Published : 18 Jun 2016 11:29 AM
Last Updated : 18 Jun 2016 11:29 AM

வாழ்வோடு கலந்த வார்த்தை

தீர்க்கமான வழிகாட்டல்

'தமிழகத்தின் பசுமை வேர்' தலையங்கம் நீராதாரத் தடைகளினால் துயருற்றிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஒரு தீர்க்கமான வழிகாட்டலாக அமைந் திருக்கிறது.

அரசையோ எதிர்க்கட்சிகளையோ மட்டும் நம்பியிருக்காமல், மராட்டிய மாநிலத்தின் ஹொரட்டி கிராமத்தினரை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக விவசாயிகள் ஒன்றுகூடித் திட்டம் தீட்டி, ஒவ்வொரு பகுதியாக நீராதார நிலைகளைச் சீர்படுத்துவது ஒன்றுதான் ஆக்கபூர்வமான செயலாகும்.

இதற்கு ஆகும் செலவுகளை ஊர்மக்களிடமும் தொழிலதிபர்களிடமும் பெற்றுச் செயலாற்றலாம். ஊடகங்கள் மூலம் மக்களிடமும் உதவி கோரலாம். அனைவரும் முனைந்து செயல்பட்டால், தமிழ்நாட்டைத் தண்ணீர் மிகை மாநிலமாக மாற்றிக் காட்ட முடியும்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

*

வாழ்வோடு கலந்த வார்த்தை

ஆகாஷ்வாணி என்பது வாழ்வோடு கலந்த வார்த்தை. சென்னை வானொலி நிலையம் பற்றிய நினைவுகள் பசுமையானவை.

மதியம் தொழிலாளர் நிகழ்ச்சி, மாதர் நிகழ்ச்சி, காலை மற்றும் மாலை 'இளைய பாரதம்', ஞாயிறு அன்று 'பாப்பா மலர்', மாதத்துக்கு ஒரு முறை திரை ஒலிச்சித்திரம் அனைத்தும் நினைவில் நீங்காதவை.

சென்னை வானொலி திங்கள் மற்றும் வியாழன்களில் அரை மணி நேரம் நேயர் விருப்பம் ஒலிபரப்பும். அதிலும் நான்கு தமிழ், இரண்டு தெலுங்கு, ஒரு இந்திப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். வானொலிப்பெட்டி வைத்திருக்கும் வீட்டில் சென்று காத்திருந்து கேட்போம்.

இப்போது வண்டி வண்டியாய் பாடல்கள் இருந்தாலும், பழைய இன்பமில்லை. அக்காலத்தை நினைவுபடுத்திய கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

- இரா.ஜோதி, சென்னை.

*

இளைஞர்களுக்குப் பாடம்

'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராமின் 'புலனாய்வு இதழியல்: சில குறிப்புகள்' எனும் கட்டுரை பல இருண்மைகளை அப்பட்டமாய் வெளிச்சம்போட்டுக் காட்டியது.

உள்நோக்கத்துடனோ, ஒருவர்மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடனோ செய்யப்படும் புலனாய்வுகள் பரபரப்பை உண்டாக்கலாமே தவிர, அதனால் சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. எது உண்மை.. யார் சொல்வது உண்மை.. என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிற இதழாளன் வணிகம், பரபரப்பு, அவதூறு போன்ற எத்தனையோ தடைகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.

இதழியல் படிக்கும் மாணவ, மாணவியருக்கு என்.ராம் அழகான, சுருக்கமான பாடக் கட்டுரையைத் தந்திருக்கிறார். தொடர்ந்து தன் இதழியல் அனுபவங்களைத் தொடராக 'தி இந்து'வில் எழுதினால் ஊடகவியல் பயில்கிற மாணவர்களுக்கு வழிகாட்டியாய் அமையும்.

- சௌந்திரமகாதேவன், திருநெல்வேலி.

*

சமரசமே இலவசம்

'வேலையின்மையை உருவாக்கும் இலவசங்கள்' கட்டுரையை ஒரு பெருமூச்சுடன்தான் வாசிக்க முடிந்தது. இங்கு கலைஞர் டிவி, அம்மா மிக்ஸி, அம்மா ஃபேன் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளிலும்கூட. இலவசங்களையும், மானியங்களையும் எந்த தேசத்தின் மக்கள் மறுக்கிறார்களோ அந்த தேசமே வளர்ந்த தேசமாகும். ஊழலுடனும் அதிகாரத்துடனும் அரசாங்கத்தின் செயலின்மையுடனும் மக்கள் செய்துகொள்ளும் சமரசமே இலவசம்.

- சந்தானகிருஷ்ணன், தஞ்சாவூர்.

*

புகை நமக்குப் பகை

தெருமுனைக் கடைகளிலும் டீக்கடைகளிலும் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மட்டுமல்ல.. மின்வண்டிகளிலும் புகை பிடிப்போரைப் பிடிக்க அதிரடிப் பறக்கும் படையை அமைத்திட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவு, சுகாதாரமான சுற்றுச்சூழலை நிச்சயம் உருவாக்கும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

*

முத்துக்கள் பத்து

சமூகநீதிப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பற்றிய முத்துக்கள் பத்து அருமை. இக்கால இளைஞர்களும் அறிந்துகொள்ளும் வகையில், 'தி இந்து' போன்ற நாளிதழ்கள் அவரைத் தொடர்ந்து நினைவுகூர வேண்டும்.

- கண்ணப்பன், திருவாடுதுறை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x