Published : 26 Sep 2016 09:59 AM
Last Updated : 26 Sep 2016 09:59 AM

தேவை, புதுமைப்பித்தனின் பேனா மை!

அடிமை இந்தியாவில் பிறந்து வளர்ந்து, வறுமையில் சிதைந்து... சுதந்திர இந்தியாவில் புதைந்துபோன புதுமைப்பித்தனைப் பெரிதும் நினைக்க வைத்துவிட்டீர்கள். நெல்லை மாவட்டத்துப் படைப்பாளிகளில், சுய சாதி விமர்சனத்தைத் தம் படைப்புகளில் வீரியமாக வெளிப்படுத்தி, கம்பீரமான ஆளுமைகளாக நின்றவர்கள் இருவர். முதலாமவர், மகாகவி பாரதி. இரண்டாமவர், புதுமைப்பித்தன். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர்கள் இருவரும். பாரதி இறக்கும்போது, புதுமைப்பித்தனுக்கு வயது 15. பாரதியின் நீட்சியாகவே புதுமைப்பித்தன் வாழ்ந்தார்.

இதை புதுமைப்பித்தனின் உரைநடையை ஊன்றிப் படித்தவர்கள் உணர முடியும். எதுகை மோனையை வரிகளுக்குள் செருகிவிட்டால், கவிதை பிறந்து விடும் என்று நம்பிய வெற்றிலைப் பெட்டிக் கவிராயர்கள் வாழ்ந்த காலத்தில், ‘கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே… முட்டாளே இன்னமுமா பாட்டு’ என்று அங்கத விமர்சனச் சாட்டையை அநாயாசமாகச் சுழற்றிய புதுமைப்பித்தனின் பேனா மை மறுபடியும் நமக்கு அவசரத் தேவையாக இருக்கிறது. அதை ‘தி இந்து’ தொடங்கித் தொடர்ந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமைப்பித்தன் வீதி உருவாவதற்கு, சாதுரியமான முன்னெடுப்புகளைச் செய்த, இயற்கை வேளாண் ஆர்வலர் தச்சைராஜா, சார்வாள் கிருஷி, கவிஞர் தேவேந்திரபூபதி ஆகியோரைக் காலம் கவனத்தில் வைத்துக் கைகூப்பி வணங்கும்.

- வே.சங்கர் ராம், அரசுப் பள்ளி ஆசிரியர், சங்கரன்கோவில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x