Last Updated : 31 Jan, 2017 11:02 AM

 

Published : 31 Jan 2017 11:02 AM
Last Updated : 31 Jan 2017 11:02 AM

தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் ஏன்?

சேலத்திலிருந்து வாசகர் ஒருவர் அலைபேசினார். "தமிழகத்துக் குழந்தைகளுக்கு அடுத்த வாரம் ரூபெல்லா, தட்டம்மைத் தடுப்பூசி போடப்போவதாகச் சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், வாட்ஸ்அப்பில், 'இந்தத் தடுப்பூசியைப் போடாதீர்கள்' என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள். என்னைப் போன்ற பெற்றோர் என்ன முடிவெடுப்பது?" என்று கேட்டார். மின்னஞ்சலிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இதே கேள்வியைக் கேட்டிருக்கின்றனர்.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவுகள் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 6 முதல் 28 வரை 9 மாதம் முதல் 15 வயது வரையிலான சுமார் 1.8 கோடிச் சிறார்களுக்கு அரசு ரூபெல்லா, தட்டம்மை நோய்களுக்கான தடுப்பூசி போடுவதற்குத் தயாராகிவருகிறது. இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டம் இது. இதன் செயல்பாட்டில் கிடைக்கும் பலனைப் பொறுத்து, விரைவிலேயே தேசிய அளவில் இதை விரிவுபடுத்தவும் மத்திய சுகாதாரத் துறை ஆயத்தமாகிவருகிறது.

தடுப்பூசிகளின் அவசியம்

சிறு குழந்தைகளை மிக எளிதாகத் தாக்கக்கூடியது தட்டம்மை. நாட்டில் வருடத்துக்கு 50 ஆயிரம் குழந்தைகள் வரை தட்டம்மையால் இறக்கிறார்கள். தட்டம்மைக்கு எனத் தனி சிகிச்சை இல்லை. அதுவாகத்தான் குணமாக வேண்டும் அல்லது தட்டம்மைத் தடுப்பூசி போட்டு இதை வர விடாமல் தடுக்க வேண்டும்.

ரூபெல்லா என்பது குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் பாதிக்கும் அம்மை நோய். இது, தட்டம்மையைவிடக் கொடுமையானது. கர்ப்பிணிக்கு இந்த நோய் வந்தால், பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வை இல்லாமை, காது கேளாமை, இதயக் கோளாறுகள், மனவளர்ச்சிக் குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படும். கருச்சிதைவு அடையவும், குழந்தை இறந்தே பிறக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கும் சிகிச்சை இல்லை. தடுப்பூசிதான் இருக்கிறது.

இப்போது நாட்டில் குழந்தைகளின் மரண விகிதம் அதிகமாக இருப்பதற்கு இவை இரண்டும் முக்கியக் காரணிகளில் இருக்கிறது. குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகள் போடப்படாததுதான் இந்த அவலத்துக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தடுப்பூசி அனைத்துக் குழந்தைகளுக்கும் போய்ச் சேர்ந்தால், நாட்டில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

நடைமுறையில் உள்ள தடுப்பூசிதான்

இந்தத் தடுப்பூசியைப் பரிசோதனை முறையில் போடப்போவதாகவும் எலிகளைப் போல நம் குழந்தைகளிடம் பரிசோதிக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள் சிலர். இது தவறு. இந்தத் தடுப்பூசியை உலகில் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு ஏற்கெனவே போட்டிருக்கிறார்கள். நம் நாட்டிலும் தனியார் மருத்துவமனைகள் கடந்த பல வருடங்களாக 'எம்எம்ஆர்' (MMR) என்ற பெயரில் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியைப் போட்டுவருகின்றன. இதுவரை ஆட்சேபத்துக்குரிய பக்கவிளைவுகள் எதுவும் வந்ததில்லை. ரூ.90 மதிப்புள்ள இந்தத் தடுப்பூசியை அரசு கட்டணம் இல்லாமல்தான் போடப்போகிறது. மேலும், இந்தத் தடுப்பூசியைத் தயாரிப்பது வெளிநாட்டு நிறுவனம் அல்ல; இந்திய மருந்து நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்தத் தடுப்பூசித் திட்டத்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு, நம் நாட்டில் 2000-ல் பல மாநிலங்களில் தொடங்கப்பட்டு, இத்தடுப்பூசியின் தரம், செயல்திறன், பாதுகாப்பு அம்சம் எனப் பல்வேறு நிலைகளில் பரிசோதிக்கப்பட்டு, 'இது பாதுகாப்பான தடுப்பூசி; எந்தவித ஆபத்தும் இல்லை' என்று உறுதியளித்த பிறகுதான், இந்திய மருத்துவ ஆணையம் இத்தடுப்பூசியைப் போடுவதற்கு சம்மதித்துள்ளது.

தடுப்பூசிகளின் பலன்கள்

இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் 1796-ல் கண்டுபிடித்த பெரியம்மைக்கான தடுப்பூசியின் பலனால் 1979-ல் பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது. மக்கள் கொத்துக் கொத்தாக இறந்த கொடுமையை ஒழித்த முதல் தடுப்பூசி இது. தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் அதன் பயன்பாட்டிலும் கிடைத்த முதல் வெற்றியும் இதுதான். இதைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, மிகவும் பாதுகாப்பான தடுப்பூசிகள் இப்போது தயாரிக்கப்பட்டு, நல்ல பலன்களும் பெற்றுவருகிறோம். எடுத்துக்காட்டாக, போலியோ நோய் கூடிய விரைவில் உலகிலிருந்து விடைபெறப்போகிறது. பிளேக், காலரா போன்றவை கொள்ளை நோயாகப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை முறையாகப் பயன்படுத்தினால் 27 தொற்றுநோய்களைத் தடுக்க முடிகிறது. மக்களின் பொது ஆரோக்கியம் காக்கப்படுகிறது; மனித குலத்தின் ஆயுள் அதிகரித்துள்ளது; அங்கஹீன பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட மறுத்தால்?

2008 வரை கேரளாவில் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்ட தாகக் கருதப்பட்ட டிப்தீரியா, சென்ற ஆண்டில் மீண்டும் மக்களைத் தாக்கியதால், பலரும் மரணம் அடைந்தனர். இதற்குக் காரணம், அங்கு பல மாவட்டங்களில் குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போடப்படவில்லை என்றும், அப்படியே முதன்மைத் தடுப்பூசியைப் போட்டிருந்தாலும் மீண்டும் போடப்பட வேண்டிய ஊக்குவிப்பு ஊசி பலருக்குப் போடப்படவில்லை எனவும் தெரியவந்தது. இதுபோல், கனடாவில் 1974-ல் தட்டம்மை மீண்டும் தலைதூக்கியது. காரணம், அங்கு சில பகுதிகளில் தட்டம்மைத் தடுப்பூசி போடப்படவில்லை என்பதுதான்.

போலியோ இல்லாத இந்தியா!

தடுப்பூசியின் நல்ல பலன்களை இந்தியா கண்கூடாகக் கண்டிருக்கிறது. பெரியம்மைத் தடுப்பூசியின் மூலம் 1977-ல் இந்தியாவில் பெரியம்மை நோயை ஒழித்துவிட்டோம். 1978-ல் விரிவாக்கப்பட்ட தேசியத் தடுப்பூசித் திட்டம் (வரையறை செய்யப்பட்டது. இதன்படி, இந்தியாவில் எல்லா ஊர்களிலும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிசிஜி, முத்தடுப்பு ஊசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹிப் இன்ஃபுளூயென்சா தடுப்பூசி, தட்டம்மைத் தடுப்பூசி, போலியோ தடுப்புச் சொட்டுமருந்து ஆகியவை போடுவது வழக்கத்துக்கு வந்தது. 1983-ல் இந்தத் திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு 'டெட்டனஸ் டாக்சாய்டு' தடுப்பூசி சேர்த்துக்கொள்ளப்பட்டது. போலியோ நோயை அடியோடு ஒழிக்க 1985-ல் 'போலியோ பிளஸ்' எனும் தடுப்பு மருந்துத் திட்டம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் பலனாக போலியோவைப் பெரிய அளவில் ஒழித்திருக்கிறோம்.

புதிய தடுப்பூசிகள்

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் தேசியத் தடுப்பூசித் திட்டத்தில் மேலும் பல தடுப்பூசிகள் சேர்க்கப்பட்டன. இதன்படி இப்போது அரசு மருத்துவமனைகளில் பத்து நோய்களுக்கு இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இப்போது இத்திட்டத்தில் ரூபெல்லா, தட்டம்மைத் தடுப்பூசியும் சேர்ந்துள்ளது. குழந்தையின் 9-வது மாதத்தில் ஒருமுறையும் 16-24 மாதங்களுக்குள் ஒருமுறையும் இதைப் போட்டுக்கொண்டால், தட்டம்மையும் ரூபெல்லாவும் அதன் வாழ்நாளில் எப்போதும் வராது. ஏற்கெனவே குழந்தைக்குத் தட்டம்மைத் தடுப் பூசியைப் போட்டிருந்தாலும், இப்போது இதையும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு இந்த நோய்களிடமிருந்து முழுப் பாதுகாப்பு கிடைக்கும். இதுவரை தட்டம்மைக்கு எனத் தனியாகப் போடப்பட்ட தடுப்பூசி இனிமேல் போட வேண்டியதில்லை.

எல்லா வயதினருக்கும் தடுப்பூசி

தொடக்கத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவது வழக்கத்தில் இருந்தது. இப்போது இள வயதினர், முதியவர் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவருகிறது. இதன் மூலம் உலக அளவில் பல்வேறு தொற்றுநோய்களையும் புற்றுநோய்களையும் ஒழித்து, மக்களின் ஆரோக்கியத்தை இன்னும் நன்றாக மேம்படுத்த முடியும் என்று நம்புகிறது, உலக சுகாதார நிறுவனம். கண்டுபிடிப்புகளைத் தாண்டி இது சாத்தியப்பட உடனடித் தேவை ஒன்றுதான், அது பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும்!

-கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x