Last Updated : 10 May, 2017 09:32 AM

 

Published : 10 May 2017 09:32 AM
Last Updated : 10 May 2017 09:32 AM

காஷ்மீரின் முடிவில்லாத துயரம்

இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. காஷ்மீரின் நகர் மக்களவை இடைத்தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறையும், மிகக் குறைந்த வாக்குகளே பதிவானதும் புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் பயனுள்ளதாக இருப்பதற்குப் பதில் வசைமாரிக்கே வழிவகுத்தன. உண்மையான பிரச்சினைகளைத் திரையிட்டு மூடவே வசைமாரிகள் வழிசெய்யும்.

காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு எதிரெதிர் குழுக்கள்தான் இருக்கின்றன. பிரதான இந்தியாவில் இருப்பவர்களில் பலரும் காஷ்மீரிகளை பாகிஸ்தான் ஆதரவு வஹாபியர்களாகவும், பயங்கரவாத ஆதரவாளர்களாகவும் பார்க்கின்றனர்; பள்ளத்தாக்கில் இருப்பவர்களோ இந்தியர்கள் வகுப்புவாத வெறியர்கள் என்றே கருதுகின்றனர். இருவருடைய கருத்துகளிலும் எள் முனையளவுக்கு – எள் முனையளவுதான் – உண்மை இருக்கிறது. பெரும்பாலான காஷ்மீரிகள் சுதந்திரமாக, அமைதியாக, கண்ணியமாக, பெரும்பாலான இந்தியர்கள் வாழ்வதைப் போலவே வாழ விரும்புகின்றனர். இதை மத்தியில் ஆளும் அரசும், மாநில அரசும் தங்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

தீவிரத்தை நோக்கி

இந்தியர்கள் மதவெறியர்கள், காஷ்மீரிகள் பாகிஸ்தான் ஆதரவு வஹாபியர்கள் என்ற பரஸ்பர வசைப் பிரச்சாரங்கள் மேலும் பலரைத் தீவிரவாதிகளாக்கவே உதவும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிலரிடம், ‘இஸ்லாமிய அரசு’ பாணி ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற தவறான ஆசை உருவாகியிருப்பதை மறுக்க முடியாது. கல் வீச்சுகளை யாரும் திட்டமிட்டுத் தூண்டுவதில்லை. இருபதாண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட இப்போது பள்ளத்தாக்கில் கோபம் அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமானது பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தபோது, சமாதானப் பேச்சுகளைத் தொடங்குவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதுதான். மாநிலத்தில் நேர்மையான - மக்களுக்குப் பொறுப்பான நிர்வாகம் ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணம்.

ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநிலப் போலீஸ் படை என்ற மூன்றை மட்டுமே இந்திய அரசின் வெளியில் தெரியும் முகமாக பள்ளத்தாக்கில் காட்டிக்கொண்டிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கண்ணில் தென்படுவதே இல்லை. மக்களுடைய ஆத்திரத்தை, பாதுகாப்புப் படையினர்தான் நேரில் எதிர்கொள்கின்றனர். பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கல்லடிபடும் அவர்கள் மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதில் வியப்பேதும் இல்லை. இப்படிச் சொல்வதால் மனித உரிமைகளை மீறுவது சரி என்றோ, நியாயம் என்றோ நாம் கூறவில்லை. அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால்தான் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவை குறையும். உள்நாட்டுப் பூசலைத் தீர்க்க ராணுவத்தைத் துணைக்கு அழைத்து அவர்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறோம்.

மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் ராணுவத்தை நாம் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். அதற்குப் பிறகு மாநில அரசு நிர்வாகமும் மக்களுடைய பிரதிநிதிகளும்தான் பொறுப்பை ஏற்க வேண்டும்.

சமரசமும் வன்முறையும்

சமரச நடவடிக்கைகள் தொடங்கப்பட்டால் கல் எறிதல் உள்ளிட்ட வன்செயல்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது நம்முடைய கடந்த கால அனுபவம்.

2010-ல் மக்களுடன் பேச்சு நடத்த அனுப்பப்பட்ட மூன்று மத்தியஸ்தர்களில் நானும் ஒருத்தி. காஷ்மீரிகளுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பது, அரசியல்ரீதியாகப் பேச்சு நடத்துவது, பாதுகாப்புப் படையினரின் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைச் செய்வது என்று பல்வேறு தளங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நிலைமை மேம்பட்டதல்லாமல் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் இதர இந்தியாவுக்கும் இடையே உறவு மேம்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எங்களைப் பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, காஷ்மீர் மாநில அரசு என்ற மூன்றுமே எங்களுடைய அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தவறின. அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக எங்களுடைய பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. எங்களுடைய முயற்சிக்கு மட்டுமல்ல, எங்களிடம் கருத்து தெரிவித்த சில ஆயிரம் மக்களுக்கும் அது பெருத்த பின்னடைவைத்தான் ஏற்படுத்தியது.

பொய்த்துப்போன நம்பிக்கை

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஒன்றையொன்று காரசாரமாகத் தாக்கிப் பிரச்சாரம் செய்தன. எந்தக் கட்சிக்கும் அல்லது அணிக்கும் பெரும்பான்மை கிட்டாதபோது இவ்விரு கட்சிகளும் பொதுச் செயல்திட்டம் குறித்துப் பேசி உடன்பாட்டுக்கு வந்து ஆட்சியமைத்தபோது இனி சமரச நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் என்ற எந்தப் பகுதியையும் புறக்கணித்துவிடாமல் எல்லாப் பகுதிகளின் முன்னேற்றத்துக்குமான திட்டங்களைக் கூட்டணி ஏற்றது. இப்போதும்கூட அவற்றை அமல்படுத்தினால் மக்களிடையே நம்பிக்கை ஏற்படும்.

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போரைத் தூண்டிவிட 1947 முதலே பாகிஸ்தான் முயற்சித்து வந்தது அதில் வெற்றி கிட்டவில்லை. 1980-களின் பிற்பகுதியிலிருந்து அவர்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவு தோன்ற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு (காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து) செல்லாக்காசாகிவிட்டது. 1988-ல் மாநில நிர்வாகத்தில் மத்திய அரசு அடிக்கடி குறுக்கிட்டதால் ஆயிரக்கணக்கான காஷ்மீரி இளைஞர்கள் ஆயுதம் எடுத்து கிளர்ச்சியில் இறங்கினர். அன்றிலிருந்து பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அப்படியும் தேர்தல்களை நடத்துவதில் வெற்றி அடைந்துவந்தோம். தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்தன. அரசியல் சமரசம் காண்பதில் கண்ட தோல்வியால் பாகிஸ்தானின் கை வலுவடைந்தது. அது இப்போதும் நீடிக்கிறது.

இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதித்த முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, விரைவிலேயே அரசியல் பேச்சுகள் தொடங்கும் ஆனால் அதற்கு முன் அமைதி ஏற்பட வேண்டும் என்றார். இப்படி நிபந்தனை விதித்து, அமைதி ஏற்படட்டும் என்று காத்திருக்கவே கூடாது.

அரசியல் தீர்வுக்கான பேச்சு என்றால் அதை யாருடன் நடத்தப் போகிறது என்று தெளிவுபடுத்தப்படவில்லை. பிரிவினை கேட்பவர்களுடனும் சுதந்திரம் கோருபவர்களுடனும் பேசமாட்டோம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி சில நாள்களுக்கு முன்னால் அறிவித்தார். ஹூரியத், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகியோரை மனதில் கொண்டுதான் பேசியிருக்கிறார். இப்படி அறிவித்தால் பேச்சே தொடங்காது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி இருவரும் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். பிறகு வந்த பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் அதையே பின்பற்றினர். பாகிஸ்தானுக்கும் நமக்கும் பாலமாக இருக்க ஹுரியத்தையே பயன்படுத்துவது என்ற புத்திசாலித்தனமான முடிவை வாஜ்பாய் எடுத்தார். ஹுரியத் வந்து பேசும்போது, மாட்டேன் என்று பாகிஸ்தானால் சொல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக கெரில்லாக்களுக்குப் பயிற்சி தருவது, ஆயுதங்களை வழங்குவது, பாதுகாப்பான புகலிடங்களை ஏற்படுத்துவது ஆகிய செயல்களைப் பாகிஸ்தானால் நிறுத்த முடியவில்லை. அதே சமயம், அவர்களை அடக்கி வாசிக்குமாறு கட்டுப்படுத்தியது. மக்களுடைய ஆதரவு இல்லாததால் தீவிரவாதிகளின் செயல்களும் கட்டுக்குள் வந்தன.

மனித உரிமைகள்

ஹுரியத் மற்றும் அதிருப்தியாளர் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுடன் சமரசம் காண முற்பட்டபோது படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மக்கள் மாநாட்டு அமைப்பின் தலைவர் அப்துல் கனி லோன், ‘ஆயுதமேந்தி போராடும் காலம் முடிந்துவிட்டது’ என்று அறிவித்தார் உடனே ஐ.எஸ்.ஐ.யால் படுகொலை செய்யப்பட்டார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி மஜீத் தர், சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பேசுகிறார் என்று அறிந்ததும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் பேசுகிறார் என்பதற்காக ஹுரியத் தலைவர் ஃபசல் ஹக் குரேஷியை உள்ளூர் தீவிரவாதிகள் சுட்டு படுகாயப்படுத்தினர். ஹுரியத் அமைப்பிலேயே பலர் இப்போதும் பேச்சுக்கு வரக்கூடும். மனித உரிமை மீறல்களை நிறுத்த வழி காண்பதுடன், அரசியல் ரீதியாக அவர்களை அணுகினால்தான் முயற்சிகள் பலன் தரும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை ஏற்படுத்த விரும்பினால் அதை படைபலத்தால் மட்டும் சாதிக்க முடியாது; அரசின் மீது அதிருப்தியாக இருப்பவர்களை அழைத்துப் பேசுவதுதான் ஒரே வழி!

ராதா குமார்-கட்டுரையாளர் எழுத்தாளர், அரசியல் விமர்சகர்

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x