Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM

பேசித் தீர்க்கலாம் வா!

மக்கள் படை என்றும் கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை என்றும் பொதுவில் சொல்லப்பட்டாலும் FARC என்றால் கொக்கெயின் கோஷ்டி என்றுதான் கொலம்பியாவுக்கு வெளியே உலகம் அறியும். ஒரு பக்கம் கொலம்பிய அரசுக்கு எதிரான நீடித்த யுத்தம். மறுபக்கம், யுத்தத்தைத் தடையின்றி நடத்துவதற்குத் தோதாக போதைப் பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்குத்துகள். கடந்த ஐம்பதாண்டுகளாக போதை வர்த்தகத்தால் நாசமாய்ப் போன கொலம்பியா இன்றைக்கு இந்தப் பெரும் பிரச்னையில் இருந்து விடுபட துணிச்சலாக ஒரு படி எடுத்து வைத்திருக்கிறது.

FARC உடன் அமைதிப் பேச்சு. ஐந்து அம்சச் செயல்திட்டம். ஆட்சியில் பங்கு. அரசியலுக்கு வந்து விடுங்களேன்? முன்னோர்கள் செய்யாததா? ஒரு பாப்லோ எஸ்கோபர் எம்பி ஆக முடிந்ததென்றால் நீங்கள் ஏன் தேர்தலில் நின்று ஜனநாயகம் வளர்க்கக் கூடாது? கொக்கோ வளர்ப்பதைக் காட்டிலும் அது எளிதானது. சுலபமானது. தவிரவும் பாதுகாப்பானது. கொகெயினைக் காட்டிலும் போதை தரக்கூடியதும்கூட.

பேச்சுவார்த்தைகள் கணிசமாக முன்னேறி யிருப்பதாகக் கொலம்பிய போலீஸின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுத் தலைவர் ரிக்கார்டோ ரெஸ்ட்ரெப்போ சந்தோஷப்பட்டிருக்கிறார். FARC மனம் வைத்தால் ஒரு வாரம் போதும். கொலம்பியாவெங்கும் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போதை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு மங்களம் பாடிவிட முடியும்.

ஆனால் அதெப்படி? எளிதில் விளை யும் பயிர். பெரிய மெனக்கெடல்கள் அவசிய மில்லை. தோட்டங்களின் ஓரத்தில் சிறு குடிசைகள் போட்டு தொழிற்கேந்திரமாக்கினால் போதுமானது. கணப் பொழுதில் ஏற்றுமதிச் சரக்கு ரெடியாகிவிடும்.

என்ன காசு! எத்தனை பெரிய பிசினஸ்! மார்க்சிய-லெனினிய சித்தாந்த அடிப்படையில் கொலம்பிய அரசுக்கு எதிராக யுத்தம் புரியவேண்டுமானாலும் இத்தனை பெரிய பிசினஸ் பின்னணி இருந்துதான் தீரவேண்டும்.

கொலம்பிய போதைக் கூட்டமைப்புகள் பலவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசுக்கும் மக்களுக்கும் தண்ணி காட்டிக்கொண்டிருக்கும் FARC இப்போது பேச்சுவார்த்தைக்கு முன் வந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம். ஓரளவு சமரசத்துக்கு ஒப்புக்கொண்டு போதை உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் தாற்காலிகத் தடை ஏற்படு மானால்கூட அது கொலம்பிய அரசுக்கு மாபெரும் வெற்றியே.

ஏனெனில் மேற்படி நீடித்த யுத்தத்தில் இதுகாறும் குறைந்தது இரண்டு லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கொலம்பிய அதிபர் யான் மனுவல் சாண்டோஸ் சொல்கிறார். FARC இதனைக் கடுமையாக மறுத்தாலும் கொலம்பிய போதை மாஃபியாக்களுக்கும் போராளிக் குழுக்களுக்குமான நெருக்கமான உறவின் காரணமாகத்தான் அமெரிக்க ராணுவமே கொலம்பிய அரசுக்கு உதவியாக வரிந்து கட்டிக்கொண்டு வந்து இறங்கினாலும் இதுவரை ஒரு புல்லைக் கூடப் பெயர்த்தெடுக்க முடியாதிருக்கிறது.

ஆனால் கேட்டுப் பாருங்கள்? போதை வர்த்தகத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஆத்மசுத்தியுடன் சொல்லிவிடுவார்கள். நடந்துகொண்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் இதே திருப்பல்லாண்டுதான் தினசரி பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்தையும் மீறி இந்தப் பேச்சு வார்த்தைகளின் முடிவில் உருப்படியாகச் சில ஒப்பந்தங்கள் ஏற்படும் என்று கொலம்பிய அரசும் மக்களும் தீவிரமாக நம்புகிறார்கள். அது அவசியமென்றும் கருதுகிறார்கள். கொலம்பிய விளைநிலங்களில் பெரும்பாலான ஏக்கர்களில் கோக்கோ பயிராவது பிரச்னை இல்லை. அது சாக்லெட்டானால் அரசுக்கும் மக்களுக்கும் நல்லது. கொகெயினாகும்போதுதான் சிக்கலே. கொலம்பியாவிலேயே இன்றைக்கு ஒரு கிலோ கொகெயினின் விலை எட்டாயிரம் டாலர் ( சுமார் ரூ. 5 லட்சம்). எல்லை கடந்து மெக்சிகோவுக்குப் போகும்போது இது பதினைந்தாயிரம் டாலராகி, அமெரிக்காவுக்குள் நுழையும்போது முப்பத்தைந்தாயிரம் டாலராகவும் ஐரோப்பிய தேசங்களில் இதுவே 40-42 ஆயிரம் டாலருக்கும் ( சுமார் ரூ. 26 லட்சம்) விலை போகிறது.

ஒரு கிலோவுக்கு இத்தனை. ஆண்டுக்கு எத்தனை ஆயிரம் கிலோக்கள், எவ்வளவு பெரிய பிசினஸ், எப்பேர்ப்பட்ட பணம்! அத்தனையும் ஆயுதமாக மாறி தேசத்தின் அமைதிக்கு வேட்டு வைப்பதுதான் அரை நூற்றாண்டுக் காலப் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்த அமைதிப் பேச்சு இதற்கொரு தீர்வு காண உதவுமா என்பதே கொலம்பியர்களின் இன்றைய முதன்மையான எதிர்பார்ப்பு. கொலம்பியர்களைக் காட்டிலும் இது விஷயத்தில் அமெரிக்கா மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறது. ஏனெனில் கொலம்பிய போதை வர்த்தகத்தால் சர்வநாசமாகிப் போகும் தேசங்களில் முதலிடத்தில் இருப்பது அதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x