Last Updated : 07 Nov, 2013 12:00 AM

 

Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

காம்யு: ஒரு நூற்றாண்டின் நினைவு

எந்த ஓர் எழுத்தாளரும் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், தன் தொழிலின் உன்னதத்துக்கு அடித்தளமான இரண்டு பொறுப்புகளை அதாவது, உண்மைக்கும் சுதந்திரத்துக்கும் மட்டுமே சேவைசெய்வது என்ற பொறுப்புகளை - கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருடைய எழுத்தை ஏற்றுக்கொள்ளும் துடிப்புள்ள ஒரு சமூகத்தை அவருடைய வாழ்நாளிலேயே அவரால் காண முடியும்.

- ஆல்பெர் காம்யு, நோபல் பரிசு ஏற்புரை, 10 டிசம்பர் 1957.

ஆல்பெர் காம்யு 1913-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் தேதி அல்ஜீரியாவின் மோன்தோவி என்ற ஊரில் தன் பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை வைன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஊழியர். 1914-ம் ஆண்டு, முதல் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்டு வடக்கு பிரான்ஸில் தன்னுடைய 29-வது வயதில் இறந்தார். ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் தன் அண்ணனுடன் காம்யுவின் இளமைப் பருவம் கழிந்தது. ஐந்து முதல் பத்து வயது வரை நகராட்சி தொடக்கப் பள்ளியில் இலவசக் கல்வி. இவருடைய ஆசிரியர் லூயி ழெர்மென் முதல் உலகப் போரில் ராணுவ சேவை செய்தவர். சிறுவன் காம்யுவின் அறிவாற்றலையும் நற்பண்புகளையும் இனம் கண்டுகொண்டு, ஊக்கமும் உதவியும் அளித்து அவனை முன்னேறச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. நோபல் பரிசு கிடைத்தவுடனேயே, தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்காகத் தன்னு டைய தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து, ஆல்பெர் காம்யு எழுதிய கடிதம் இன்று வரலாற்றுப் புகழ் பெற்றுவிட்டது.

செல்வாக்கும் விமர்சனங்களும்

1938-லிருந்தே காம்யுவின் எழுத்துகள் வெளியிடப்பட்டாலும், 1942-ல் வெளியிடப் பட்ட ‘அந்நியன்’தான் முதல்முதலாக உலகத்தின் கவனத்தை காம்யுவின் பக்கம் திருப்பியது. அப்போது அவருக்கு வயது 29. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அடுத்தடுத்து வந்த புத்தகங்களால் அவருடைய செல்வாக்கும் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே போனது, பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. 1951-ல் வெளியான ‘கிளர்ச்சியாளன்’என்ற தத்துவச் சிந்தனை நூல் காம்யுவுக்கும் ழான் போல் சார்த்ருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பிரெஞ்சு காலனியான அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டம் குறித்த காம்யுவின் அரசியல் நிலைப்பாடு, வலது சாரி, இடது சாரி என்ற இரு தரப்பிலும் கடுமையான விமர்ச னத்துக்கு உள்ளானது. இந்தச் சூழலில்தான் 1957-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காம்யுவுக்குக் கிடைத்தது. அவருடைய சிந்தனைப் போக்கின் நுணுக்கங்களும், தொலைநோக்குப் பார்வையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாததால் மனமுடைந்த காம்யு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மௌனமாகவே இருந்தார். 1960 ஜனவரி 4-ம் தேதி சாலை விபத்தொன்றில் அவர் இறந்தார்.

முற்றுப்பெறாத ‘முதல் மனிதன்’

விபத்து நடந்த இடத்திலிருந்த அவ ருடைய தோள் பையில் ஒரு கையெழுத்துப் பிரதி இருந்தது. அது காம்யு அப்போது எழுதிக்கொண்டிருந்த, முற்றுப்பெறாத, ‘முதல் மனிதன்’ நாவலின் கையெழுத்துப் பிரதி. காம்யு இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய மகள் காதரினும் சில நண்பர்களும் சேர்ந்து, அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகளுடன் இந்த நாவலை வெளியிட்டார்கள். முதல் வாரத்தி லேயே 50,000 பிரதிகள் விற்றுச் சாதனை படைத்த அந்த நாவல், இப்போது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (காம்யுவின் இந்தப் பிறந்த நூற்றாண்டில் இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘க்ரியா’பதிப்பகத்தில் வெளி வருகிறது).

தந்தையைவிட மூத்தவன்

போரில் இறந்த தந்தையின் கல்லறையைத் தன்னுடைய 40-வது வயதில் காம்யு பார்த்தார். அந்தக் கல்லறைக்கு அவர் சென்றது அதுவே முதல் முறை. இறந்தபோது அவருடைய தந்தைக்கு 29 வயதுதான் என்பதால், தன்னுடைய 40-வது வயதில் அங்கு சென்ற காம்யு, தன்னைவிட இளையவரான தந்தைக்கு முன் தான் நிற்பதைப் போன்ற விநோதமான எண்ணத்தால் ஆட்கொள்ளப்படுகிறார். அப்போது அவர் மனதில் உதயமான எண்ணம் ‘காலத்தின் ஒழுங்கை நிலைகுலையச் செய்கிறது’.

தன்னுடைய தந்தையைத் தேடத் தொடங்கி, காலத்தில் பின்நோக்கிச் சென்று, 1848-ல் முதல் பிரெஞ்சுக் குடியேறிகள் அல்ஜீரியாவுக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்து, அல்ஜீரிய பிரெஞ்சு மக்களின் வரலாறு, தன்னுடைய குழந்தைப் பருவம், படிப்பறிவற்றவர்கள் குடும்பத்தி லிருந்து வந்த தனக்குக் கல்வியையும் நற்பண்புகளையும் புகட்டிய ஆசிரியர், ஏழ்மை கற்றுக்கொடுத்த மதிப்பீடுகள், இயற்கை அளித்த இன்பங்கள் இவற்றினூடாக உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதப்பட்டதே ‘முதல் மனிதன்’.

காம்யு நோபல் பரிசு பெற்றபோது தன்னுடைய படைப்புகளை மூன்று தளத்தில் தான் பார்ப்பதாகச் சொன்னார்:

“முதலில் அபத்தம். இதை மூன்று வடிவங்களில் எழுதினேன்: ‘அந்நியன்’ (நாவல்), ‘காலிகுலா’, ‘விபரீத விளையாட்டு’ (நாடகங்கள்), ‘சிசிஃபின் புராணம்’(தத்துவக் கட்டுரை). அடுத்து கிளர்ச்சி. அதன் மூன்று வடிவங்கள்: ‘கொள்ளை நோய்’(நாவல்), ‘முற்றுகை’, ‘நியாயவாதிகள்’ (நாடகம்), ‘கிளர்ச்சியாளன்’ (தத்துவக் கட்டுரை). அடுத்தது நேசம். இந்தக் கருவை அடிப்படையாகக்கொண்டு என் எழுத்து களை ஏற்கெனவே மனதில் வடிக்கத் தொடங்கியிருந்தேன்.”

நேசத்தின் வலிமை

இரண்டாம் உலகப் போரை அடுத்து வந்த மேற்கத்திய இலக்கியத்தில் வாழ்வின் வெறுமையைப் பற்றியும், தற்கொலைகளைப் பற்றியும் அதிகம் பேசப்பட்டது. காரண காரியரீதியாக உலகைப் புரிந்துகொள்ள விழைந்த மனிதனுக்கு விளக்கங்களை அளிக்காத உலகத்தின் மறுப்பு - அபத்தம். உலகத்தின் இந்த விரோத மனப்பான்மையை எதிர்கொண்ட மனிதனின் மறுப்பு - கிளர்ச்சி. இந்த இரண்டு எதிர்மறையான போக்குகளுமே மனித குலத்தை அழிவுக்கு இட்டுச்செல்கின்றன என்ற தெளிவான பிரக்ஞையுடன், இவை இரண்டுக்கும் அப்பால் சென்று சவாலை மேற்கொள்ள மனிதனிடம் இருக்கும் சக்தி நேசம் என்பதில் காம்யு ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

காதல், பக்தி, அன்பு, நட்பு, பரிவு, விருப்பம், பாசம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கிய சொல்லாக ‘நேசம்’என்ற சொல்லை அவர் கையாள்கிறார். “நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்” என்று 1950-ல் எழுதினார் காம்யு.

20-ம் நூற்றாண்டை ‘பயங்களின் நூற்றாண்டு’ என்று 1946-லேயே காம்யு குறிப்பிட்டார். வரலாற்றின் பெயரால் போரின் அவலம், வதை முகாம்களின் கொடுமை, சித்தாந்தங்களின் வன்முறை இவற்றை நியாயப்படுத்த மறுத்தார். அவருடைய தொலைநோக்குப் பார்வை இன்று அவருடைய நிலைப்பாட்டை நியாயப் படுத்துகிறது.

எழுத்தாளர் என்பவர் ஒரு கலைஞர்

எழுத்தாளரை ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவார் காம்யு. இலக்கியத்தில் காம்யுவின் பன்முக ஆற்றல் மற்றொரு முக்கிய அம்சம்: “என்னுடைய அடுத்தடுத்த புத்தகங்களில் வெவ்வேறு விதமான அழகியலையும் நடையையும் கையாண்டிருக்கிறேன். கலைஞன் என்ற முறையில் என்னுடைய தவறுகளும், போதிய திறமை இல்லாததும் எனக்குத் தடைகளாக இருப்பதைச் சில சமயம் நான் உணர்ந்தாலும், அழகியல் உணர்வில் எந்தக் குறையும் இல்லாததையும் உணர்கிறேன். வெவ்வேறு வடிவங்களைக் கலக்காமல் இருப்பதற்காக வெவ்வேறு தளங்களில் எழுதுகிறேன். ஆகவே, செயல்களின் மொழியில் நாடகங்களையும், பகுத்தறிவு வாதரீதியில் கட்டுரைகளையும், மனித இதயத்தின் புரிபடாத ரகசியங்களில் நாவலையும் எழுதினேன்” என்று தன்னுடைய இறுதி நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

இள வயதில் காசநோயில் ஆரம்பித்துப் பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டாலும் வாழ்க்கையைத் தீவிரமாக நேசித்தவர் காம்யு. வாழ்க்கையின் ஒவ்வோர் அனுபவமும் ஏதோ ஓர் உண்மையைத் தெரிவிக்கிறது என்பதை இலக்கிய நயத்துடன் பதிவுசெய்தார். சிறு வயதிலிருந்தே கால் பந்தாட்டத்தில் தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த காம்யு, அது இவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்று அவர் சொன்னது: “எந்தத் திசையிலிருந்து பந்து வரும் என்று எல்லா சமயங்களிலுமே சொல்ல முடியாது.”

ஒழுக்கநெறியையும் மனிதனின் கடமைகளையும் விளையாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். “என்னுடைய அணியை நான் மிகவும் நேசித்தேன். முயற்சியையும் அடுத்து வரும் களைப்பையும் இவ்வளவு அற்புதமாக ஒன்று சேர்க்கும் வெற்றியின் மகிழ்ச்சிக்காகவும், தோற்றுவிட்ட மாலை நேரங்களில் அழ வேண்டும் என்ற அசட்டுத்தனமான ஆசைக்காகவும்.”

வெ. ஸ்ரீராம், காம்யுவை பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர், இருமுறை செவாலியெ விருது பெற்றவர். - தொடர்புக்கு: ramcamus@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x