின் உரிமைகள் என்ன?

கேரள, தமிழ்நாடு உதாரணங்கள்

மாநிலங்கள் இப்போதுள்ள நிலையில், ஆல்கஹால் மற்றும் பெட்ரோல் தவிர வேறு எதற்கும் மறைமுக வரி விதித்திட சுதந்திரமான உரிமைகள் கிடையாது. வேறெந்த விதத்திலும் மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ளவும் முடியாது. நாம் நம் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். கேரளா இன்றைக்கு மனித வள வளர்ச்சி அட்டவணையில், மேற்கத்திய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது? இதற்கான வளங்கள், அதாவது வருவாய் எந்த வகையில் திரட்டப்பட்டது? தமிழ் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.. எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் 56% ஆக இருந்த எழுத்தறிவு விகிதத்தை 83% ஆக அதிகரித்தது. இதற்கான நிதியாதாரம் மாநில அரசு விதித்த மறைமுக வரிகள் மூலமாகத்தானே சாத்தியமானது? இப்போது அந்த அதிகாரம் அனைத்தும் ஜிஎஸ்டி மூலம் அடிபட்டுவிட்டது.

மாநிலங்களுக்கு எஞ்சியிருக்கும் அதிகாரம் என்று என்ன இருக்கிறது? மாநில ஜிஎஸ்டி மட்டுமே மிச்சம் இருக்கிறது. ஆம், கொஞ்சம் கருணை காட்டி இருக்கிறார்கள். இப்போது மூன்று விதமான ஜிஎஸ்டிகள் வந்துவிட்டன. மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி. மாநிலங்கள் நலன் கருதி கோருகிறேன். மாநில ஜிஎஸ்டியையேனும் மிகப் பெரிய அளவில் இணக்கமுடையதாக மாற்றுங் கள். மத்திய அரசுக்கும் மாநில அரசு களுக்கும் இடையே வரி வருவாயைப் பங்கிட்டுக்கொள்வதில் உள்ள ஏற்றத் தாழ்வைச் சரிசெய்ய இது தேவை.

அதேபோல, ஜிஎஸ்டி கவுன்சிலின் தணிக்கையைக் கையாள ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சி.ஏ.ஜி. எனப்படும் தலைமைக் கணக் காயரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனைத் தனியார் எவரிடமும் தந்துவிடக் கூடாது. இதையேனும் இந்த அரசு, நம்முடைய நிதி அமைச்சர் பரிசீ லிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், மாநிலங்களின் நலன் கருதி!

ஆக, எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கிச் செல்பவர்களிடம் கோருகிறேன், நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நம் அரசமைப்புச் சட்டத்தின் சாரம், நம்முடைய கூட்டாட்சிக் கட்டமைப்பு முறைதான். அதுவே, நம் அரசமைப்புச் சட்டத்தின் சாரம். அதில் கை வைக்காதீர்கள்!

6.4.17 அன்று மாநிலங்களவையில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி சட்ட முன்வடிவு மீதான விவாதத்தில் யெச்சூரி ஆற்றிய உரையின் சுருக்கப் பட்ட வடிவம்.

தமிழில்: ச.வீரமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x