Published : 09 Aug 2016 09:42 AM
Last Updated : 09 Aug 2016 09:42 AM

அறிவியல் அறிவோம்!- ஹலோ, யாராச்சும் இருக்கீங்களா?

ரொம்ப தூரம் ஆர்வமாகப் பயணம் செய்து ஓர் ஊருக்குள் நுழைகிறோம். அங்கே தெருக்களும், வீடுகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு ஆள்கூடத் தென்படவில்லை என்றால் திகிலாக இருக்கும் இல்லையா? 2,000 கோடி விண்மீன்களையும் (சூரியன்), அவற்றைச் சுற்றிவரும் கோடானுகோடி கோள்களையும் கொண்ட இந்த பிரம்மாண்டமான பால்வெளி மண்டலத்தில் (Galaxy) பூமியைத் தவிர, வேறெங்கும் மனித அரவமே கேட்கவில்லை என்றால், அதுவும்கூடத் திகில்தானே?

ஒன்பது கோள்களைக் கொண்ட சூரிய குடும்பத்தில், ஒரே ஒரு கிரகம் மட்டும் உயிரினங்கள் வாழத் தகுதியாக உள்ளதல்லவா? புள்ளியியல் கணக்குப்படி பார்த்தால், ஒட்டுமொத்தக் கோள்களில் குறைந்தது சில லட்சம் கோள்களிலாவது உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். அதில் சில ஆயிரம் கோள்களிலாவது ஆறறிவு படைத்த உயிரினங்கள் உருவாகி, நம்மைப் போல எதையாவது ஆராய்ந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வேற்றுக்கிரகவாசிகளும் நம்மைத் தொடர்பு கொள்ளவில்லை என்பது புரியாத புதிர். இதைச் சொன்ன அறிவியலாளர் பெயரில் இது ‘பெர்மி புதிர்’ என்றே அழைக்கப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இருக்கிறது என்றும், பூமியையே ஏனைய கோள்களும், சூரியனும், விண்மீன்களும் சுற்றிவருகின்றன என்றும் கருதிக்கொண்டிருந்தோம். அதில் பூமி மட்டுமே தனிச் சிறப்பு மிக்கது, எனவேதான் இங்கு உயிரினங்கள் வாழ்கின்றன என்றும் பெருமைப் பட்டுக்கொண்டோம். எப்போது வானில் தெரிகிற நட்சத்திரங்கள் எல்லாமே தனித்தனி சூரியன்கள் என்றும், அதனைச் சுற்றியும் புறக்கோள்கள் இருக்கின்றன என்றும் கண்டுபிடித்தோமோ அன்றைக்கே பூமியைப் பற்றிய நமது தற்பெருமைகள் எல்லாம் உடைந்துபோயின. ‘உயர்வற்ற பூமிக்கொள்கை’ (mediocrity principle) தோன்றியது. அதன்படி, பூமியைப் போன்ற மற்ற கோள்களிலும் வேற்றுக் கிரகவாசிகள் வசிப்பார்கள் என்ற கருத்தும் உருவானது.

புறக் கிரகங்களில் யாருமே இல்லை என்கிறது பெர்மி புதிர். பூமியைப் போல மற்ற புறக் கிரகங்கள் சிலவற்றிலும் உயிரினங்கள் இருக்கக்கூடும் என்கிறது உயர்வற்ற பூமிக் கொள்கை. இவ்விரண்டு கொள்கைகளும் முரண் படுகிறது போலத் தோன்றுகிறதல்லவா? இதற்கு விடை காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நியூயார்க்கில் உள்ள கார்நெல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சமீபத்தில் அமெரிக்க விண்வெளி சங்கக் கூட்டத்தில், ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன்படி, “நாம் அனுப்பிய ரேடியோ அலைகள் இன்னும் விண்மீன்களை எட்டவில்லை. பூமியைச் சுற்றி எட்டுத் திசையிலும் வெறும் 80 ஒளியாண்டுகளே (ஒரு ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவே ஒளியாண்டு) அவை பயணித்துள்ளன. அந்த எல்லைக்குள் வெறுமனே 8,531 விண்மீன்களும், 3,555 பூமி போன்ற கோள்களும் மட்டுமே இருப்பதால், அவற்றை மட்டுமே ரேடியோ அலைகள் எட்டி யிருக்கும். இது பால்வெளி வீதியின் மொத்தப் பரப்பில் லட்சத்தில் ஒரு பங்குதான். 1500 ஆண்டுகள் கழித்துத்தான் நமது ரேடியோ அலைகள் பெரும்பாலான கிரகங்களுக்கு எட்டி, அங்கிருந்து யாராவது நம்மைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்கள். அதாவது பெர்மி புதிர், உயர்வற்ற பூமிக்கொள்கை இரண்டையும் இணைத்து புள்ளியியல் அடிப்படையில் இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

எப்படியும் 1,500 வருடங்களுக்குள் நமது ரேடியோ அலையைக் கேட்டுவிட்டு, எட்டுக் கண் மனிதனோ, பச்சை ரத்தம் கொண்ட வேற்றுக்கிரகவாசியோ, ‘‘ஹலோ! சூரிய குடும்பத்து பூமியில் யாராவது இருக்கீங்களா?” என்று விசாரிக்கக்கூடும். அதுவரை காத்திருப்போம்.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி.

- தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x