Last Updated : 04 Mar, 2014 12:00 AM

 

Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்

ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்.

யார் இந்த ஏழு மண்டேலாக்கள்?

வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவர்தான் அந்த ஏழு மண்டேலாக்கள். இவர்கள் எப்படி, எப்போது மண்டேலா ஆனார்கள் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்’ படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. எனினும், மனித மேரி மாதாக்கள், வாழும் வள்ளுவர்கள், சமகால சே குவேராக்கள் வரிசையில் ஏழு மண்டேலாக்களையும் சேர்க்க முடியுமா?

தேசியத் தொலைக்காட்சிகளில், அர்னப் கோஸ்வாமி களும் ராஜ்தீப் சர்தேசாய்களும் தமிழர்களை இன வெறியர்களாகச் சித்தரித்துக் கத்தும்போது, வேகமும் கோபமும் வரத்தான் செய்கிறது. ஆனால், நம் ஆட்கள் அடிக்கும் கூத்துகளை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு வேறு எப்படித் தோன்றும்?

மனிதாபிமானமா, இன அரசியலா?

பஞ்சாபில் 1995-ல் அன்றைய முதல்வர் பியாந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மாற்று மனித வெடிகுண்டாக வந்தவர் பல்வந்த் சிங் ரோஜனா. பாப்பர் கால்ஸா இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்தவர். 2007-ல் சி.பி.ஐ. நீதிமன்றம் ரோஜனாவுக்கு மரண தண்டனை விதித்தபோது மேல்முறையீட்டு வாய்ப்பை மறுத்தவர். ரோஜனாவுக்கு ஆதரவான சீக்கியர்களின் தொடர் போராட்டங்கள், பஞ்சாபின் செல்வாக்குமிக்க அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு தாக்கல்செய்த கருணை மனு, முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் நேரடி முறையீடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக ரோஜனாவின் மரண தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது அரசு.

1993-ல் டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர்ஜித் சிங் பிட்டா கொலை வழக்குக் குற்றவாளியான காலீஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த புல்லரின் கதை ஒப்பீட்டளவில் இன்னும் நமக்கு நெருக்கமானது. 2001-ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட புல்லரின் கருணை மனுவை 10 ஆண்டுகளுக்குப் பின் நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல். சீக்கியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போது புல்லருக்கு ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்பு மற்றும் கருணை மனு, பரிசீலனைக் கால தாமதம் ஆகிய காரணங்களுக்காக புல்லரின் மரண தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது சரி. ஆனால், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்ற மற்றவர்கள் ஆகிவிடுவார்களா? தனி சீக்கிய மாநிலம் கோரும் குழுக்கள், “சீக்கிய தேசத்தை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்று ரோஜனா, புல்லர் விவகாரங்களைக் கொண்டாடுகின்றன. இதற்கும் “எழுவர் விடுதலை, தமீழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்ற கொண்டாட்டத்துக்கும் என்ன வேறுபாடு?

அப்பாவிகளா, போராளிகளா?

இந்தியாவின் மோசமான அரசியல் படுகொலை களில் ஒன்று ராஜீவ் படுகொலை. நீதிமன்றம் இதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதும் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்திருப்பதும் மனிதாபிமான அடிப்படையில்தானே தவிர, அவர்கள் நடந்த குற்றத்தோடு துளியும் தொடர்பற்றவர்கள் என்கிற அடிப்படையில் அல்ல.

இத்தனை நாட்களும் அப்பாவிகள் என்று கூறியே அவர்கள் விடுதலையைக் கோரினோம். இப்போது தியாகிகள் என்கிறோம். எனில், அவர்களை யாரென்று அடையாளப்படுத்துகிறோம்? பேரறிவாளன் தூக்குக் கயிற்றின் முன் நின்றபோது, கூக்குரலிட்டோம். அப்சல் குருவின் குரல்வளை நெரிபடும்போதோ, வாய் மூடி. முகம் திருப்பி நின்றோம்.

“என் தாய் - தந்தை கையால் சாப்பிடக் காத்திருக்கிறேன்” என்கிற அரித்ரா குரல் நமக்கு வலிக்கிறது. “என் தந்தையை இழந்தேன். இனி, அவர் திரும்பிவரப்போவதில்லை. ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்கிற ராகுல் குரலின் வலி கேலிக்குரியதாகிறது என்றால், நாம் யார்?

நேற்றுவரை யாரும் மரண தண்டனையின் பெயரால் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்று இங்கு கூட்டங்கள் நடந்தன. அதுவே அஹிம்சை என்றோம். இன்றைக்கு, ராஜீவ் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று அவருடைய கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களை நோக்கிக் கல் வீசப்படுகிறது; ராஜீவ் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு, தலை தகர்க்கப்படுகிறது. எனில், நாம் சொல்ல விழைவதுதான் என்ன?

- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x