Published : 24 Oct 2014 09:01 AM
Last Updated : 24 Oct 2014 09:01 AM

தூக்கம் என்றொரு புதிர்

தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும்.

அதிகாலையில் கண்விழித்துப் படுக்கையிலிருந்து எழுகிறபோது களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியுடனும் தெம்புடனும் இருக்கிறவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல பேருக்கு அந்தப் பாக்கியம் லேசில் கிட்டுகிறதில்லை. குழந்தைகளை நீங்கலாக, உலகில் பாதிப் பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் சரியாகத் தூங்க முடியாத பிரச்சினை உள்ளது. மருத்துவர்களாலும் இந்த விஷயத்தில் பெரிதாக உதவ முடிவதில்லை. ஏனெனில் தூக்கத்தைப் பற்றிய முழு விவரங்களும் இன்னமும் திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. எல்லோருக்கும் தூக்கம் இன்றியமையாதது. அன்ன ஆகாரமின்றிப் பல நாட்கள் இருந்துவிடலாம். தூங்காமல் ஓரிரு நாள்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும். எந்த ஒரு விலங்கும் மனிதரும் பல நாட்கள் உறங்க முடியாமல் தடுக்கப்பட்டால் மரணம் ஏற்பட்டுவிடும்.

எவ்வளவு நேரம் தூங்கலாம்?

ஒருவருக்குக் குறைந்தபட்சமான உறக்க நேரம் எவ்வளவு தேவை என்று நிர்ணயிக்க முடியாது. களைப்பு நீங்க எவ்வளவு நேரம் தூங்கியாக வேண்டும் என்பது ஆளாளுக்கு வேறுபடும். அதற்கான காரணமும் கண்டறியப்படவில்லை. சிசுக்கள் தினமும் 18 மணி நேரம் வரை தூங்கும். பெரியவர்கள் சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் தூங்குவார்கள். ஒருவர் எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பது முக்கியமல்ல. ஏனெனில், உடலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வகையில் உறங்கத் தொடங்கும். முதலில் உடலின் மேற்பரப்பு மட்டும் தூக்கத்தில் ஆழும். மூளை கடைசியாகத் தூங்கத் தொடங்கும்.

உறக்கம் பல கட்டங்கள் கொண்டது. ஒவ்வொரு கட்டத்திலும் போதுமான அளவில் உறக்கம் கிட்டியதா என்பதுதான் முக்கியம். உறங்கும்போது வெவ்வேறு உறக்கக் கட்டங்கள் மாறிமாறி வரும். உறக்கத்தின் முதலிரு கட்டங்களும் மேலோட்டமானவை. அவை ஒவ்வொன்றும் சுமார் அரை மணிநேரம் நீடிக்கும். மூன்றாவது, நான்காவது கட்டங்களில் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். அதுவே, உடலுக்குப் புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் வழங்கும். அந்தக் கட்டங்களின்போது இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றின் இயக்கங்கள் குறைந்து அவற்றுக்குச் சற்று ஓய்வு கிட்டுகிறது.

எனினும், அவ்விரு கட்டங்களின்போது பிட்யூட்டரிச் சுரப்பி சுறுசுறுப்பாகச் செயல்பட்டு உடலில் புதிய செல்கள் உருவாகத் தேவையான வளர்ச்சி ஹார்மோனின் உற்பத்தியைப் பத்து மடங்கு அதிகமாக்கி அதை உடலில் பரப்புகிறது. ஆழ்ந்த உறக்கத்தின்போது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பும் தீவிரமாக இயங்கிக் கிருமிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராடுகிறது.

ஆழ்ந்த உறக்கம் தொடங்கி, சுமார் அரை மணி நேரம் கழித்துக் கனவுகள் தோன்றத் தொடங்குகின்றன. அப்போது மூடிய இமைகளுக்குள் விழிகள் அங்குமிங்கும் நகரும். அப்போது தசைகள் தளர்ந்து செயலிழக்கும். உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பும் ஓய்வெடுக்கும். மூளைத்தண்டு என்ற பகுதியில் நிகழும் செயல்பாடுகள் காரணமாகவே கனவுகள் ஏற்படுகின்றன. விழித்திருக்கும் வேளைகளில் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களின் பதிவுகளில் தேவைப்படாதவற்றை மூளை தினமும் கழித்துக்கட்டுகிற செயல்தான் கனவு என்று பெரும்பாலான வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒருவர் அதுவரை தம் கண்ணால் பார்த்திராத எந்த ஒரு பொருளையும் கனவில் காண முடியாது. கருப்பையிலுள்ள சிசுக்கள் மற்றும் பிறவியிலேயே பார்வையற்றவர்களின் கனவுகள் ஒலி வடிவத்தில் மட்டுமேயிருக்கும்.

மூளையின் வளர்ச்சிக்குக் கனவுநிலை உறக்கம் இன்றியமையாதது. கருப்பையிலுள்ள சிசுவின் உறக்க நேரத்தில் 80% கனவு உறக்கம்தான். இளம் குழந்தைகளுக்கு அது 25% ஆகக் குறையும். வயதாக வயதாகக் கனவு உறக்க நேரம் குறைந்துகொண்டே போகும். முதுமையில் ஆழ்நிலை உறக்க நேரமும் கனவு உறக்க நேரமும் வெகுவாகக் குறைந்துவிடுகின்றன.

காரணம் என்ன?

தூக்கமின்மைக் கோளாறுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது. மார்புவலி, தலைவலி போல அது ஒரு நோயின் அறிகுறிதானே தவிர அதுவே ஒரு நோயல்ல. ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமான காரணிக் கலவை தூங்க விடாமல் தடுக்கிறது. அந்தக் கலவையில் உடல் சம்பந்தப்பட்டவை, உள்ளம் சம்பந்தப்பட்டவை, தீயப் பழக்கங்கள், உட்கொண்ட மருந்துகள் எனப் பல காரணிகள் இருக்கலாம்.

கண்டம் விட்டுக் கண்டம் பயணிக்கிற விமானப் பயணிகளுக்கு ஏற்படுகிற கால மயக்கம் (ஜெட் லேக்), மேலதிகாரியுடனான மனவேறுபாடு, நாளை எழுதப்போகிற தேர்வு அல்லது எதிர்கொள்ளப்போகிற நேர்காணல் பற்றிய அச்சம் போன்றவைத் தற்காலிகமாக ஓரிரு நாள்களுக்குத் தூக்கம் வராமல் தடுக்கும். உறவினர் மரணம், காதல் தோல்வி, மணமுறிவு, உடல் நலக்குலைவு போன்றவற்றால் சில வாரங்களுக்கு நீடிக்கிற தூக்கமின்மை சற்றுத் தீவிரமானது. சில உடல் கோளாறுகளால் மாதக் கணக்கில் தூங்க முடியாமல் போவது மிகத் தீவிரமானது.

தூக்கம் தொடங்குவதிலும் தொடர்வதிலும் ஏற்படும் குறைபாடுகள் என ஓர் ஆய்வுப் பிரிவே உள்ளது. அதற்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். தூங்குவதும் விழித்திருப்பதும் தூங்கத் தூண்டும் பகுதி, விழிப்பூட்டும் பகுதி என்ற இரு மூளைப் பகுதிகளின் ஆளுகையில் உள்ளன. தூக்கம் வர வேண்டுமானால் முதல் பகுதி இயங்கி மற்ற பகுதி அடங்கிவிட வேண்டும். மன இறுக்கம், மூட்டுவலி, வயிற்றுப்புண், ஒற்றைத் தலைவலி, மூச்சிரைப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, சிறுநீரகக் கோளாறுகள், தைராய்டு கோளாறு, கருவுற்றிருத்தல், முதுமை போன்றவை தூக்கத் தூண்டல் பகுதியை இயங்காமல் தடுக்கிறபோது தூக்கமின்மை விளையும்.

மது, ஊக்க ரசாயனங்கள், வலிமரப்பு மருந்துகள், சில தைராய்டு மருந்துகள், உணர்ச்சி தணிப்பான்கள், கருத்தடை மாத்திரைகள், சோர்வு நீக்கிகள், இதய நோய் மருந்துகள் போன்றவை தூக்கத்தைக் குலைக்கும். மது, தூக்க மாத்திரை போன்றவை தூக்கத்தைத் தூண்டுபவை போலத் தோன்றினாலும் அந்தத் தூக்கம் அடிக்கடிக் கலைவதாகவேயிருக்கும். கலைந்த தூக்கத்தை மீட்டெடுக்க வெகுநேரமாகும்.

அதிகமான இரைச்சல், அதிகக் குளிர், அதிக வெப்பம் ஆகியவை தூக்க விரோதிகள். அளவுக்கு மீறி உண்டாலும், பசி தீராத வகையில் குறைவாகவே உண்டாலும் வயிற்றில் பொருமல் ஏற்பட்டுத் தூக்கம் தடைப்படும். படுக்கப் போகும் முன் உடற்பயிற்சி செய்வது, கடின உழைப்பை மேற்கொள்வது, சாக்லேட், காபி, பாலேடு, டைரோசின் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியவற்றை உண்பது இதயத் துடிப்பை அதிகமாக்கித் தூக்கத்தைக் கெடுக்கும். நினைத்த நேரத்தில் படுப்பதும், எழுந்திருப்பதும் உடலின் தூக்கக் கடிகை அமைப்பைக் குழப்பித் தூக்கத்தைக் குறைக்கும். தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டாலும் தூக்கமின்மை அதிகமாகும்.

விழிப்புக் கடிகை

தூக்கமின்மைக்கான காரணத்தை மருத்துவர், உளவியல் நிபுணர் இருவரும் சேர்ந்துதான் கண்டுபிடிக்க முடியும். உடலிலேயே ஒரு தூக்க விழிப்புச் சுழல் கடிகையுள்ளது. அதை மெல்லமெல்லப் பழக்கி நமக்கு விருப்பமான அல்லது வசதியான நேரத்தில் அமையுமாறு செய்துவிடலாம். காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்து வெய்யிலில் படுமாறு உடலைக் காட்ட வேண்டும். உடலின் தூக்க, விழிப்புக் கடிகை சூரிய வெளிச்சத்தையும் இருளையும் சார்ந்தே இயங்குகிறது. பகலில் அசதி காரணமாக அல்லது உண்ட களைப்பினால் வரும் தூக்கத்தை அரை மணி நேரத்துக்கு அனுமதிப்பது நல்லது.

பாதி இரவில் தூக்கம் கலைந்துவிட்டால் அப்படியே அசையாமல் படுத்திருந்து தூக்கத்தை மீட்க முயல வேண்டும். கண்களை மூடிக்கொண்டு புலனாகும் இருட்டில் பார்வையைக் குவித்தால் சில நிமிஷங்களில் தூக்கம் திரும்பி வந்துவிடும். மனதுக்குள் ஏதாவது ஜெபித்துக்கொள்வதும் பலனளிக்கும். ஒன்று, இரண்டு என எண்ணுவதும் ஏற்புடையது. அடிக்கடி விளக்கை ஏற்றி, மணி என்ன என்று பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.

இவ்வளவுக்கும் பிறகு தூக்கம் வரவில்லையெனில் காலையில் எழுந்ததும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

- கே.என். ராமசந்திரன்,

பேராசிரியர் (ஓய்வு).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x