Last Updated : 04 May, 2017 09:28 AM

 

Published : 04 May 2017 09:28 AM
Last Updated : 04 May 2017 09:28 AM

மின் உற்பத்தி: தெலங்கானா காட்டும் பாதை!

ஆந்திரத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா இன்றைய தேதிக்கு, மின்உற்பத்தித் திறனைக் கூட்டியும், மின்மிகை மாநிலங்களிலிருந்து தேவைக்குக் கொள்முதல் செய்தும் மின்வெட்டே இல்லாத மாநிலமாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடுமையான இந்தக் கோடையில் உச்சபட்ச மின் தேவை 10,000 மெகாவாட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

தெலங்கானா உருவான 2014 ஜூனில் மின்உற்பத்தித் திறன் 6,574 மெகாவாட், பற்றாக்குறை 2,000 மெகாவாட். இந்நிலையில், கடந்த 33 மாதங்களில் 4,190 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு மேலும் 4,130 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் சேர்க்கப்படவிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

மத்திய அரசின் உதவியும் மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் உரிய நேரத்தில் எடுத்த முடிவுகளும் மின்வாரியத்துறையின் அர்ப்பணிப்பு உணர்வும் இந்தச் சாதனைக்குக் காரணம் என்கிறார் தெலங்கானா டிரான்ஸ்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான டி. பிரபாகர ராவ். 2014-ல் மின் கொள்முதலை அதிகப்படுத்த மாநிலம் விரும்பியபோதும் மின்சாரத்தைக் கொண்டுவருவதற்கான மின்தடப் பாதை மற்றவர்களால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வார்தா என்ற பகுதியிலிருந்து மகேஸ்வரம் பகுதிக்கு உயர் அழுத்த மின்வடப் பாதை உருவாக்கப்பட்டது. திட்டமிட்ட நாளைவிட முன்னதாகவே இப்பணி முடிந்தது. இதனால் எந்த மாநிலத்திடமிருந்தும் மின்சாரத்தை வாங்க முடிந்தது.

2016-17-ல் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.51-க்கு விற்கப்பட்டது. 2017-18-ல் இது ரூ.4.45 ஆக இருக்கும். இந்நிலையில், மாநில மின்சார நெறியாளரோ ஒரு யூனிட் ரூ.3.90 விலையில் வெளியிலிருந்து வாங்க விலை நிர்ணயித்தார். இதுவே லாபகர விலை என்று பிற மாநிலங்கள் விற்கின்றன.

2013-14-ல் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை காரணமாகத் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. நெரிசல் நேரத்தில் (பீக் அவர்) மின்சாரம் வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்சப்ளை நிறுத்தப்பட்டது. விவசாயத்துக்கு ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மின்சாரம் தரப்படும் என்று அறிவித்திருந்தாலும் எந்த நேரம் மின்சாரம் வரும் என்று சொல்ல முடியாத நிலை நிலவியது.

தெலங்கானா உதயமானது முதல் தொழில்துறை, விவசாயம், வீடுகள் என்று எவருக்குமே மின்வெட்டு இல்லை. சூரிய ஒளியிலிருந்து இப்போது 1,800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஜூன் 2018-ல் இது 3,800 மெகாவாட்டாக உயரும். தொழில்துறையினர் ஒரு யூனிட் ரூ.5-க்கு மாநில மின்வாரியம் தருவதைத் தவிர்த்துவிட்டு தனியார் உற்பத்தியாளர்களிடம் ரூ.3-க்கு நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்கின்றனர். அடுத்த 3 ஆண்டுகளில் மொத்த மின்உற்பத்தி அளவை 16,306 மெகாவாட்டுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் 3,800 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம். முதல்வர் சந்திரசேகர ராவை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்ற காரணம் இப்போது புரிந்திருக்கும்.

© பிசினஸ் லைன், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x