Published : 24 Mar 2017 08:23 AM
Last Updated : 24 Mar 2017 08:23 AM

எம்.ஜி.ஆரின் கனவு இல்லம்: தொடங்கியது உரிமை யுத்தம்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கும் இன்றைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. 27 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக சந்தித்த அதே நெருக்கடி நிலை இது. அந்த நெருக்கடியே அதிமுகவுக்கு ஜெயலலிதா என்னும் அடுத்த ஆளுமையை உருவாக்கித் தந்தது. நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அப்படி ஒரு ஆளுமை இப்போது மீண்டும் அதிமுகவில் உருவாகுமா என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டம் இது!

இன்னொரு பக்கம், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் கட்சி அலுவலகத்தையும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கைப்பற்றத் துடிக்கின்றனர். அதே சமயம் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் எல்லாரையும்விட கட்சியின் எதிர்காலம் முக்கியம். இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்பதைச் சிலர் உணரத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது. அதனால், ஒன்றுபட்டால் மட்டுமே இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முடியும் என்று மூத்த நிர்வாகிகள் சிலர் இருதரப்பினருக்கும் அறிவுரை வழங்கிவருகின்றனர்.

எம்.ஜி.ஆர். வசித்த இல்லம்

எம்.ஜி.ஆர். மற்றும் அவரது சகோதரர் சக்கரபாணி ஆகியோர் திரையுலகில் ஓரளவு வளர்ந்து வந்த சூழல் அது. அவர்கள் லாயிட்ஸ் சாலையில் இருந்த 160-ம் எண் கொண்ட வீட்டில் குடியேறினார்கள். அந்த வீடு, தற்போதைய தமிழ் சினிமா நடிகரான மோகன்ராமின் தந்தை வி.பி.ராமனுக்குச் சொந்தமானது. எம்.ஜி.ஆர். மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருந்த வி.பி.ராமன், ‘வளர்ந்துவரும் நடிகரான நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பது கெளரவமாக இருக்காது. நீங்கள் வாடகையாகப் பணம் கொடுக்க வேண்டாம். சினிமாவில் கணிசமான பணம் வரும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அதன்படி சில ஆண்டுகளில் அந்த வீட்டை எம்.ஜி.ஆர். வாங்கிவிட்டார்.

திரையுலகில் எம்.ஜி.ஆர். வளர்ந்த பிறகு, அவர் ஆரம்பித்த ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ அலுவலகம் அதே வீட்டில்தான் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனம் தயாரித்த முதல் படமான ‘நாடோடி மன்னன்’ மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. சினிமாவில் சம்பாதித்ததைக் கொண்டு தான் வாங்கிய முதல் வீடு என்பதாலும் ஜானகியுடன் வசித்த வீடு என்பதாலும், எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே அந்த வீட்டின் மீது மிகுந்த பிரியம் இருந்தது.

எம்.ஜி.ஆர். தீவிர அரசியலுக்கு வந்த பின்பு, ஒருகட்டத்தில் அவர் ராமாவரம் தோட்டத்துக்குத் தனது குடியிருப்பை மாற்றினார். லாயிட்ஸ் சாலை வீடு சினிமா அலுவலகமாகவும் கட்சியினர் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திக்கும் இடமாகவும் இருந்துவந்தது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து, தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அந்த வீட்டின் மீதிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாடு அதையே கட்சியின் தலைமை அலுவலகமாக மாற்றினார். அதுதான் இன்றைக்கு ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம். காலச்சக்கரம் 27 ஆண்டுகளுக்குப் பின்பு திரும்பியிருக்கிறது. அப்போது ஜானகி, ஜெயலலிதா களத்தில் இருந்தார்கள். இப்போது தினகரன், ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார்கள். பிரச்சினை ஒன்றுதான். அன்றைய நாளைப் போலவே இன்றும் கட்சியின் சின்னம், அலுவலகம் இரண்டும் இழுபறியில் சிக்கியிருக்கின்றன. அரசியல் விமர்சகரும் ஏராளமான அரசியல் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதியவருமான ஆர்.முத்துக்குமார் இதுகுறித்துச் சொல்லி யிருக்கும் கருத்துகள் முக்கியமானவை.

ஒரே சாலை... இரண்டு பொதுக் குழு!

“அன்றைய காலகட்டத்தில் சின்னம் மற்றும் கட்சி அலுவலகத்துக்கு ஜெயலலிதா, ஜானகி இருவருமே சொந்தம் கொண்டாடினார்கள். இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. கட்சி அலுவலகத்தை எம்.ஜி.ஆர். தனது மனைவியான ஜானகியின் பெயரில் உயில் எழுதி வைத்திருந்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி கட்சி அலுவலகம் ஜானகிக்குச் சொந்தமானது. தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், ஜானகி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதே சாலையில் இருந்த ஹேமமாலினி திருமண மண்டபத்தில் ஜெயலலிதாவும் போட்டி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினார்.

பின்பு, ஜானகி அணியினர் இரட்டைப் புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணியினர் சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். தன்னுடன் கூட்டணி சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசனின் கட்சிக்கு 50 இடங்களை அளித்த ஜானகி அணியினர், மற்ற அனைத்து இடங்களிலும் போட்டியிட்டனர். ஆனால், எம்.ஜி.ஆரின் குடும்பம் வேறு; கட்சி வேறு என்பதில் தெளிவாக இருந்தார்கள் மக்கள். அந்தத் தேர்தலில் ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்ட பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றிபெற்றார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி மற்றும் திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.

விட்டுக் கொடுத்த ஜானகி

இந்தத் தோல்விதான் ஜானகியைப் பெரும் யோசனைக்கும், மனமாற்றத்துக்கும் உள்ளாக்கியது. கட்சி முக்கியமா.. சொந்த விருப்பு வெறுப்புகள் முக்கியமா என்று கட்சியினரிடையே பேச்சுகள் பரவின. தனது கணவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியே முக்கியம் என்று ஜானகி நினைத்தார். யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான், எதிர்காலத்தில் கட்சி தப்பிப் பிழைக்கும் என்பதையும் அவர் உணர்ந்தார். ஏனெனில், அந்தத் தேர்தலில் ஜெயலலிதா, ஜானகி ஆகிய இரு அணியினருமே மொத்தமாக 28 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தார்கள். இதையெல்லாம் சுட்டிக்காட்டி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக ஜானகி, கட்சி சின்னத்தையும் தனது பெயரில் இருந்த கட்சி அலுவலகத்தையும் விட்டுக்கொடுப்பதாகத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். தவிர, அதிமுகவின் இரு அணியினரும் இணைந்து செயல்படுவதாகவும் அறிவித்தார். இதற்காக அன்று ஜானகிக்கு பகிரங்கமாக ஜெயலலிதா நன்றி தெரிவித்த நிகழ்வும் நடந்தது. பின்பு, ஜானகி அரசியலிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார்.

அதன்பின்பு மீண்டும் 1990-ல் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய திருநாவுக்கரசர் கட்சி அலுவலகம் எனக்கே சொந்தம் என்று குரல் எழுப்பினார். ஜெயலலிதாவும் திருநாவுக்கரசரும் மாறி மாறி உண்ணாவிரதம் இருந்தார்கள். ஒருவழியாக நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதமாக வந்தது.

இன்றைக்கும் அதே சூழல். தற்போது தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது, இரு விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தாக்கம், உடனடியாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தெரிந்துவிடும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாத நிலையில், அவர்கள் இருவருமே பெருவாரியான ஓட்டுகளைப் பெற்ற இரட்டை இலை என்கிற சின்னமும் இல்லாத நிலையில், முதன்முறையாக அதிமுக தேர்தலைச் சந்திக்கிறது. இதில் வெற்றிபெறப்போவது தினகரன் அணியா.. ஓ.பன்னீர்செல்வம் அணியா.. என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.

என்னவாகும் பேச்சுவார்த்தை?

தினகரன் வெற்றிபெற்றால், அதிமுக அணி மீண்டும் படிப்படியாக ஒருங்கி ணைய வாய்ப்பிருக்கிறது. இதையொட்டிதான், இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரன், ‘அதிமுக கட்சியை மீட்க ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்’ என்று சொல்லியிருக்கிறார். ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று அவர் சூசகமாகக் கூறியிருப்பது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு விடுத்திருக்கும் அழைப்பாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது. அதேபோல, மேல்மட்ட அளவில் மூத்த நிர்வாகிகள் சிலரும் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் இரு தரப்பையும் ஒருங்கிணைக்கத் தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரிகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணியும் தோல்வி அடைந்து, திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் அதிமுகவின் எதிர்காலத்துக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதன் பின்பும் அதிமுகவின் இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்காமல் எதிரும்புதிருமாக இருந்தார்கள் எனில், இரட்டை இலை நிரந்தரமாக முடக்கப்பட்டு, அதன் தாக்கம் அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும். அது அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.”

தனி மனித வழிபாடு, கேள்வி கேட்கவியலாத சர்வாதிகாரம், ஊழல் என சகல நெருக்கடிகளையும் மக்கள் மீது திணித்த ஒரு கட்சி, இன்று நெருக்கடியான அதன் இறுதிக் கட்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒருவேளை, அவர்கள் மீண்டு எழுந்தால் இனியேனும் மக்களைப் பற்றி உளப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x