Last Updated : 28 Apr, 2017 09:20 AM

 

Published : 28 Apr 2017 09:20 AM
Last Updated : 28 Apr 2017 09:20 AM

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்து வந்த பாதை

நாட்டின் சமூக, அரசியல் வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் எந்த வழக்கையும் முடித்து வைப்பதற்குப் போதுமான அதிகபட்ச அவகாசம் 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும். ஆனால், பாபர் மசூதி வழக்கைத் தொடங்கி வைப்பதற்கே 25 ஆண்டுகளாகியிருக்கின்றன. அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவு அளிக்கும் அதிகாரப்படி, உச்ச நீதிமன்றம் ‘முழு நீதியை’ வழங்குவதற்குத் தகுதியுள்ள வழக்கு ஏதேனும் உண்டென்றால், அது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்காகத்தான் இருக்க முடியும்.

சில அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு ‘சதி செய்து’ புரிந்த குற்றச் செயல் இது. இதை அவர்கள் ‘அரசியல் குற்றம்’ என்று கௌரவமாகச் சொல்லிக்கொள்கின்றனர். ‘வானமே இடிந்து விழுந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டிய வழக்கு இது’ என்று இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்துமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறார். இந்த வழக்கை முறையாகவும் விரைவாகவும் நடத்தத் தவறிய உத்தரப் பிரதேச அரசு, மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), நீதித் துறை ஆகியவற்றின் மெத்தனத்தை சரிசெய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் இப்போது 142-வது ஷரத்தைத் துணைக்கு அழைத்திருக்கிறது.

நடைமுறைக் குறைபாடு

மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை லக்னோ நகர சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அந்த ஆணையானது ‘அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் ஒப்புதல் பெற்று வெளியிடப்படவில்லை’ என்ற காரணத்துக்காக எல்.கே.அத்வானி, எம்.எம். ஜோஷி உள்ளிட்ட 8 பேர் மீது சுமத்தப்பட்ட சதி குற்றச்சாட்டு, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தராமல் வீணாகிவிட்டது. அந்த நடைமுறைக் குறைபாட்டை உயர் நீதிமன்றம் அப்போதே சரிசெய்திருக்கலாம்.

2001 ஜூன் 16-ல், இந்தக் குறைபாட்டைச் சரிசெய்யுமாறு உத்தர பிரதேச அரசை சிபிஐ கேட்டுக்கொண்டது. ஒன்றே கால் ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, மாநில அரசு இதை 2002 செப்டம்பர் 28-ல் நிராகரித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பாஜகவின் ராஜ்நாத் சிங் முதலமைச்சராக இருந்தார். சிறிது காலத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடந்தது. அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி தலைமையில் ஆட்சி நடந்தது. அந்த ஆட்சிக்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த 2004 மே மாதம் வரையிலும் மட்டுமல்ல, அதற்குப் பிறகும்கூட இந்த நிராகரிப்புக்கு எதிராக, சிபிஐயும் முறையிடவில்லை.

இந்த ஆண்டு ஏப்ரல் 19-ல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அறிவிப்பாணை குறைபாட்டைச் சரிசெய்ய மாநில அரசுத் தவறியதை எதிர்த்து சிபிஐயும் வழக்காடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அத்வானி மற்றும் ஏழு பேர் மீதான வழக்கை ரேபரேலியிலிருந்து லக்னோ நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது. தன்னைக் கலந்தாலோசிக்காமல் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையைச் செல்லாது என்று 2001 பிப்ரவரி 12-ல் அறிவித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், உடனடியாகவே அதைச் சரிசெய்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியது.

அனைத்துத் தரப்பிலும் தாமதம்

இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு எப்படிச் சென்றது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். லக்னோ உயர் நீதிமன்றம் 2001 மே 4-ல் வெளியிட்ட ஆணை மூலம் இந்த வழக்கு விசாரணையிலிருந்து அத்வானி அவருடன் சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 21 பேரை விலக்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்தது. மசூதியை இடித்த ‘எண்ணிலடங்காத கர சேவகர்கள்’ ஒரு குழுவினர்; அவர்களைத் தூண்டிவிட்ட ‘எஞ்சியவர்கள் 21 பேர்’ என்று பிரித்தது. 21 பேர் மீதான வழக்கைக் கைவிட்ட சிறப்பு நீதிமன்றம், எண்ணிலடங்காத கர சேவகர்கள் மீதான விசாரணை தொடரலாம் என்றது. இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மறுபரிசீலனை கோரும் மனு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 9 ஆண்டுகள் விசாரிக்கப்படாமலேயே இருந்து பிறகு 2010 மே 22-ல் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ நீண்ட கால தாமதத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவைப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றமும் கணிசமான காலத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் 6-ல் நீதிபதிகள் பி.சி. கோஷ், நாரிமன் அடங்கிய அமர்வுக்கு முன்பு இந்த வழக்கு வந்த பிறகுதான் விசாரணை வேகம் எடுத்திருக்கிறது. மனுவை விசாரித்த அன்றே நீதிபதிகள் வாய்மொழியாகத் தெரிவித்த சில கருத்துகள் அவர்களுடைய மனநிலையை உணர்த்தின. பிறகு, ஒன்றரை மாதங்களுக்கெல்லாம் முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே வேளையில், 2001 மே 4 முதல் அடுத்த 16 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு மேல் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் இருந்தது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

வழக்கின் தன்மை

அரசியல் சட்டம் உறுதியளிக்கும் மதச்சார்பற்ற இழையை அறுக்கும் கொடிய குற்றமாக மசூதி இடிப்பைக் கருதுவதாக, உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பதிவுசெய்திருக்கிறது. 2013-ல் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு இந்த வழக்கு தொடர்பாகக் கொண்டிருந்த கண்ணோட்டமே வேறு. சிபிஐக்காக அப்போது மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் ஆஜரானார். “மசூதி இடிப்பு குற்றச் செயல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று அவர் கோரினார். எந்தத் தனி நபரையும் அவர் குற்றவாளி என்று குறிப்பிடவில்லை. ஆனாலும் அப்படிக் கூறியதற்காக அவர் கண்டிக்கப்பட்டார். “இந்த வழக்கு விசாரணை தாமதத்துக்கு சிபிஐயும் காரணம். இதைத் தேசிய குற்றம் என்றோ, தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றோ கூற வேண்டாம். இந்த வழக்கு எப்படிப்பட்டது என்று நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. நாங்களோ, விசாரணை நீதிமன்றமோ இந்த வழக்கு பற்றித் தீர்மானிக்கும் முன்னர் நீங்களாக கருத்து எதையும் கூற வேண்டாம்” என்று கண்டிப்புடன் கூறியது.

அத்வானியின் பங்கு என்ன?

இந்த வழக்கில், இதற்குத் தொடர்பான இன்னொரு விசாரணையும் இருப்பது உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தாலும், அதைக் குறிப்பிடுவது முக்கியம். 1992 டிசம்பர் 6-ல் அயோத்தியில் கூடியிருந்த கரசேவகர்களுக்கு உணர்ச்சி உண்டாகும்படி பேசியதாக எல்.கே.அத்வானி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை, ரேபரேலியில் இருந்த தனி நீதிமன்றம் 2003 செப்டம்பர் 19-ல் விடுவித்தது. அப்போது அவர் துணைப் பிரதமராகப் பதவி வகித்தார். “அத்வானிக்கும் இதர 7 பேருக்கும் இச்செயலில் இருந்த பங்கில் வித்தியாசம் இருக்கிறது” என்றது தனி நீதிமன்றம். அந்த 7 பேரில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியும் அடக்கம். உடனே ஜோஷி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அத்துடன், “மசூதி இடிப்பில் அத்வானிக்கும் எங்களுக்கும் வெவ்வேறு பங்கு இருப்பதாகக் கருதுவதில் நியாயமே இல்லை” என்றார்.

அந்தத் தீர்ப்பு அப்படியே கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் ரேபரேலி நீதிமன்றத்தில் அத்வானிக்கு எதிராக வழக்கு இருந்திருக்காது.. அதை உச்ச நீதிமன்றம் இப்போது லக்னோவுக்கு மாற்றியிருக்கவும் முடியாது, சதி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சேர்த்திருக்கவும் முடியாது. அத்வானியை விடுவித்து ரேபரேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி 2005 ஜூலை 6-ல் ரத்து செய்தார். இதனால்தான் அத்வானி, ஜோஷி மற்றும் 6 பேர் மீண்டும் சதி குற்றச்சாட்டின் பேரில் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.

- ராஜு ராமசந்திரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்,

© ‘தி இந்து’ ஆங்கிலம். சுருக்கமாகத் தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x