Last Updated : 03 Jan, 2014 12:00 AM

 

Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

சீனத்தின் ‘லட்சியம்’ எல்லை மீறுகிறது

ஜப்பானியச் சக்கரவர்த்தி அகிஹிடோ புது டெல்லிக்கு வந்ததும், சம்பிரதாயத்தை மீறிய நல்லெண்ண நடவடிக்கையாக பிரதமர் மன்மோகன் சிங்கே அவரை நேரில் சென்று வரவேற்றதும் பெய்ஜிங்கிலும் இதர ஆசிய நாடுகளின் தலைநகரங்களிலும் கவனிக்கப்படாமல் போயிருக்காது.

தன்னுடைய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களையும் தனக்குரிய ‘வான் தற்காப்புப் பகுதியாக’ இதுவரை இருந்திராத வகையில் அறிவித்து, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் இறையாண்மை உரிமைகளுக்கு சீனா சவால்விட்டுக் கொண்டி ருக்கும் நேரத்தில், அகிஹிடோவின் இந்தியப் பயணம் அமைந்திருந்தது. ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் தீவுகளையும் கடல் பாறைகளையும் தனக்குரிய பகுதி என்று சீனா உரிமை கொண்டாடிவருகிறது.

தங்களுடைய ‘வான் தற்காப்புப் பகுதி’யில் பிரவேசிக்கும் சிவில் விமானங்களும் ராணுவ விமானங்களும் தங்கள் நாட்டு விமானப்படை விமானங்களால் பின்தொடரப்பட்டு, சுட்டு வீழ்த்தப்படாமல் இருக்க வேண்டுமானால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அச்சமூட்டும் உரிமைக்கோரல்கள்

ஆண்டுக் கணக்காகத் தங்களுக்குள் பேசி ஆலோசனை நடத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு எடுத்த முடிவுக்கேற்ப இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீன அதிபர் சி ஜின்பிங்கின் தலைமையைக் கேள்விகேட்க எவருமில்லை என்பதை உறுதிப் படுத்துவதுதான் பெய்ஜிங்கில் அண்மையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான் என்கிற கட்டுப்பாடு நீக்கம், தவறு செய்கிறவர்களுக்கான கடின உடலுழைப்பு முகாம்கள் கலைப்பு, வேலை தேடி இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், ஊழல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் இயற்கை வளங்களைத் தொழில்வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் அரசின் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வது என்று பல்வேறு வெகுஜன மயக்கு நடவடிக்கைகள் மாநாட்டில் எடுக்கப்பட்டன.

அவற்றைவிட முக்கியமானது அதிபர் சி தலைமையில், ‘உச்சபட்ச தேசியப் பாதுகாப்பு கமிட்டி’ (Apex National Security Committee) அமைக்கப்பட்டிருப்பதுதான். டெங் சியோபிங் அவருடைய பதவிக்காலத்தில் செயல் பட்டதைப் போல, தேசியப் பாதுகாப்பு தொடர்பானவற்றில் அதிபர் சி ஜின்பிங் செயல்பட இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் சீனா மிகவும் பலம் குறைந்திருந்த சமயத்தில், டெங்குக்கு இந்த அதிகாரம் தேவைப்பட்டது. “வலிமையை மறைத்துக்கொள்ளுங்கள், தகுந்த சமயம் வரும்வரை காத்திருங்கள்” என்ற ஆலோசனையை அவர்தான் சீனத்துக்கு அளித்தார். டெங் சகாப்தம் முடிந்த பிறகு, சீனா இப்போது பொருளாதாரரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பலமாகத் திகழ்கிறது. எனவேதான் பக்கத்து நாடுகளைப் பார்த்து முண்டா தட்டுகிறது.

விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றைத் தன்னுடைய கடற்படையில் புதிதாகச் சேர்த்த பிறகு, பசிபிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் தன்னுடைய எல்லையை விரிவுபடுத்த விரும்புகிறது. தென் சீனக் கடலில் தான் வைத்த ஒன்பது புள்ளிகளை இணைத்துத் தன்னுடைய கடலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது.

வியத்நாமிடமிருந்து பராசெல் தீவுகளை ராணுவ பலத்தைக்கொண்டு கைப்பற்றியது. பிலிப்பைன்ஸ், புரூணை, மலேசியா, தைவான், வியத்நாம் ஆகியவற்றின் எதிர்ப்புகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, ஸ்பிராட்லி தீவுகளும் எங்களுக்கே சொந்தம் என்று உரிமை பாராட்டுகிறது.

ஹைனான் தீவிலிருந்து 590 கிலோமீட்டர் தொலைவிலும் பிலிப்பைன்ஸிலிருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் குறும்புப் பாறையைக் கைப்பற்ற இப்படித்தான் பலத்தின் மூலம் பிடித்துக்கொண்டது.

கடல் பரப்பு, தீவுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்கள் எதையும் சீனா மதிப்பதில்லை. அவற்றுக்குப் புறம்பாகவே அது கடல் பரப்புக்கும் தீவுகளுக்கும் உரிமை கோருகிறது.

சீனத்தின் ‘வான் பாதுகாப்பு எல்லை’ அறிவிப்பை ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகியவை கடுமையாக எதிர்த்துள்ளன. சீனத்தின் அறிவிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்பதைக் காட்ட, தன்னுடைய ‘பி-52’ ரக குண்டுவீச்சு விமானங்களை, ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் சீனா அறிவித்த வான் பாதுகாப்பு எல்லை மீது பறக்கவைத்தது அமெரிக்கா. அதே சமயம், “சீனா அறிவித்துள்ள வான் பாதுகாப்பு எல்லை மீது பறக்கும்போது, எச்சரிக்கையாக இருக்கவும்” என்று தன்னுடைய நாட்டு சிவில் விமானத் துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சீனத்தின் அறிவிப்பை ஏற்க ஜப்பானும் தென் கொரியாவும் மறுத்துவிட்டன. சர்ச்சைக்குரிய செனகாகு தீவுகளுக்கு மேல் பறக்க சீன விமானங்கள் வந்தபோது, ஜப்பானியப் போர் விமானங்கள் உடனடியாக விண்ணில் சீறிப்பாய்ந்து, சீன விமானங்களை எச்சரித்தன.

“லியோடோ என்ற கடலில் மூழ்கிய பாறைப் பகுதியைச் சுற்றியுள்ள கடல்பரப்பு எங்களுடையது தான். சீனா அதைத் தங்களுடைய பகுதி என்று அறிவித்திருப்பதுகுறித்து வருந்துகிறோம், சட்டப்படி அது எங்களுடைய இடம்தான்” என்று தென் கொரியா அறிவித்துள்ளது.

சீனத்தின் இந்த அறிவிப்பால், மஞ்சள் கடலில் மீன்பிடிப்பதில்கூட தென் கொரியாவுக்கும் அதற்கும் மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் டோக்கியோவுக்கும் சியோலுக்கும் சென்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், சீனாவின் அறிவிப்பை எதிர்க்கும் ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்துள்ளார். தங்களுடைய ‘பி-8’ என்கிற பொசைடன் கடல்கண்காணிப்பு விமானத்தை இந்த நோக்கிலேயே ஜப்பானுக்கு அனுப்பிவைத்தது அமெரிக்கா.

செனகாகு தீவுகள் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஜப்பான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் நோக்கம். பசிபிக் பெருங்கடலில் தனக்குத் தடையற்ற உரிமை வேண்டும் என்று சீனா விரும்புகிறது. அதற்காகவே ஜப்பானின் தென்கோடி முனை, தைவானின் கிழக்குக் கடலோரம், தென் சீனக் கடல் ஆகியவற்றில் தனது எல்லைகள் இருப்பதாகக் கூறுகிறது.

அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் கடல்பகுதி கடற்படைத் தளபதி அட்மிரல் டிமோதி கீட்டிங் என்பவர், 2009-ல் இந்திய உயரதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரைச் சந்தித்த சீனக் கடற்படைத் தளபதியொருவர், “நாங்கள் விமானந்தாங்கிக் கப்பலை வாங்கிவிட்டால், பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியையும் இந்தியக் கடலோரப் பகுதியையும் எங்கள் வசம் விட்டுவிட்டு, கிழக்கு பசிபிக் பெருங்கடலை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்று கூறினாராம்.

வலிமையற்ற தற்காப்பு

சீனாவிடமிருந்து ராணுவரீதியான அச்சுறுத்தலைச் சந்திக்கும் ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள் அனைத்தும் தங்களுடைய ராணுவ வலிமையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடு கின்றன. இந்தியாவுடைய தற்காப்பு மிகவும் வலுக்குறைவாக இருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) வெறும் 1.7% மட்டுமே ராணுவத்துக்காகச் செலவிடப்படுகிறது.

இந்தியாவுடனான தனது நிலை எல்லை நெடுகிலும் சீனா தகவல் தொடர்பு கட்டமைப்பு களை அமைத்துவருகிறது. பாகிஸ்தானில் உள்ள கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதியிலும்கூட அது தகவல்தொடர்பு வசதிகளைச் செய்து கொண்டிருக்கிறது. நம்முடைய ராணுவப் படைகளோ சீன அத்துமீறல் குறித்துத் தகவல் கிடைத்தால்கூட எல்லைக்குச் செல்லவே சில நாள்கள் பிடிக்கின்றன.

இந்திய ராணுவத்திடம் மலைப் பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய பீரங்கிகள் மிகக் குறை வாகவே இருக்கின்றன. பல்வேறு பணிகளையும் ஒருங்கே செய்யக்கூடிய விமானங்கள் இந்திய விமானப்படைக்கு மிக அவசரமாகத் தேவைப் படுகின்றன. கடற்படையிடமோ வாங்கி பல ஆண்டுகளான – இப்போதைய போர்த் தொழில் நுட்பங்களுக்கு ஏற்பப் பயன்படுத்த முடியாத பழைய நீர்மூழ்கிக் கப்பல்களே இருக்கின்றன.

நம்முடைய ராணுவத்துக்கு உடனடியாகத் தேவைப்படும் ஆயுதங்களையும் கருவிகளையும் இதர சாதனங்களையும் வாங்க, நரேஷ் சந்திரா என்பவர் தலைமையில் அரசு நியமித்த பணிக்குழு தனது பரிந்துரைகளை வழங்கியே 18 மாதங்கள் (ஒன்றரை ஆண்டுகள்) ஆகிவிட்டன. அரசு அதை இன்னமும் அமல்படுத்தவில்லை. சீனாவின் நடவடிக்கைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம், அவற்றால் ஆபத்து இல்லை என்று வக்காலத்து வாங்கும் அதிகாரிகளுக்கு சௌத் பிளாக்கில் பஞ்சமே இல்லை. லடாக் பகுதியில் சுமார் என்ற இடத்தில் அத்துமீறி நம்முடைய நில எல்லைக்குள் நுழைந்து கொடிநாட்டி உரிமை கொண்டாடிய சீன ராணுவத்தின் செயலைக்கூட, ஒன்றுமில்லை என்று ஒதுக்கித்தள்ளத் தயாராக இருக்கின்றனர்.

இப்படி எல்லைமீறும் சீன நடவடிக்கைகள் சீனத்தையும் இந்தியத் துணைக் கண்டத்தையும் பிரிக்கும் காரகோரம் மலைத்தொடர் பகுதியையும் கடந்துவிட்டன. அத்துடன் நில்லாமல், அருணாசலப் பிரதேசமே எங்களுடையதுதான் என்று மீண்டும் கூறும் அளவுக்குச் சென்றுவிட்டது. அதுவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அருணாசலப் பிரதேசத்துக்குச் சமீபத்தில் சென்றபோது இது நடந்திருக்கிறது.

லடாக் பகுதியில் சீனா அத்துமீறி நுழைவதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பி. ஸ்டோப்டன் என்பவர் வரலாற்று ஆதாரங்களோடு கண்டித்துப் பேசியிருக்கிறார். 1684-ல் எப்படி லடாக் – திபெத் உடன்படிக்கை ஏற்பட்டது, லடாக் – திபெத் எல்லைகள் எப்படி நிர்ணயிக்கப்பட்டன என்று அவர் விளக்கினார். 1956 முதல் சீனம் எப்படி லடாக் பகுதிக்கு உரிமை கோரத் தொடங்கியது என்று அவர் விவரித்தார்.

இந்தியாவுடன் மட்டுமல்ல, பிற மத்திய ஆசிய நாடுகளுடனும் எப்படி சீனா இதே போல நிலப்பகுதியில் உரிமைகேட்டு சண்டை போட்டு வந்தது. பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏதோ சலுகை காட்டுவதைப் போலக் காட்டிக்கொண்டு, ஓரங்குல நிலத்தைக்கூட விட்டுத்தராமல், தனக்கு உரிமையல்லாத பகுதிகளை அது கைப்பற்ற முயலும். முதலில் பெருநிலப்பரப்பைத் தன்னுடையது என்று கூறித் தகராறு செய்யும். பிறகு, பேச்சுக்குப் பிறகு கணிசமான இடத்தை எழுதிவாங்கிக்கொண்டு, ‘இருதரப்புக்கும் பேச்சில் வெற்றி’ என்று அறிவிக்கும். உண்மையில், தனக்கு உரிமையே இல்லாத இடத்தைச் சிறு நாடுகளை அச்சுறுத்திக் கைப்பற்றிவிடும் என்று விளக்கியிருக்கிறார்.

சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, கஸ கஸ்தான் நாட்டுடன் இதே போல எல்லைத் தகராறை சீனா துவக்கியது. தான் கோரிய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை கஸகஸ்தான் விட்டுத்தர சம்மதித்ததும் சமரசம் செய்துகொள்வது போல புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டது. கஸகஸ்தானும் சீனத்தின் ராணுவ வலிமையைக் கண்டு அஞ்சி, அது கோரியவாறே உடன் படிக்கையைச் செய்துகொண்டது. கஸகஸ்தான் நிலப்பரப்பில் சீன எதிர்ப்பு நடவடிக்கைகள் எதற்கும் இடம் கொடுக்கக் கூடாது, கஸகஸ்தானின் எண்ணெய் வளத்தில் 60%-ஐ சீனாவுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டது. இதற்கு ஈடாக சீனா, கஸகஸ்தானுடன் என்றும் ‘நண்பனாக’ இருக்கும்! இதையும் ஸ்னோப்டன்தான் தெரிவிக்கிறார்.

“போரிடாமலேயே எதிரியைப் பணியவைப்பது தான் சிறந்த ராஜதந்திரம்” என்று சீன அறிஞர் சுன் சூ சொல்லியிருக்கிறார். அதை சீனா அப்படியே கடைப்பிடிக்கிறது.

“சீனா நம்முடைய நிலத்தில் அத்துமீறி நுழைகிறது, ஆக்கிரமிக்கிறது” என்று குரல் எழுப்பும்போதெல்லாம், “அப்படியெல்லாம் ஏதுமில்லை” என்று சீனாவுக்காக வரிந்துகட்டிப் பேசும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், ராஜநீதி என்றால் என்னவென்று அறிந்துகொள்ள இனியாவது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தைப் படித்துப்பார்ப்பது நாட்டுக்கு நல்லது.

பிசினஸ் லைன், தமிழில்:சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x