Last Updated : 20 Jan, 2014 12:00 AM

 

Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

வாழ்நாள் கனவாக ஒரு புத்தகம்!

தமிழ்ச் சிந்தனை உலகம் காலங்காலமாகக் காத்திருந்த ஒரு புத்தகத்தை, தன் வாழ்நாள் கனவுகளில் ஒன்றாக நினைத்திருந்த மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்திருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. நம்பகமான மொழிபெயர்ப்பில், விரிவாக ஆங்கிலம் - தமிழ் இரு மொழி நூலாக வெளியாகியிருக்கிறது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’.

உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்று பைபிளைக் குறிப்பிடுவார்கள் (2,798 மொழிகள்). ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’க்கு அப்படி ஒரு தெளிவான கணக்கு இல்லை என்றாலும், நிச்சயம் உலகிலேயே அதிகம் பெயர்க்கப்பட்ட நவீனப் பிரதி இதுதான்.

கம்யூனிஸ்ட்டுகள் ரகசியமாகச் செயல்பட வேண்டியிருந்த காலகட்டத்தில் - 1848-ல் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத் திட்டமாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவராலும் இணைந்து எழுதப்பட்ட இந்த நூலே, உலகம் முழுவதுமுள்ள பொதுவுடைமை இயக்கங்களின் வேதம் என்று சொல்லலாம். “இதுவரையிலான சமூகத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்று கூறும் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் பொதுவுடமைச் சமூகத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளைப் பரிந்துரைக்கும் இந்நூல், உலக அரசியல் நடவடிக்கைகளில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தும் நூலாக அங்கீகரிக்கப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் பார்க்கக் கிடைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ கோஷம் இதில் இடம்பெற்றிருக்கும் வாசகம்தான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வமான முதல் மாநாடு 1934-ல் நடைபெற்றது. இந்தமாநாட்டிலேயே தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. ஆனால், 166 ஆண்டுகளுக்குப் பிறகே இங்கு விரிவான விளக்கக் குறிப்புகளுடன் நம்பகமான மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளியாகிறது. ஒரு நல்ல மொழிபெயர்ப்புக்கான கடுமையான உழைப்புக்கு உதாரணமாகியிருக்கிறார் ராஜதுரை.

“எனக்குப் பதினாறு பதினேழு வயசிருக்கும். அப்போதான் முதல் முறையா ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் பார்த்தேன் (ஆங்கில நூல்). பூர்ஷ்வா, குட்டி பூர்ஷ்வானு அதுல இருந்தபல வார்த்தைகளைப் பார்த்து பீதி அடைஞ்சு அப்படியே புத்தகத்தை மூடிவெச்சுட்டேன். பின்னாடி, 1960-கள்ல காசநோய் சிகிச்சைக்காக பெருந்துரை ஆஸ்பத்திரியில் இருந்தப்போ, பக்கத்துல சிகிச்சைக்காக வந்திருந்த கோவை ஆலைத் தொழிலாளர்கள்ல ஒருத்தர் கொடுத்த ‘வீரம் விளைந்தது’ புத்தகத்தைப் படிச்சப்போதான் கம்யூனிஸம் என்னை இழுக்க ஆரம்பிச்சுச்சு. தொடர்ந்து, ஜார்ஜ் பொலிட்ஸர், எமிலி பேர்ன்ஸ், கார்கி, தோல்ஸ்தோய்னு தேடித் தேடிப் படிச்சப்ப கம்யூனிஸம் புரிபட ஆரம்பிச்சு அது மேல பற்று ஏற்பட்டுச்சு. ஆனாலும் என்னன்னா, கம்யூனிஸத்தோட திறவுகோலா எல்லோராலும் மதிக்கப்படுற ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை மட்டும் முழுசாப் புரிஞ்சுக்க முடியலை. இந்த நிலைமை ரொம்ப நாள் நீடிச்சுது.

தமிழ்ல 1931-லேயே ‘சமதர்ம அறிக்கை’ங்குற தலைப்புல ‘குடிஅரசு’ இதழ்ல இந்த அறிக்கையோட முதல் பிரிவு வந்துடுச்சு. அப்புறம், எம்.இஸ்மத் பாஷாவோட முழுமையான தமிழாக்கம் ‘ஜனசக்தி பிரசுரம்’ மூலம் கொண்டுவரப்பட்டுருக்கு. 1979-ல் ரா.கிருஷ்ணையாவால் மொழிபெயர்க்கப்பட்டு, மாஸ்கோ ‘முன்னேற்றப் பதிப்பக’த்தால் வெளியிடப்பட்ட புத்தகம்.

கிட்டத்தட்ட ஆறு லட்சம் பிரதிகள் விற்கப்பட்டதா சொல்றாங்க. அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பும் தேவையும் இங்கே அதுக்கு இருந்திருக்கு. ஆனா, ஆங்கிலம் - தமிழ் இரண்டிலேயுமே இந்தப் புரிபடா சிக்கலை நான் உணர்ந்தேன்.

அதனால, விரிவான விளக்கவுரைகளுடன் கூடிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யோட பதிப்பு எங்கேயாவது கிடைக்குமானு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன். 15 வருஷங்களுக்கு முன் தோழர் ச.சீ.கண்ணன் கொடுத்த டேவிட் ரையாஸானோவ் எழுதின ஆங்கிலப் பதிப்பு என்னோட தேவையைப் பூர்த்திசெஞ்சுச்சு. மார்க்ஸ், ஏங்கெல்ஸோட மூலப் படைப்புகளை ஜெர்மனியிலிருந்து திரட்டிக்கிட்டுவந்து, ரஷ்யாவுல வெளியிட்டதோட ஆங்கிலம் உள்பட பல மொழிகளுக்கு அது போய்ச் சேரவும் உதவினவர் இவர். ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, மாஸ்கோவுல நிறுவப்பட்ட மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் நிறுவனத்தோட இயக்குநரா இருந்தவர்.

நாம உருவாக்கணும்னு நெனைக்கிற சமூகத்தை அமைக்கிறதுக்கான வழிகாட்டியா இருக்குற நூலைத் தமிழ்லேயும் இப்படி விரிவா கொண்டுவரணும்கிறது அப்போ முடிவுசெஞ்சது. அது சாத்தியமாக இவ்வளவு காலம் ஆகியிருக்கு. அதுவும் நாளுக்கு நாள் கண் பார்வை மங்கிக்கிட்டே இருக்குற சூழல்ல அது முழுசா போயிடுறதுக்குள்ள செஞ்சுடணும்கிற உந்துதல்ல முடிச்சது.

ஜெர்மன்ல எழுதப்பட்டது மூல நூல். நம்ம குழப்பத்துக்குக் காரணம் என்னென்னா, அதுக்கு வெளியாகியிருக்குற பல்வேறு பதிப்புகள், மொழிபெயர்ப்புகள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருக்கும்போதே இந்த அறிக்கையில சில திருத்தங்கள் வேணும்னு நெனைச்சாங்க. ஆனா, அந்தத் திருத்தத்தை அறிக்கையில அவங்க செய்யலை. ‘அறிக்கை ஒரு வரலாற்று/ ஆவணமாகிவிட்டது; அதைத் திருத்த எங்களுக்கு இனி உரிமை இல்லை’னு சொல்லி அடுத்தடுத்து எழுதப்பட்ட முன்னுரையில அதைக் குறிப்பிடுறாங்க. மார்க்ஸ், ஏங்கெல்ஸால் 1872, 1882 ஆண்டுகள்ல ரெண்டு முன்னுரைகளும் மார்க்ஸ் மறைவுக்குப் பின்னாடி ஏங்கெல்ஸால் 1883, 1888, 1890, 1892, 1893 ஆண்டுகள்ல ஐந்து முன்னுரைகளும் வந்திருக்கு. இந்த இடைப்பட்ட காலத்திலேயும் அதற்குப் பிறகுமா ஏகப்பட்ட பதிப்புகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்திருக்கு. என்ன பிரச்சினைன்னா, ஜெர்மன்

மொழியை அவங்க புரிஞ்சுக்கிட்ட விதம். இடைப்பட்ட காலகட்டத்துல அந்த மொழியில ஏற்பட்ட மாறுதல்கள் பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலை. ஆங்கிலத்தில் இருந்துதான் நாம மொழிபெயர்க்குறோம்கிறதால, அதே பிரச்சினை தமிழ்லேயும் தொடர்ந்திருக்கு. உதாரணமா, ‘இடியோடிமஸ்’னு ஒரு வார்த்தை. தனிமைப்பட்ட நிலைங்கிற பொருள்ல எழுதியிருக்காங்க; ஆனா, கிராமப்புற மடைமைனு அதை மொழியாக்கம் செஞ்சுருக்காங்க. இப்படிப்பட்ட பிரச்சினைதான் புரியாமையை உண்டாக்கினது.

ஆங்கிலத்துலேயும் ஜெர்மன்லேயும் பல்வேறு பதிப்புகளைப் பார்த்து செஞ்ச ஒப்பிடல்ல ஆரம்பிச்சு சர்வதேச அளவுல முக்கியமான சில மார்க்ஸிய அறிஞர்கள், ஜெர்மானிய அறிஞர்களை அணுகினப்ப கிடைச்ச அவங்களோட உதவி வரைக்குமா சேர்ந்து இந்த மொழியாக்கத்துல அந்தப் புரிபடா பிரச்சினையைத் தீர்த்துருக்கு. கூடுதலா, தவறான புரிதலால், ‘ஐரோப்பிய மையவாத பார்வையை வெளிப்படுத்துற நூல்’னு சொல்லப்பட்டவங்களோட குற்றச்சாட்டை மறுத்து, ‘இது உலகப் பார்வையைக் கொண்ட நூல்’னும் இந்த மொழிபெயர்ப்பு நிறுவுது.

இதுக்கு முன்னாடி தமிழ்ல வெளியான மொழிபெயர்ப்புகளை நான் குறை சொல்ல மாட்டேன். அந்தக் காலச் சூழல், அவங்களுக்கு முன்னாடி இருந்த வாய்ப்புகள் அப்படி. இன்னும் சொல்லணும்னா, அவங்க அத்தனை பேர் தோள்லேயும் ஏறி நின்னுதான் இதைச் செஞ்சிருக்கேன்னு சொல்லணும்.

உலக அளவுல முக்கியமான ஒரு புத்தகத்தைத் தமிழ்ல முழுமையா, விரிவா கொண்டுவந்துட்டோம்கிற மன நிறைவு ஒருபக்கம் இருந்தாலும், நாம வெளியிலேர்ந்து கொண்டுவந்து சேர்க்க வேண்டிய படைப்புகள் இன்னும் கடலளவு இருக்கேங்கிற கடமையும் நாம இருக்குற உடல்நிலை எதுவரைக்கும் அனுமதிக்கும்கிற உண்மையும் ஏக்கத்தைதான் உருவாக்குது!”

சமஸ் - தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x