Last Updated : 12 Aug, 2016 08:39 AM

 

Published : 12 Aug 2016 08:39 AM
Last Updated : 12 Aug 2016 08:39 AM

மறைமுக வரிகளைக் குறைக்க வேண்டும்!

நேர்காணல்

ஜிஎஸ்.டி. வரி விகிதம் 18%-க்கும் மேலாக அதிகரிக்கக் கூடாது என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவரது நேர்காணலின் பகுதிகள்.

வரி தொடர்பான தகராறுகளைத் தீர்க்க ஒரு ஏற்பாட்டை ஜி.எஸ்.டி. கவுன்சில் செய்துகொள்ளலாம் என்று மசோதாவில் இருப்பதை எதிர்த்து வழக்குகள் வரும் என்று நினைக்கிறீர்களா? தகராறுகளைத் தீர்க்க அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறதா? இந்த மசோதாவில் இருப்பது அதற்கு முரண்படுகிறதா?

அரசியல் சாசனத்தின்படி, ஜி.எஸ்.டி. வரிக்கான தற்போதுள்ள சட்டப் பிரிவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியாது. அப்படியே அதை நிறைவேற்றினாலும் அது தொடர்பாக எடுக்கும் முடிவை நீதிமன்றம் பரிசீலிப்பதைத் தவிர்க்க முடியாது. அரசியல் சாசனத்தில் உள்ள சட்டக்கூறுகள் 131, 226, 227-ஐ இந்தச் சட்ட முன்வடிவு திருத்தவில்லை. இதனால் அவற்றைத் திருத்தவும் முடியாது. எனவே, நீதித் துறை பரிசீலனையைத் தவிர்க்க முடியாதபோது பிரச்சினைகளைத் தீர்க்க என்ன வகையான ஆணையத்தை அமைக்க வேண்டும்? நீதித் துறையின் உறுப்புகளைக் கொண்ட ஆணையம்தான் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அமையும். சட்டரீதியாகப் பயிற்சிபெற்ற நிபுணர்கள் அதில் இருக்க வேண்டும். அதனால்தான், பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆணையம் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் அமைய வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியின் சட்டமுன்வடிவு பரிந்துரைத்தது. அதைக்கூட அவர்கள் ஏற்கவில்லை. 100 சதவீதம் நிர்வாகரீதியான ஒரு அமைப்பை அவர்கள் நிறுவுவார்கள் என்று நினைக்கிறேன். அது அரசியல் சாசனரீதியானதாக இருக்குமா என்பது சந்தேகம். சட்டத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்காமல் உறுதியாக நான் எதையும் சொல்ல முடியாது.

இந்தச் சட்டப் பிரிவுக்கு அரசியல் சாசனத் தன்மையும் கிடைக்கலாம். ஆனாலும் அதைப் பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் உண்டு. அவற்றின் மூலமாகத் தங்களுக்கிடையேயான பிரச்சினை களைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று மாநில அரசுகள் கருதும்.

தங்கத்தின் மீதான உயர் வரி விகிதங்கள் 2 முதல் 4% எனவும் அது கடந்த இரண்டாண்டுகளில் விதிக்கப்பட்ட செஸ் வரியை உள்ளடக்காத 2013-14 காலகட்டத்தின் வரிமதிப்பீட்டின் அடிப்படையிலானது என்றும் டாக்டர் சுப்ரமணியனின் அறிக்கை சொல்கிறதே?

அது சரியல்ல. தங்கத்தின் மீதான வரி தற்போது 2%. மத்திய அரசுக்கு 1%. மாநில அரசுகளுக்கு 1%. 2013-14-க்குப் பிறகு செஸ் வரி விதிக்கப்பட்டது. அது வரிவிகிதத்தை 1%-க்கு மேல் கூட்டவில்லை. அத்தகைய சலுகை இடைவெளியை அவர் முன்பே வழங்கிவிட்டார். ரெவின்யூ நியூட்ரல் விகிதம் எனப்படுகிற வருவாய் சமநிலை விகிதம் 15% முதல் 15.5%-ஆக இருக்கும்போது நிலையான வரிவிகிதம் 18%-ஆக இருக்கும். அதனால், 2 முதல் 2.5 % அளவுக்கான சலுகை இடைவெளி இருக்கவே செய்கிறது.

இப்போது அதிக வரிவிகிதத்தை அவர் பரிந்துரைத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

அதிக வரிவிகிதம் பணவீக்கத்துக்கான காரணமாக மாறும் என்பதே எனது கருத்து. மறைமுக வரிகளைக் குறைப்பதை நான் ஆதரிக்கிறேன். நான் 1997, 2004 மற்றும் 2014-லும் மறைமுக வரிகளைக் குறைத்தேன். மறைமுக வரியின் சதவீதத்தை அதிகரிப்பதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். அது கொள்கைரீதியான அணுகுமுறை. மறைமுக வரிகள் குறைக்கப்பட்டாக வேண்டும். நேரடி வரிகளைப் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

18%-க்கு மேல் வரி கூடாது என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஏன் கைவிட்டது?

அரசியல் சாசனத் திருத்த மசோதா என்பது முழுமையாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் மட்டும் நிறைவேறிவிடுவதல்ல. மாநில அரசாங்கங்களும் அதைச் சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற வேண்டும் என்பதால் கைவிட்டிருக்கிறோம். ஒன்றிரண்டு காங்கிரஸ் அமைச்சர்களைத் தவிர, மற்ற மாநில நிதியமைச்சர்கள் அரசியல் சாசனத் திருத்த மசோதாவின் வரிவிகிதம் தொடர்பான உச்சவரம்பு எதுவும் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தில் உள்ளனர். அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும்தான். ஆனாலும் உச்சவரம்பு இருக்க வேண்டும் என்கிற எங்களது அடிப்படையான கோரிக்கையை நாங்கள் கைவிடப்போவதில்லை.

ஜி.எஸ்.டி வரிக்கான மத்திய அரசின் சட்டங்கள் அநேகமாகப் பண மசோதாக்களாக வரலாம் என்று தோன்றுகிறது. உச்சவரம்பு பற்றிக் கருத்து சொல்லும் வாய்ப்பு மாநிலங்களவைக்குக் கிடைக்காமல் போய்விடலாமே?

அப்படி வந்தால், அரசுக்கு நல்ல நோக்கம் இல்லை என்பதை அது காட்டும். ஜி.எஸ்.டி என்பது மாறும் தன்மையுள்ள சட்டம். மத்திய விற்பனை வரியும் அதன் புதிய அவதாரமான வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியும் சுமார் 80, 90 வருடங்களாக நடைமுறையில் உள்ளன. ஜி.எஸ்.டி வரியும் குறைந்தபட்சம் 50 வருடங்களாவது நடைமுறையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சட்டம் பற்றி இரண்டு அவைகளும் விவாதிக்கும் வாய்ப்பை நானாக இருந்தால் தருவேன். ஆளும்கட்சிக்கு ஓரளவு பெரும்பான்மை மாநிலங்களவையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதைப் பண மசோதாவாகக் கொண்டுவந்தால் குறைந்தபட்சப் பெரும்பான்மைகூட மாநிலங்களவையில் நமக்கு இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள் என்று அர்த்தம். அப்படி ஒரு அரசாங்கம் கருதினால் அவர்கள் என்னைப் பொறுத்தவரையில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

நாம் கேள்விப்படுவது போல, ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற முறையை ஏற்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி வரி தயாராகவில்லை என்று தோன்றுகிறது. மாநிலங்களுக்கிடையேயான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒரே தேசிய வரி என்பது உண்மையல்ல. உண்மையில் இது ஒரு 29 மாநில வரிகளும் சேர்ந்த மத்திய வரியாக இருக்கும். வேறுபட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான 3,4 ரகங்களாக வரி இருக்கும். கூடுதலாக, ஜி.எஸ்.டி வரிக்கான கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் வரிகளாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

வரிகளில் பல ரகங்கள் என்பது ஒரே வரி என்ற கருத்துக்கு முரணானது இல்லை. நுகர்வுப் பொருட்களும் தரமற்ற பொருட்களும் இருக்கும்வரை, நிலையான வரிவிகிதமும் நிலையான வரிவிகிதத்துக்குக் குறைவானதும் நிலையான வரிவிகிதத்துக்கு அதிகமானதும் இருப்பதுதான் மிகச் சரி. நிலையான வரிவிகிதம் இருக்கிறது என்ற உண்மையை அது மறுத்துவிடுவதில்லை. 70, 75 சதவீதமான பொருட்களும் சேவைகளும் ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற கொள்கையிலிருந்து நழுவாமல் இருக்கிறதென்றால், நிலையான வரிவிகிதம் கீழிறங்கும். நிலை யான வரிவிகிதத்திலிருந்து ஒவ்வொரு மாநிலமும் விலகிச்செல்வதை ஜி.எஸ்.டி வரிக்கான கவுன்சில் அனுமதித்தால், அது பெரிய பின்னடைவாக இருக்கும்.

நிலையானது, நிலையானதுக்குக் குறைவானது, நிலையானதுக்கு அதிகமானது என்கிற மூன்று வரிவிகிதங்கள் மட்டும்தான் என்கிற விதியை ஜி.எஸ்.டி வரிக்கான கவுன்சில் கட்டாயப்படுத்த வேண்டும். நிலையானதற்குக் குறைவானதையும் அதிகமானதையும் ஜி.எஸ்.டி வரிக்கான கவுன்சில் மறுபரிசீலனை செய்தால், அவை 29 விதமான நிலையானதற்குக் குறைவான வரிவிகிதங்களாகவோ அதிகமான வரிவிகிதங்களாகவோ மாறிவிடலாம். அப்போது ஜி.எஸ்.டி வரிக்கான கவுன்சிலால் எதையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கேள்வி நிதியமைச்சரிடம் கேட்கப்பட்டது. அது ஜி.எஸ்.டி கவுன்சிலின் முடிவுக்கு விடப்படும் என்று அவர் சொன்னார்.

மாதிரிச் சட்டம் வரும்போது நாங்கள் அதைக் கவனிப்போம்.

தங்களின் நிதி தன்னாட்சி நிலையை இழந்துவிடும் நிலைமைக்கு ஜி.எஸ்.டி வரி தங்களைக் கொண்டு செல்லாது என்பதை மாநிலங்களை ஏற்கச் செய்வது எப்படி?

ஏனென்றால், வருவாய் சமநிலை விகிதம் ஒரு வரையறையைத் தருகிறது. அதன்படி, மாநிலங்களுக்கு வருமான இழப்பு இருக்காது. அதற்கு மாறாக, ஜி.எஸ்.டி வரி கொண்டுவருவதன்மூலம் வரி ஏய்ப்பு குறையும். செயல்திறன் கூடும். வளர்ச்சியும் தொழிலும் பெருகும். இவையெல்லாம் மாநிலங்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். நீண்ட கால நோக்கில் பார்த்தால், தற்போது பல்வேறுவிதமான வரிகள் மூலம் மாநிலங்களுக்கு வரும் வருமானத்தைவிட ஜி.எஸ்.டி வரியால் மாநிலங்களுக்கு மேலும் அதிகமான வருமானமே கிடைக்கும்.

மதிப்புக்கூட்டு வரி வரும்போதும் இத்தகைய அச்சங்கள் இருந்தன. 3, 4 வருடங்களில் அவை நீங்கிவிட்டன. ஜி.எஸ்.டி வரியின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அது கூடுதல் திறன் படைத்த வரி என்பதையும் நீங்கள் கட்டாயம் நம்பித்தான் ஆக வேண்டும். அது தொழிலை வளர்க்கும் என்பதையும் நம்ப வேண்டும். நான் நம்புகிறேன். மாநிலங்களின் நிதியமைச்சர்கள் நம்பவில்லை என்றால் ஜி.எஸ்.டி வரியின் நோக்கத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்குமான உறவுகளை ஜி.எஸ்.டி வரி சீர்குலைத்துவிடுமா?

அப்படியான சீர்குலைவு வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் ஒரு வரியை விதிப்பதற்குப் பதிலாக, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஒரு வரி எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். அதனால் உறவுகள் ஒன்றும் பெரிதாகப் பாதிக்கப்படாது.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x