Published : 03 Jun 2017 09:38 AM
Last Updated : 03 Jun 2017 09:38 AM

மாற்றுக்கட்சியினர் பார்வையில் கருணாநிதி

எல்லோர் குரலுக்கும் மதிப்பளிப்பவர்!

ஹெச்.வி.ஹண்டே:

சட்ட சபையில் கடுமையாக, காட்டமாகப் பேசினால்கூட வாய்ப்பு மறுக்கப்படும் சூழலை உருவாக்க மாட்டார் கருணாநிதி. 1970-ல் ஒருமுறை நான் பேசும்போது, “உங்கள் ஆட்சி பாஸிஸ்ட் ஆட்சி” என்றேன். அதை கருணாநிதி “பாசயிஸம்” என்று திருத்தினார். அதேபோல, “இது மூன்றாம் தரமான ஆட்சி” என்று நான் சொன்னதாகக் கூறிவிட்டு, “இது நான்காம் தரமான - சூத்திரர் ஆட்சி” என்றார் இன்னொரு முறை. இதெல்லாம் அவருக்கே உரிய சாமர்த்தியம். ஆனால், ஜனநாயகமும் இதில் இருக்கிறது! எங்கள் கட்சிக்காரர் பரமசிவனை - பின்னாளில் அமைச்சராக இருந்தவர் - போலீஸார் தாக்கிவிட்டார்கள். இது எம்ஜிஆர் காதுக்கு வந்தது. சட்ட சபையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரக் கொண்டுவரச் சொன்னார் எம்ஜிஆர். இதையறிந்த கருணாநிதி என்னை அழைத்தார். விஷயத்தைக் கேட்டவர், “ஒத்திவைப்புத் தீர்மானம் எதற்கு? விஷயம் உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார். கையோடு, ஐஜி அருளை அழைத்தார். விசாரித்தார். விஷயம் உண்மை என்றார் அருள். ‘உடனே இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்யுங்கள்’ என்றார் கருணாநிதி. அப்புறம் நான் எம்ஜிஆரைச் சந்தித்தேன். “கருணாநிதியிடம் எனக்குப் பிடித்த விஷயம், பல சமயங்களில் எதிர்க்கட்சிக்காரன் என்று யாரையும் அவர் உதாசீனப்படுத்துவதில்லை!” என்றார். ஜனநாயகம் என்பது அதுதானே!

- ஹெச்.வி.ஹண்டே, அதிமுக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

மிகச் சிறந்த ஜனநாயகவாதி!

பீட்டர் அல்போன்ஸ்:

சட்ட மன்றம் கூடும் நாட்களில் காலை 8.50 மணிக்கு சபாநாயகர் அறையில் அமர்ந்திருப்பார். ‘பூஜ்ய நேரம்’ என்று சொல்லப்படும் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்ப நினைக்கின்ற பிரச்சினைகள், ஒத்திவைப்பு தீர்மானங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் என்று அத்தனை கோரிக்கைகளையும் கூடுமானவரை ஏற்றுக்கொள்வார். அப்படிப் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் செயலாளரையும் அவரே நேரில் அழைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணச் சொல்வார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்ததும் அதனை அவரே சட்ட மன்றத்தில் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினரின் பெயரைச் சொல்லி, அவர் வைத்த கோரிக்கை என்று எடுத்துச் சொல்லி அந்த சட்டமன்ற உறுப்பினரின் பணிகளை அங்கீகாரம் செய்வார். காலையில் சட்டமன்றத்திற்கு வந்த உடன் சபாநாயகரிடம் அன்றைய தினம் விவாதத்தில் பங்கேற்கின்ற உறுப்பினர்களின் பட்டியலைப் பார்ப்பார். தகுந்த தயாரிப்புடன், பயனுள்ள விவாதங்களை முன்வைக்கின்ற உறுப்பினர்களின் பெயரை எதிர்க்கட்சியின் வரிசையில் பார்த்தால், ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரை நீக்கிவிட்டு அந்த நேரத்தையும், அந்த எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கச் சொல்வார். . நம் காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த ஜனநாயகவாதி அவர். நீடூழி அவர் வாழ வேண்டும்!

- பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கொறடா, சட்ட மன்ற உறுப்பினர்

இந்துத்வத்தைப் பற்றியும் பேச அனுமதித்தவர்!

வேலாயுதன்:

1996. பத்மநாபபுரத்தில் வென்றேன். அதுவரை தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏகூட கிடையாது. என்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார் கருணாநிதி. சட்ட மன்றத்தில் அலுவல் ஆய்வுக் குழுவிலும் எனக்கு இடம் கொடுத்தார். இந்தக் கூட்டம் 10 மணி நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும், தாமதமாகத்தான் தொடங்கும். “மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாமே இப்படி இருக்கலாமா?” என்று கேட்டுவிட்டேன். எல்லோருக்கும் அதிர்ச்சி. கருணாநிதி கோபப்படாமல், “நான் 10 மணிக்கே வந்துவிட்டேன். அனைவரும் வரும் வரை என் அறையில் இருந்தேன்” என்றார் அமைதியாக. அதன் பிறகு கூட்டம் சரியான நேரத்தில் நடத்தப்படுவதை உறுதிசெய்தார். நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது அவருக்குத் தெரியும்.

ஒருமுறை இந்துத்வத்தின் சிறப்பைப் பற்றி சட்ட மன்றத்தில் பேசினேன். பலரும் குறுக்கிட்டனர். கருணாநிதி அவர்களைத் தடுத்தார். நீண்ட நேரம் குறுக்கீடு இன்றி பேச வழிவகுத்தார். ஜனநாயகவாதி அவர். குமரி இணைப்புக்குப் பாடுபட்ட 172 தியாகிகளுக்கான ஓய்வூதியம், மாம்பழத் துறையாறு அணை என என் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றினார். 1998-ல் நான் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது, மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பண்பட்ட மனிதர். நூறாண்டு காலம் அவர் வாழ வேண்டும்!

- வேலாயுதன், பாஜக, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

வகுப்புவாதிகளின் கொடுங்கனவு!

ரவிகுமார்:

2006 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதி உறுப்பினராக சட்ட மன்றத்தில் நுழைந்தேன். நான் முன்வைத்து அவர் நிறைவேற்றிய கோரிக்கைகளையே பெரிய பட்டியலிடலாம். நரிக் குறவர், திருநங்கைகள், புதிரை வண்ணார் உள்ளிட்ட ஆறு நல வாரியங்கள் எனது கோரிக்கையின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டன. ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த பணக் கொடையை இரு மடங்காக உயர்த்தினார். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் செய்யாத வகையில் மின்னணுக் கழிவுக் கொள்கையை உருவாக்கினார். 22 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கான 'கலைஞர் வீடு வழங்கும் திட்ட'த்தை அறிவித்தார். ஒரு ஆலோசனையை எவர் சொன்னாலும் அது மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் அவர் சார்ந்திருக்கும் கட்சி எது என்று பார்க்காமல் அதை நிறைவேற்றத் தயங்காதவர் கருணாநிதி என்று உணர்த்துவதற்காகத்தான். அதுதான் அவரைத் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர்களில் ஒருவராக மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் ஆக்கியிருக்கிறது. சமூகப் பாகுபாட்டின் வலி என்னவென்று ஆழமாக உணர்ந்தவர் அவர். அதனால்தான், வகுப்புவாதிகளுக்கு அவர் இப்போதும் ஒரு கொடுங்கனவாகவே திகழ்கிறார்! நூறாண்டு காலம் அவர் வாழ வேண்டும்!

- ரவிகுமார், விசிக, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

போராட்டக்காரர்களிடமே செல்பேசியில் பேசியவர்!

பாலபாரதி:

சட்ட மன்றத்தில் மட்டும் அல்ல; வெளியிலும் அவரைச் சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசலாம். மன்றத்தில் கோபமாக விவாதிக்கிறோம் என்பதால், வெளியே பகைமை காட்டுகிறவர் அல்ல அவர். 2006 சட்ட மன்றம். அந்தச் சமயத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை அறிவித்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினரை அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து மறியலில் ஈடுபட்டோம். போலீஸார் கைதுசெய்தனர். முதல்வர் கருணாநிதி நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செல்பேசி மூலம் எங்களைத் தொடர்புகொண்டு, “உங்களது கோரிக்கைகள் என்ன?” என்று கேட்டார். “முறைகேடுகள் உள்ளதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்றோம். உடனடியாக உத்தரவிடுவதாகச் சொன்னவர், எங்களை விடுவிக்கவும் உத்தரவிட்டார். எதிர்க்கட்சியினரிடம் செல்பேசியில் இப்படி நேரடியாகப் பேசும் நிலையில் இருந்தார். அருந்ததியர் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றோம். நிறைவேற்றினார். பெண்கள் ஆணையத்துக்கான சட்ட அந்தஸ்து அவரால்தான் கிடைத்தது!

-பாலபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

ஒரு ஆட்டோ செலவில் வந்தது கல்லூரி!

கே.சுப்பராயன்:

1996. திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டேன். உள்நாட்டு பனியன் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த விற்பனை வரியை நீக்க வேண்டும் என்று பேசினேன். உடனடியாக நிறைவேற்றினார். திருப்பூரில் பெண்கள் கல்லூரி தொடங்க கிறிஸ்தவ சிறுபான்மையினர் அரசிடம் மனு அளித்து முயற்சி மேற்கொண்டனர். வட்டத்துக்கு 45 கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அது சாத்தியமாகவில்லை. இதுதொடர்பாக என்னைச் சந்தித்த இருவரை மட்டும் ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றேன். கிராமப்புற பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள், சிறுபான்மையினர் நடத்துகிறார்கள் என்றேன். கோரிக்கை உடனடியாக நிறைவேறியது. ஆட்டோவில் சென்றது மட்டும்தான் அதற்கு ஆன செலவு! பல சம்பவங்களைச் சொல்லலாம். சேர்ந்து பணியாற்ற அருமையான மனிதர் அவர்!

- கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

தொகுப்பு: சாரி, சந்துரு, புவி, சிவசு, ஆர்.கிருஷ்ணகுமார், எம்.சரவணன், டி.செல்வகுமார், என்.சுவாமிநாதன், ஆர்.கார்த்திகேயன். | வடிவமைப்பு: எஸ்.சண்முகம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x