Last Updated : 27 Mar, 2017 09:28 AM

 

Published : 27 Mar 2017 09:28 AM
Last Updated : 27 Mar 2017 09:28 AM

மருத்துவ சேவை தொடர்பான பார்வையில் மாற்றம் அவசியம்!

இந்தியா தன்னுடைய வருடாந்திர ஜிடிபி மதிப்பில் 5%-ஐ மருத்துவத்துக்காகச் செலவிடுகிறது. தனது ஜிடிபியில் 18%-ஐ செலவு செய்யும் அமெரிக்காவுடன் ஒப்பிட இது மிகமிகக் குறைவு என்று தோன்றும். பொருளாதார ஒத்துழைப்பு - வளர்ச்சிக்கான அமைப்பின் (ஓஇசிடி) நாடுகளில் இந்தச் செலவு 8% முதல் 11% ஆக இருக்கிறது. நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் இது 6% ஆகவும், இந்தியாவைப் போன்ற சமமான பொருளாதார பலம் உள்ள நாடுகளில் 4.5% ஆகவும் இருக்கிறது. இந்தப் பின்னணியில் இந்தியாவின் மருத்துவ ஒதுக்கீடு குறைவு என்று தோன்றினாலும், வழக்கத்துக்கு மாறானது அல்ல என்பதே உண்மை. ‘சுகாதாரம் தொடர்பான தொடர் வளர்ச்சி இலக்கு’(எஸ்டிஜி) என்பதுடன் மருத்துவச் செலவை ஒப்பிட்டுப் பார்த்தால், 188 நாடுகளில் இந்தியா மிகவும் தாழ்ந்து, 143-வது இடத்தில் இருக்கிறது.

வாழ்க்கைத் தரத்தில் உண்மையிலேயே நாம் எங்கே இருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் ரூ.520 லட்சம் கோடி மதிப்புள்ள உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாகத் திகழ்கிறோம். இதில் நம்முடைய 5% மருத்துவ ஒதுக்கீடு என்பது, நம் நாட்டு மக்கள்தொகையின் பின்னணியில் கணக்கிடும்போது, நபர்வாரியாக வெறும் ரூ.17,355 தான் வருகின்றன. இதுவே, ஓஇசிடி நாடுகளில் சராசரியாக ரூ.3 லட்சமாக இருக்கிறது. நம்முடன் ஒப்பிடத்தக்க அல்லது நம்மைவிடக் குறைந்த நபர்வாரி மருத்துவ ஒதுக்கீடு உள்ள இந்தோனேசியா, தாய்லாந்து, கானா ஆகிய நாடுகள், மக்களுடைய வாங்கும் திறன் குறியீட்டெண் அடிப்படையில் பார்க்கும்போது 91, 112, 141-வது இடங்களில் இருக்கின்றன. இது நமக்குச் சிறிதளவு நம்பிக்கையையும் சில பாடங்களையும் கற்றுத்தருகிறது.

இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையில் உள்ள முக்கியமான இரண்டு வேறுபாடுகள் என்னவென்றால், 1. மருத்துவச் செலவுகளை ஒருங்கிணைப்பது, 2. நாட்டின் மருத்துவ அமைப்பின்மீது அரசுக்குள்ள கட்டுப்பாடு போன்றவையாகும்.

செலவுகளை ஒன்று சேர்ப்பது

முதலாவதாக, மருத்துவத்துக்காகச் செலவிடும் தொகைகளை ஒன்று சேர்க்க வேண்டும். 2004-14 காலத்தில் 4% முதல் 7% வரையிலான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றன. மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளாததால், ஏழைக் குடும்பங்கள் தங்களுடைய சொந்த வருவாயிலிருந்தே செலவுசெய்தன. இதனால் அவை ஏழ்மையில் ஆழ்ந்தன. இவ்வாறு நேராமல் தடுக்க ஏதாவது ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முன்கூட்டியே ஏழைக் குடும்பங்களைச் சேர்ப்பதும், அரசின் சுகாதாரத் துறைச் செலவுகளை ஒன்று திரட்டுவதும்தான் இதற்குத் தீர்வு. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதய நோய், புற்றுநோய் போன்றவை ஏற்பட்டுவிட்டால் குடும்ப வருமானம் போதாமல் கடன் வாங்கியோ, இருப்பவற்றை விற்றோ செலவுசெய்கின்றனர்.

இதனாலேயே அந்தக் குடும்பம் நடுத்தரக் குடும்பம் என்ற நிலையிலிருந்து ஏழ்மைக்கோ அல்லது வறுமைக்கோட்டுக்கும் கீழேயுள்ள குடும்பமாகவோ மாற நேர்கிறது. சுகாதாரத்துக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கும் ஒரு நாடு எவ்வளவு தொகையை ஒதுக்குகிறது என்பதைப் பொறுத்துதான் சுகாதாரச் செலவுகள் சேர்த்துக் கணக்கிடப்படும்.

இந்தியாவில் வரி வருவாய்க்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதம் மிகவும் குறைவாக இருப்பதும் (அதாவது வரி வருவாய் பெரிய பங்களிப்பைச் செய்வதில்லை), மருத்துவத்துக்காக மத்திய அரசு ஜிடிபி மதிப்பில் 5% மட்டுமே ஒதுக்குவதும் போதவில்லை. இந்தியாவைப் போலவே வரி வருவாய்க்கும் ஜிடிபிக்குமான விகிதம் உள்ள தாய்லாந்து, 13%-ஐ மருத்துவத்துக்காக ஒதுக்குகிறது. மருத்துவத் துறைக்கு எல்லா வகையிலும் பணத்தை அதிகம் ஒதுக்க இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இப்போது ஒதுக்குவதைவிட அதிகம் ஒதுக்க வேண்டும்.

அத்துடன் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. திட்டம் குறைந்த வருவாய்ப் பிரிவு தொழிலாளர் களுக்கு மட்டுமே கட்டாயம் என்று இருப்பதை எல்லாத் தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும். பிறகு, அமைப்பு சாரா துறையில் உள்ள குறைந்த வருவாய் தொழிலாளர்கள், அதிக வருவாய் உள்ள தொழிலாளர்களையும் படிப்படியாக இதில் சேர்த்துக்கொள்ளலாம். கிர்கிஸ்தான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக அமலாவதைப் போல மக்கள் அனைவரும் அவரவர் மாநில அரசு அளிக்கும் மருத்துவக் காப்புறுதித் திட்டம் அல்லது மத்திய அரசின் மருத்துவக் காப்புறுதித் திட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்வதைக் கட்டாயமாக்க வேண்டும்.

அரசுக் கட்டுப்பாடு

அடுத்ததாக, மருத்துவ அமைப்பின் பல அம்சங்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதன் மூலம், மருத்துவச் செலவையும் குறைத்து, அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்த முடியும். ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அனைவருக்கும் மருத்துவ வசதிகளை அளிப்பதில் வெற்றிகரமான நிர்வாக அமைப்பு உறுதுணையாக இருக்கிறது. இந்த நாடுகளில் அரசாங்கம் மருத்துவ சேவை களை அளிப்பதில்லை.

ஆனால், மருத்துவத் துறையின் அனைத்து சேவைகளையும் அவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. மருத்துவத் துறையின் அனைத்துச் சேவைகளுக்குமான கட்டணம் ஒவ்வொரு கட்டத்திலும் அரசு நிர்ணயித்தபடிதான் வசூலிக்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு எவ்வளவு, மருத்துவமனைக்கு எவ்வளவு, மருந்துகளுக்கு எவ்வளவு, சாதனங்களுக்கு எவ்வளவு, இதர சேவைகளுக்கு எவ்வளவு, சோதனைகளுக்கு எவ்வளவு என்றெல்லாம் அரசு விலை நிர்ணயித்துவிடுகிறது. இதை இந்தியாவும் பரிசீலிக்கலாம்.

மருத்துவமனைகள் அதிகம் இல்லாத பின்தங்கிய பகுதிகளில் அல்லது மாநிலங் களில் மருத்துவமனைகளைத் திறக்கும் தனியாருக்கு ஊக்குவிப்பு வழங்கும் முறை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அமலில் இருக்கிறது. மத்திய அரசு அதையும் கடைப் பிடிக்கலாம்.

மத்திய அரசு மருத்துவ சேவைகள் அளிப்பதைப் பொறுத்தவரை தன்னுடைய வியூகத்தையே மாற்றிக்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டாய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஏழைகளுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்பவும் காப்பீட்டுக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். மருந்து, மருத்துவ மனை ஆகியவற்றின் கட்டணத்தையும் மருத்துவர்களுக்கான ஊதியத்தையும் அரசு நிர்ணயிக்க வேண்டும்.

பின் தங்கிய பகுதி களில் மருத்துவமனைகளைத் தொடங்க நிதி ஊக்குவிப்புகளையும் இதர சலுகைகளை யும் அளிக்க வேண்டும். மருத்துவத்துக்கான ஒதுக்கீட்டைப் படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும். மருத்துவம் தொடர்பாக வெவ்வேறு துறைகள் மூலம் ஒதுக்குவதை இணைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இந்நடவடிக்கை களால் பெரும்பாலானவர்கள் தரமான மருத்துவ சேவையைக் குறைந்த கட்டணத்தில் பெறுவதை உறுதிசெய்யலாம்.

கட்டுரையாளர்கள்: பில் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் | சுருக்கமாகத் தமிழில்: சாரி
©‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x