Published : 17 Jun 2016 09:40 AM
Last Updated : 17 Jun 2016 09:40 AM

கடலோடிகள் குரல் எப்போது கோட்டையில் கேட்கும்?

குமரியில் 48 கிராமங்களில் நீண்டு விரிகின்றது அந்த ஜனத்திரள். இங்கு மொத்தமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில், சரிபாதித் தொகுதிகளில் அந்த ஜனங்களின் வாக்குகளே வெற்றி, தோல்வியின் மையப்புள்ளி. அலையடிக்கும் கடலுக்குச் சென்று, மீன் பிடித்து மீண்டு வருவது மட்டுமே சமுத்திரத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை. ஆனால், அதைவிடவும் அவர்கள் கூடுதலாக மெனக்கெட வேண்டியது என்னவோ சமவெளியில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதில்தான்!

எந்தத் தரப்புப் போராட்டங்களுக்கும் சவால் விடக் கூடியவை கடலோடிகள் நடத்தும் போராட்டங்கள். போராட்டம் என்று தீர்மானித்துவிட்டால், அன்றைக்குக் கடல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஊர் கூடி வண்டி பிடித்தேனும் பெருந்திரளாகத் திரண்டுவிடுவார்கள். தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இணையம் வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவிலில் திரண்ட கடலோடிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது.

தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்புச் சுவர். கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம், கடலோரக் கிராமங்களை அச்சுறுத்தும் புற்றுநோய் அரக்கன், கடற்கரையை முற்றுகையிடும் புதுப்புது ராட்சதத் திட்டங்கள் என்று கடலோடிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் அவர்கள் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையவை. உயிரோடு விளையாடுபவை. ஆனாலும், கடலோடிகளின் பிரச்சினைகள் கடற்கரையைத் தாண்டுவதில்லை பெரும்பாலும். ஏன்?

குமரி சூழல் ஒரு உதாரணம்!

தமிழகத்தில் மொத்தமுள்ள 13 கடலோர மாவட்டங்களில் முக்கியமானது கன்னியாகுமரி. மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி இவர்களுக்கு உண்டு. இது போக ஆறு தொகுதிகளிலும் உள்நாட்டு மீனவர்களும் பரவிக் கிடக்கின்றனர். ஆக, ஆறு தொகுதிகளிலுமே வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது இவர்களே. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை மாவட்டத்தில் 48 கிராமங்களில் ஊடுருவிப் பாயும் கடலோடிச் சமூகத்துக்கு மொத்தமாகக் கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவமே இரண்டே பேரூராட்சித் தலைவர்களும், ஒன்பது ஊராட்சித் தலைவர்களும்தான். சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் இவ்வளவு ஏன்.. மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்த இடதுசாரிக் கூட்டணிகூட கடலோடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட குமரி மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பை அளிக்கவில்லை.

குமரி மாவட்டம் கேரளத்துடன் இருந்தபோது, கடலோடி சமூகத்தைச் சேர்ந்த அம்புறோஸ் றோட்ரிக் 1947-ல் அப்போதைய அகஸ்தீஸ்வரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 1951-ல் விளவங்கோடு தொகுதியிலும், 1954-ல் கொல்லங்கோடு தொகுதியிலும் கடலோடி சமூகத்தைச் சேர்ந்த குளச்சல் அலெக்சாண்டர் மேனுவேல் சைமன் வெற்றி பெற்றார். அப்போது இந்தத் தொகுதி கடலோடிகளுக்கான தொகுதியாகவே இருந்தது. குமரி மாவட்டம் 1956-ல் தமிழகத்துடன் இணைந்தது. தொடர்ந்து வந்த தேர்தலில் அலெக்சாண்டர் மேனுவேல் சைமனின் மனைவி லூர்தம்மாள் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அவர் 1957-62 காலத்தில் காமராஜர் அமைச்சரவையில், மீன்வளத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். லூர்தம்மாள் சைமனைத் தொடர்ந்து, 1996-ல் குளச்சல் தொகுதியில் திமுக சார்பில் இ.ரா.பெர்னார்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பின் கடந்த இரு தசாப்தங்களாக கடலோடிகளின் பிரதிநிதித்துவம் முற்றிலுமாகவே ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு தேர்தலிலும் எல்லா அரசியல் கட்சிகளும் குறிவைத்து இயங்கும் முக்கியமான வாக்கு வங்கிகளில் ஒன்று கடலோடிகள் சமூகம். அவர்களை வாக்குகளாகத் திரட்டி, வாக்குச் சாவடி மையத்துக்குக் கொண்டுசென்று வாக்குகளாக மாற்றிக்கொள்வதில் அரசியல் கட்சியினர் காட்டும் வேகம் தேர்தல் நாளோடு முடிந்துபோகிறது.

கடல் தொழிலுக்குச் சென்றபின், நடுக்கடலில் படகு கவிழ்ந்தோ, காற்றின் சீற்றத்தில் படகு பாறைகளில் சிக்கிச் சிதைந்தோ தண்ணீரில் தத்தளிக்கும் கடலோடிகளைக் காக்க ஹெலிகாப்டர் வசதி மட்டும் இருந்தால், எவ்வளவோ கடலோடிகளின் உயிர்களை நம்மால் காத்திருக்க முடியும். இதற்கான நிதியாதாரத்தைக்கூட கடலோடிகள் சமூகத்தால் உருவாக்கித் தர முடியும். கேரளத்துக்கு இணையாக மீன்பிடித் தொழிலுக்கேற்ற கட்டமைப்பு வசதிகளை அரசால் உருவாக்கித் தர முடிந்தால், தமிழகத்தின் பொருளாதாரத்தில் ஒரு பாய்ச்சலை இச்சமூகத்தால் உருவாக்கித் தர முடியும். தமிழகம் இன்றைக்கு இருக்கும் சூழலில் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஒரே விஷயம், அரசின் அவைகளில் கடலோடிகளின் எந்தப் பிரச்சினைகளும் கோரிக்கைகளும் ஒலிப்பதில்லை. என்றைக்கு இவர்கள் குரல், கோட்டையில் எதிரொலிக்கும்?

தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x