Published : 23 Feb 2017 09:40 AM
Last Updated : 23 Feb 2017 09:40 AM

குடும்ப அரசியல் கூட்டணி சாதிக்குமா, சறுக்குமா?

அரசியல், குறிப்பாகத் தேர்தல் அரசியல் தனது தந்திரங்களின் தொகுப்புகள் மூலம் நிறைய கற்றுத்தருகிறது. அதன் மூலம், மோசமான சூழல்களில்கூட சிறந்த விஷயங்களைச் செய்துகொள்ள முடியும். உத்தர பிரதேசத்தின் சமீபத்திய நிகழ்வுகள் இதையே சித்தரிக்கின்றன. ஒரு குடும்பச் சண்டை என்று சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள், தேசத்துக்கு நல்ல விதமாகப் பயன்பட்டிருக்கின்றன. குடும்ப அரசியலின் தொடர்ச்சியை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கும் வகையில் இரண்டு குடும்பங்களின் சந்திப்பே நிகழ்ந்திருக்கிறது. காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் தேர்தல் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இரு குடும்பங்களின் இந்த இணைவு, ஒரு புதிய, புத்துணர்வுகொண்ட விஷயமாக மாறியிருக்கிறது.

பழைய அரசியல் பாணிக்கு எதிரான தங்கள் துணிச்சலைச் சோதிக்கும் வாய்ப்பாக இந்தத் தேர்தல் இரு இளம் தலைவர்களுக்கு வாய்த்திருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி இரண்டாம்பட்சம் என்பது உண்மைதான். சமாஜ்வாதிக்குத் துணை வாத்தியம்தான் அது வாசிக்கிறது. எனினும், காங்கிரஸின் இந்தத் ‘துணைநிலை’, கிட்டத்தட்ட மூச்சடைக்கும் நிலையிலிருக்கும் அந்தக் கட்சிக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்திருக்கிறது. ‘மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒரே மாதிரியானவை; ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை’ எனும் டால்ஸ்டாயின் வார்த்தைகளை உத்தர பிரதேச அரசியல் உண்மையாக்கி இருக்கிறது. அகிலேஷ் யாதவின் மகிழ்ச்சியற்ற தன்மையை காங்கிரஸ் புரிந்துகொண்டதுடன், அதற்கான சிகிச்சையையும் அளித்திருக்கிறது.

கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. அகிலேஷ் யாதவும் ராகுல் காந்தியும் அத்தனை பொருத்தமில்லாத ஜோடியாக, தற்காலிகமான ஜோடியாகத் தோன்றலாம். எனினும், அமித் ஷா, அமர் சிங் நடத்திய அழுக்கு அரசியலுக்கு இடையே ஒரு புத்துணர்வு தேவை என்பதையே இந்த இணைப்பு காட்டுகிறது.

எடுபடாத மோடி

மர்மமாகவே தொடரும் சமாஜ்வாதி தலைவர்களின் குடும்ப நாடகம், மோடியின் இருப்பையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். வளர்ச்சி விஷயத்தில் தன்னுடன் போட்டி போடத் தயாரா என்றெல்லாம் மோடி பேசிக்கொண்டிருந்தாலும், அவரை யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அமர் சிங், அமித் ஷா அரசியலுக்குள்ளேயே உத்தர பிரதேச அரசியல் அடங்கிவிடவில்லை என்று காட்டுவதற்கு அகிலேஷ் யாதவ் ராகுல் காந்தி கூட்டணிதான் ஒரே பதிலாக இருக்க முடியும். இது ஒரு அடையாள எதிர்ப்பு என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இளைஞர்கள் எனும் முறையில் அவர்களால் ஒரு வித்தியாசமான சகாப்தத்தை வழங்க முடியும் என்பேன்.

கண்ணோட்ட அரசியல்

இரு தரப்பிலும் சாமர்த்தியம் இருக்கிறது. அகிலேஷ் யாதவைப் பொறுத்தவரை குடும்ப அரசியலின் சுமையைத் தூக்கியெறிவதற்கான முயற்சி இது. ஒரு வகையில் பார்த்தால், பேச்சு, நடவடிக்கையில் சின்னதாக ஒரு மாற்றம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகத் தோன்றலாம். எனினும், குறைந்தபட்சம் அரசியலில் ஏதேனும் புதுமையை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை இது ஏற்படுத்துகிறது.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொடர்பான புகார்கள், வருத்தங்கள் அடங்கிவிட்டன. காங்கிரஸின் தொப்பியிலிருந்து மந்திர முயலை ஒன்றும் ராகுல் எடுத்துவிடவில்லை. ஆனால், சிறிய அளவிலான அதே சமயம் துடிப்பான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார். அரசியலில், இரண்டாவதாகக் கிடைக்கும் நன்மை சில சமயம் சிறப்பானது என்கிறார்கள் அறிவார்த்தமான அரசியல் விமர்சகர்கள். தனது குடும்பம் அரசியலில் முதன்மையான குடும்பம்தான் என்பதையும், காங்கிரஸ் இரண்டாம்பட்சமாக இருப்பதுடன் பழைய நினைவில் உழன்றுகொண்டிருக்கிறது என்பதையும் ராகுல் புரிந்துகொண்டிருக்கிறார். கருத்துகளைச் செறிவூட்டிக்கொள்ளவும், காங்கிரஸின் அரசியலில் மறுசிந்தனையை ஏற்படுத்திக்கொள்ளவும் உத்தர பிரதேச அரசியல் வழிவகுக்கும்.

கண்ணோட்டங்களைப் பொறுத்ததுதான் இது எனினும், கண்ணோட்டங்கள்தான் இன்றைக்கு அரசியலைத் தீர்மானிக்கின்றன.

பணமதிப்பு நீக்க பாதிப்பு

வளர்ச்சிக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையிலான இடைவெளி இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறது. ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவருவதுபோல், பணமதிப்பு நீக்கம் உத்தர பிரதேச ஏழை மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. டிஜிட்டல்மயம், வளர்ச்சி என்று மோடி பெருமிதமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் நிர்வாகத்தைப் பொறுத்தவரை அவரது செயல்பாடுகளுக்கான மதிப்பெண் குறைவாகத்தான் இருக்கிறது.

திறமையாக உருவாக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள் அகிலேஷ் யாதவுக்கு இன்னும் வலு சேர்க்கும். நல்ல நிர்வாகத்தை வழங்குவோம் என்று சொல்லும் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி, பாஜக முன்வைக்கும் வளர்ச்சி வாக்குறுதிக்குச் சவால் விடுகிறது. இந்திய அரசியலின் திசையையே இந்தக் கூட்டணி மாற்றும் என்று அகிலேஷ் யாதவ் சொல்கிறார். நேரு - இந்திரா காலத்திய பெரும் கூட்டணிகள் எனும் நிலையிலிருந்து, போட்டி நிறைந்த சூழலில் பிழைத்திருக்கும் சாத்தியங்களை உருவாக்கிக்கொள்ளும் நடைமுறைத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் கட்சியாக காங்கிரஸை இது மறுவடிவமைப்பும் செய்யலாம்.

திசை மாற்றிய கூட்டணி

உத்தர பிரதேச அரசியலை இரண்டு விதமாகப் பார்க்கலாம். எண்ணிக்கை அடிப்படையிலான போட்டியாக, வெற்றி - தோல்விக்கான களமாக அதைப் பார்க்கலாம். அதே சமயம், தற்போதைய இரண்டாம்பட்ச நிலையிலிருந்து வருங்காலத்தில் புதிய சூழல்கள் உருவாகலாம். குடும்பச் சண்டை எனும் நிலையிலிருந்து சமாஜ்வாதி மீண்டுவந்திருப்பது மோடிக்கும் பாஜகவுக்கும் அதிருப்தியை அளித்திருப்பதை உணர முடிகிறது. அகிலேஷ் யாதவையும் ராகுல் காந்தியையும் மோடியால் தோற்கடிக்க முடியுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. உத்தர பிரதேசத்தைக் காவிமயமாக்குவோம் எனும் அவரது வாக்குறுதியில் பதற்றம் தெரிகிறது.

எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் ஸ்கேம் - SCAM (ஊழல்) எனும் வார்த்தையை சமாஜ்வாதி (எஸ்), காங்கிரஸ் (சி), அகிலேஷ் (ஏ), மாயாவதி (எம்) என்று பயன்படுத்துகிறார் மோடி. அத்துடன், விகாஸ் - VIKAS (வளர்ச்சி) எனும் வார்த்தையை வித்யுத் - மின்சாரம் (வி), கானூன் சட்டம் (கே), சடக் சாலை (எஸ்) என்று பயன்படுத்துகிறார். ஆனால், அகிலேஷ் வசமும் ஸ்கேம் SCAM எனும் வார்த்தைக்கு ஒரு விரிவாக்கம் உண்டு: ‘சேவ் கன்ட்ரி ஃப்ரம் அமித் ஷா அண்டு மோடி’ - ‘Save Country from Amit Shah and Modi’ (அமித் ஷா, மோடியிடமிருந்து தேசத்தைக் காப்பாற்றுங்கள்)

யார் வெற்றிபெறுவார் என்பதல்ல விஷயம். எந்த அமைப்பு பலனடைகிறது, வளர்ச்சியடைகிறது என்பதுதான் விஷயம். புதிய வகையான வியூகங்களும் இத்தேர்தலில் தென்படுகின்றன. முலாயம் சிங் யாதவ், மாயாவதி, மோடி, அமித் ஷா, அமர் சிங் என்று பழைய தலைவர்களின் தேர்தல் களம், இந்தப் புதிய கூட்டணியால் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

- ஷிவ் விஸ்வநாதன், ‘ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல்’ பேராசிரியர்;
ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் நாலேட்ஜ் சிஸ்டம்ஸ்’ அமைப்பின் இயக்குநர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்); தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x