Last Updated : 07 Nov, 2013 12:00 AM

 

Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?

குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

மோடி இப்போது எங்கு சென்றாலும் ஒரே ஓசை மயம். இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற அவருடைய பிரச்சாரம் இப்போது வேகம் எடுத்திருக்கிறது. தன்னம்பிக்கை மிளிரும் அவருடைய பீடு நடையில் மிளிரும் உண்மை அதுதான்: பிரச்சாரத்தில் நன்றாகப் பேசுகிறார்; ஆனால், வாஜ்பாயின் பேச்சுக்கலைக்கு ஒப்பாகாது மோடியின் பேச்சு. அனாயாசமானதும், பல தசாப்தங்களின் பயிற்சியாலும் வந்த கலை வாஜ்பாயினுடையது. மோடிக்கென்று தனிப்பட்ட ஈர்ப்பும் இருக்கிறது, நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இளைஞர்களையும் அவர் கவர்ந்திருக்கிறார்.

நாட்டின் மிக உயர்ந்த ஒரு பதவிக்கு வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டதால், அரசியல் சந்தையில் பாரதிய ஜனதாவின் சரக்குக்கு முறுக்கேறி இருக்கிறது. சுமார் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்து காயலான்கடை கடைச்சரக்குபோல் ஆகிவிட்ட காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் களத்தில் நின்றால், எந்தக் கட்சிக்கு அதிக இடங்கள் - வாக்குகள் கிடைக்கும் என்று அறிய கருத்துக்கணிப்பே தேவை இல்லை. சமூக பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுவருவதில் காட்டிய வறட்சி, ஈடு இணையில்லாமல் எல்லா மட்டங்களிலும் அது நிகழ்த்தியுள்ள ஊழல்கள் விளைவாக காங்கிரஸ் இப்போதே கடைநிலைக்கு வந்துவிட்டது.

எல்லா அரசியல் கருத்துக்கணிப்புகளுமே மோடியும் அவருடைய கட்சியும் முன்னிலை வகிப்பதாகக் கூறுகின்றன. ஒன்றிரண்டு அவர்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முன்னிலை வகிக்கும் என்று கூறுகின்றன. பாரதிய ஜனதா தவிர சிரோமணி அகாலிதளம், சிவசேனை ஆகியவை மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இப்போது எஞ்சியிருக்கின்றன. இந்தக் கூட்டணி 190-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்றால், மக்களவையில் கூட்டணிக்கு 272 இடங்களுக்கு மேல் தேவை. கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருவதில் அதிசயம் என்ன?

பரிவாரங்களின் ஆவேச எதிர்பார்ப்பு

இந்தி பேசும் மாநிலங்களிலும் சில மேற்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெருத்த தொண்டர் படையும் மக்களிடையே ஆதரவும் இருக்கிறது. அந்த மாநிலங்களில் வலதுசாரி இந்துத்துவச் சக்திகளான சங்கப் பரிவாரங்கள் மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பிரச்சார இயந்திரங்களை முடுக்கிவிட்டுவிட்டன. பரிவாரங்கள் ஆவேச எதிர்பார்ப்புடன் இப்போதே முண்டாதட்ட ஆரம்பித்துவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்கள்தான் அரசியல் சட்டத்துக்கு விரோதமான கொள்கைகளையும் இந்தியாவின் அடிப்படை பண்புக்கு முரணான இந்துத்துவக் கொள்கைகளையும் அமல்படுத்தும் சக்திகளாக இருப்பார்கள்.

கணக்கு எடுபடுமா?

இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பன்மைச் சமூகம்; இந்தோனேசியா, பாகிஸ்தானுக்குப் பிறகு உலகிலேயே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் சுமார் 17 கோடி வாழ்கிற நாடு இது. கர்நாடகம் தவிர்த்த தென்னிந்திய மாநிலங்களிலும் கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு அமைப்பு ரீதியான பலமோ ஆதரவோ இல்லை. அங்கிருப்பவர்கள், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சங்கப் பரிவாரங்கள் முன்னிலைப்படுத்தும் ‘வளர்ச்சி நாயகன்’ எப்படிப்பட்டவர், குஜராத்தில் அவர் கொண்டுவந்த முன்னேற்றங்கள் என்ன என்பதை அறியும் ஆவலில் இருக்கின்றனர்.

சங்கப் பரிவாரங்கள் மட்டுமல்ல; இந்திய கார்பரேட் நிறுவனங்களும் படித்தவர்களில் ஒரு பகுதியினரும்கூட அவரை ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்றே அழைக்கின்றனர்; ஆதரிக்கின்றனர். ‘வளர்ச்சியின் நாயகன்’, வருங்கால இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்மாதிரியாக ‘துடிப்பு மிக்க குஜராத்’தை உருவாக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

கணிப்புகள் நம்பகமானவையா?

2014 மக்களவைப் பொதுத் தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது, இந்தக் கணிப்புகள் உண்மையானவையா, நம்பத் தகுந்தவையா என்ற சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கணிப்புகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. அப்படியிருந்தும் வாக்காளர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர், எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கேள்விப் பட்டியல் மூலம் ‘எப்படியோ’ கண்டுபிடித்துவிடுகிறார்கள் கணிப்பாளர்கள். கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்றுகூட கணக்குபோட்டுவிடுகிறார்கள்!

16-வது மக்களவைப் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கோ போதுமான அளவு இடங்கள் கிடைக்காது என்று சொல்கிறது ஒரு கணிப்பு. மோடி முகாமுக்கு இந்தக் கணிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மோடி முகாமுக்கு என்ன பயம்?

மக்களவைப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மாநிலக் கட்சிகள் இணைந்து வலுவான ஓரளவுக்கு நிலைத்தன்மையுள்ள கூட்டணியைத் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வரும்; இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும் என்ற அந்தக் கணிப்பின் விளைவுகள் குறித்துதான் மோடி முகாம் கவலை அடைந்திருக்கிறது. “இந்தத் தேர்தல் களத்தில் நாம் முன்கூட்டியே உச்சக்கட்டத்துக்குச் சென்று விட்டோமோ?” என்ற சந்தேகம்கூட சில பாரதிய ஜனதா தளகர்த்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

குஜராத் முதல்வரால் பிரதமராக முடியாது என்ற இந்த நிலைக்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற இந்திய வாக்காளர்கள்தான். ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளாலும் சித்தாந்தங்க ளாலும் வழிநடத்தப்படும் மோடியைப் பற்றி ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் இடைவிடாமல் மேற்கொண்ட பிரச்சாரங்கள், போராட்டங்களின் விளைவே இந்த விழிப்புணர்வு.

‘வளர்ச்சியின் நாயகர்’ பின்கதை என்ன?

2002 பிப்ரவரி மார்ச் மாதங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக புதுப்புது தகவல்கள், சான்றுகள் முளைத்தவண்ணம் உள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சாட்சியம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் 1983-ல் நடைபெற்ற தமிழர் இனப் படுகொலைகளுக்கு இணையானது குஜராத் படுகொலைகள் என்று கருத இடம் உண்டு. கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்கள் திட்டமிட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன; போகிற வழியில் வகுப்புக் கலவரங்கள் தூண்டப்பட்டன; செயல்படாமலிருக்குமாறு காவல் துறைக்கு மாநிலத்தின் உயர் தலைமையிலிருந்தே வாய்மொழி ஆணைகள் சென்றன என்றெல்லாம் கூறுகின்றன வந்துகொண்டிருக்கும் சான்றுகள்.

முஸ்லிம்களுக்குப் ‘பாடம் கற்பிக்க’ கொலை, பாலியல் வன்முறை, சித்திரவதை, சூறையாடலில் ஈடுபட வன்முறைக் கும்பல்களுக்கு பாதுகாப்பும் உதவிகளும் அளிக்கப்பட்டதுடன் அவர்கள் பிடிபடாமல் தப்பிக்கவும் வழி செய்யப்பட்டன என்ற தகவல்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று புகழப்படுபவர் எப்படிப்பட்ட செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்று ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்த நமது பத்திரிகைகள் உண்மைகளை வெளிப்படுத்தி அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஆதரவாளர்கள் ஆயிரம் சொன்னாலும் மோடியும் அவருடைய அரசும் 2002-ல் என்ன செய்தார்கள் என்பதுடன் அவர் பிரிவினையாளர் என்பதையும் கோடிக் கணக்கான மக்களுக்கு அவை தொடர்ந்து நினைவூட்டிவருகின்றன.

பத்திரிகைகளும் மக்கள் இயக்கங்களும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளால், பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆழமான காயம் இன்னமும் ஆறவில்லை என்பதை ஜனநாயக இந்தியாவும் உலகமும் மறக்கவில்லை.

குஜராத் மக்கள்தொகையில் 9% ஆக இருக்கும் முஸ்லிம்கள் இன்னமும் சேரிகள் போன்ற சுகாதாரக் கேடான பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.

2002 சம்பவங்களுக்கு யார் முழுப் பொறுப்பு என்பதை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். கடந்த 25ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வகுப்புக் கலவரத்தில் முதல்வரும் அவருடைய அரசும் ஆற்றிய பங்கும் அதற்குப் பிறகு நீதி கிடைத்துவிடாமல் தடுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகளும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்கள் அறிவார்கள்.

காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளா முஸ்லிம்கள்?

கலவரங்கள் குறித்து ‘வளர்ச்சியின் நாயகன்’ கவலைப்படவில்லை என்பதும் கலவரங்களைத் தடுக்கத் தவறியதற்காக ‘வளர்ச்சியின் நாயகன்’ இன்னமும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை என்பதையும் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்கள் அறிவார்கள். “காரை ஒருவர் ஓட்டிச்செல்லும்போது பாதையில் ஒரு நாய்க்குட்டி காரில் சிக்கி அடிபட்டால், அந்த காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு மனவருத்தம் இருக்காதா என்ன? - மன வருத்தம் இருக்கத்தான் இருக்கும்” என்று தன் நிலைகுறித்து விளக்கம் அளித்தார் ‘வளர்ச்சியின் நாயகன்’.

சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தார்மிகரீதியாகவும் 2002 வகுப்புக் கலவரங்கள் எதிர்காலத்திலும் எளிதில் மறைந்துவிடாது. மோடி பிரதமரானால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை முற்றி மேலும் சிக்கலாகவே மாறும். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், சில மாநிலக் கட்சிகள் மட்டும் மோடியை எதிர்க்கவில்லை; பாரதிய ஜனதாவின் தோழமைக் கட்சியாகவே பிகார் ஆட்சியில் இருந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் இந்த ஒரு காரணத்துக்காகவே கூட்டணியை விட்டு விலகியது. மோடி பிரதமராவதை ஏற்கவே முடியாது என்றது.

“மோடி என்ற தனிநபர் மீது வெறுப்போ கோபமோ இல்லை; அவர் அமல்படுத்த விரும்பும் கொள்கைகள், அவருடைய கண்ணோட்டம் ஆகியவற்றை ஏற்க முடியாமல்தான் எதிர்க்கிறோம்” என்றுதான் எதிர்ப்பவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள்.

இந்தியாவில் அவருக்கு எதிரான அரசியல் எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கிறது சர்வதேச அரங்கில் அவருக்கிருக்கும் மற்றவர் பொறாமைப்பட முடியாத ‘வேண்டப்படாதவர்’ அந்தஸ்து.

பன்னாட்டு நிறுவனங்கள் தன்னுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய சிவப்புக்கம்பளம் விரிக்கும் முதலமைச்சர் என்ற சிறப்பு இருந்தபோதிலும் அவரைத் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்க விசா தர முடியாது என்று அமெரிக்கா 2005-ல் மறுத்துவிட்டது. மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அல்லது அதற்குக் காரணமானவர்கள் என்று கருதப்படுவோருக்கு விசா தருவதில்லை என்ற சட்டப்பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



1984-ம் 2002-ம்

1984-ல் தில்லியில் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்; 2002-ல் குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இவ்விரு சம்பவங்களிலும் பத்திரிகைகளும் போலி மதச்சார்பின்மைவாத அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுவதாக சங்கப் பரிவார பத்திரிகைத் தொடர்பாளர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். ஓர் இனப் படுகொலைக்கு இன்னோர் இனப் படுகொலை சமமாகிவிடும் என்று சொல்வதே குமட்டுகிறது. ஒரு வாதத்துக்காக இதை ஏற்றாலும்கூட சீக்கியர்கள் படுகொலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு அவர் பொறுப்பில்லை என்றாலும்- நாடாளுமன்றத்தில் 2005 ஆகஸ்ட் 12-ல் மன்னிப்பு கேட்டார் (மன்னிப்புதான் கேட்டார்; கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு முழுத் தண்டனை பெற்றுத்தரவில்லை, சமரச நடவடிக்கைகளும் போதாது என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் அது தார்மிக ரீதியான ஒரு செயல், அரசியல் ரீதியான ஒரு சமிக்ஞை). ஆனால், மோடி என்ன செய்தார்? 2002 கலவரம் தொடர்பாக அவர் இதுவரை நேரடியாக நாட்டு மக்களிடம் வருத்தமும் தெரிவிக்கவில்லை, கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பும் கோரவில்லை.

இதில்தான் அவருடைய சித்தாந்தரீதியான அரசியல் உத்தி அடங்கி இருக்கிறது. சங்கப் பரிவாரங்களின் வகுப்புவாதச் சித்தாந்தத்துக்கு இரைபோடும் உத்தி. பத்தாண்டுகளாகப் பரிவாரங்களுக்குள் ஏற்பட்ட சித்தாந்தக் குழப்பம், அரசியல் குழப்பம் ஆகியவற்றுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கிறது. நாட்டை ஆளவும் மக்களை ஒன்றுதிரட்டவும் இந்துத்துவக் கொள்கைகளே இனி மையமாக இருக்க வேண்டும் என்பதே அது.



கண்ணை நம்பாதீர்

இந்தியப் பெருநிறுவனங்களின் கண்ணை ‘வளர்ச்சி நாயகன்’ கோஷம் மறைத்துவிட்டது. காங்கிரஸின் கொள்கைகளால் வெறுத்துப்போன வாக்காளர்களுக்கும் இந்த கோஷம் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சங்கப் பரிவாரங்களின் கொள்கைகள் என்னவோ விட்டுத்தர முடியாத இந்துத்துவா, நாட்டு மக்களைப் பிளவாடும் செயல்திட்டங்கள், அடையாளங்கள், பிரச்சாரங்கள் ராம ஜன்மபூமியும் அதில் ஒன்று ஆகியவை இணைந்த அடிப்படைவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எங்கே, மக்கள் எவரும் எவரை விடவும் தாழ்ந்தவர் இல்லை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அடிப்படையாக இருப்பதுடன், கொள்கை அளவில் மட்டும் அல்லாமல், நடைமுறையிலும் அது கடைப் பிடிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுகிறதோ, அந்த மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு, மோடி பிரதமராவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x