Last Updated : 26 Oct, 2014 11:48 AM

 

Published : 26 Oct 2014 11:48 AM
Last Updated : 26 Oct 2014 11:48 AM

யார் தலைசிறந்த முதல்வர்?

நடந்து முடிந்த தேர்தலுக்கு மூன்றாண்டுகள் முன்னரே ஆச்சரியமான அந்த விஷயம் நடந்தது. அதாவது, இந்தியர்கள் அடுத்த பிரதமர் யார் என்று பேச ஆரம்பித்திருந்தார்கள். மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி என்று நானும் ஏராளமான விவாதங்களுக்காகப் பறந்துகொண்டிருந்தேன். எல்லா விவாதங்களுமே மோடி அல்லது ராகுல் என்ற வகையிலேயே இருந்தன. பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் எப்போது போவார் என்று மத்தியதர வர்க்கம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது. அவரைவிட வயதில் இளைய, செயல்துடிப்புமிக்க ஒருவர் பிரதமராக வர வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும், ஊழலை ஒழிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அந்த வேகத்தையாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்திலே இருந்தது.

அதிக மாற்றத்தை யார் தருவார் பிரதமரா, முதல்வரா?

இந்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், எல்லாமே தேசியப் பிரச்சினைகள் குறித்தே இருந்தன. கொச்சியிலிருந்தபோது கேரளத்தைப் பற்றியோ, மும்பையிலிருந்தபோது மகாராஷ்டிரத்தைப் பற்றியோ யாரும் என்னிடம் எதையும் கேட்கவில்லை. இந்தியா என்பது 29 மாநிலங்களைக் கொண்டது, மாநிலங்களில் சில பரப்பளவிலோ, மக்கள் தொகையிலோ சில முக்கியமான ஐரோப்பிய நாடு களைவிடப் பெரியது. இருப்பினும் 2012, 2013 ஆகிய இரு ஆண்டுகளிலும் விவாதங்கள் அனைத்தும் டெல்லி அரசியலையே மையமாகக் கொண்டிருந்தன.

யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் மோடியையா, ராகுலையா என்று என்னிடம் கேட்டபோது அவ்வாறு தேர்வுசெய்வதற்கு மறுத்துவிட்டேன். ராகுல்காந்தி சோம்பல் மிகுந்தவராகவும் பொறுப்புகளை ஏற்கத் தயங்குபவராகவும் தெரிந்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் கலாச்சாரம் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்திவந்தது. இந்தியாவுக்கென்று மக்களைக் கவரக்கூடிய, சரிவிலிருந்து மீட்கக்கூடிய ஒரு பிரதமரைத் தேர்வுசெய்வதைவிட நேர்மையுள்ள, நிர்வாகத் திறமைமிக்க, மக்கள் மீது கரிசனம் உள்ள சில முதலமைச்சர்கள் தேவை என்றே நினைப்பதால் பிரதமர் பதவிக்கு ஒருவரைத் தேர்வுசெய்வதில் நாட்டமில்லை என்று என்னுடைய நிலையை விளக்கினேன். கல்வி, சட்டம் - ஒழுங்கு, சுகாதாரம் போன்றவை மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருப்பவை. பொருளாதார தாராளமயம் காரணமாக தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் பொறுப்புகள் மாநில அரசுகளுக்கு அதிகரித்துவிட்டன. எனவே டெல்லியைவிட மாநிலத் தலைநகரங்களில்தான் நல்ல தலைமை ஏற்படுவது அவசியம் என்பதே என்னுடைய இந்த எண்ணத்துக்குக் காரணம்.

கூட்டாட்சித் தத்துவத்தின் இந்த மையக் கருவை என்னுடைய அரசியல் அணுகுமுறையாகக் கொண்டு, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந் நாட்டை ஆண்ட மிகச் சிறந்த முதல்வர்கள் சிலரைப் பட்டியலிடலாம் என்று கருதுகிறேன். இது அறிவியல்பூர்வமான ஆய்வு களின் அடிப்படையிலான தேர்வு அல்ல, கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல நேர்ந்தபோது அங்குள்ளவர்கள் வாயிலாகக் கேட்ட தகவல்களிலிருந்து பெறப்பட்ட முடிவு. சமூகக் காரணிகளையும் உள்ளடக்கிய விரிவான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டால் இந்தியா விலேயே மிகவும் முன்னேற்றமடைந்த மாநிலங்கள் கேரளம், தமிழ்நாடு, இமாசலப் பிரதேசம் ஆகியவை. இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முதல்வர்களை எந்த அளவுக்குப் பொறுப்பாக்க முடியும்?

கேரளம்

இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளம் என்பது பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பின்தங்கியிருந்தது. நில உடைமை வெகு சிலரின் கைகளில் குவிந்திருந்தது. சாதியப் பாகுபாடு உச்சத்தில் இருந்தது. தொடுவது மட்டும் அல்ல; பார்வையில் படுவதுகூட தீட்டு என்ற நினைப்பு அங்கே இருந்தது. சீர்திருத்தவாதி நாராயண குருவின் சமூக இயக்கமும் இடதுசாரிகளின் அமைப்புரீதியான அரசியல் இயக்கங்களும் கேரளத்தில் நியாயமான சமூக மாற்றங்கள் ஏற்படப் பெரிதும் உதவின. விழிப் புணர்வை ஏற்படுத்திய இந்த இயக்கங்கள் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சும் செயல்பாடும் படித்தவர்களாலும் விழிப்புணர்வு மிக்க மக்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

கேரளத்தை ஆண்ட முதல்வர்களில் மிகச் சிறந்தவர்கள் யார்? இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, சி. அச்சுத மேனன். இ.எம்.எஸ். தன்னுடைய பூர்விக சொத்துகள் அனைத்தையும் பொது நன்மைக்காக விட்டுக்கொடுத்துவிட்டு கொள்கை வழிப்பட்ட துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார் - அந்தத் தியாகமும் எளிமையும் காந்திக்கு மிகவும் உவப்பானவை. ஆட்சியதிகாரங்களை ஜனநாயக முறையில் மையத்தில் குவிப்பதே லெனினியக் கோட்பாடாக இருந்தாலும், முதல்வராக இருந்தபோது அதிகாரங்களைப் பரவலாக்கு வதற்கே நம்பூதிரிபாடு முக்கியத்துவம் தந்தார்.

அச்சுத மேனனும் கம்யூனிஸ்ட்தான். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் அவர். இ.எம்.எஸ்ஸைப் போலவே இவரும் அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல்வாதி. அதே சமயம், அவரைவிடச் சிறப்பாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவர். இவருடைய பதவிக்காலத்தில்தான் கேரளத்தில் நிலச்சீர்திருத்தங்கள் தீவிரமாக அமல்படுத்தப்

பட்டன. அச்சுத மேனன்தான் தரமான சமூக அறிவியல் ஆய்வையும் மாநில நிர்வாகத்தையும் முதல்முறையாக ஒருங்கிணைத்த முதல்வராகத் திகழ்கிறார். மிகச் சிறந்த பொருளாதார அறிஞரான கே.என். ராஜ் தலைமையில் வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் என்ற சமூக அறிவியல் மையத்தை உருவாக்கி அதன் ஆய்வுகள், பரிந்துரைகள்பேரில் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தார்.

தமிழகம்

சமூக முன்னேற்றம், பொருளாதார இயக்கவியல் இரண்டையும் வெற்றிகரமாகக் கலந்து முன்னுக்கு வந்த மாநிலம் தமிழகம். இங்கே நீண்ட காலத்துக்கு அரசியலும் ஆட்சி நிர்வாகமும் பிராமணர்களின் ஆதிக் கத்தில் இருந்தது. பிராமணர்களின் ஆதிக்கநிலை பெரியாராலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருமான காமராஜராலும் தகர்ந்தது. தமிழ்நாட்டின் முதல்வராக 1954 முதல் 1963 வரை காமராஜர் ஆட்சி செய்தபோது மிகத் திறமையாகவும் நேர்மையாகவும் நிர்வாகம் நடைபெற்றது. அவருடைய ஆட்சியின் பல சாதனைகளில் ஒன்றுதான் மதிய உணவு திட்டம்.

1967-ல் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சியின் முதல் இரண்டு முதல்வர்களான சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் சமூக நலத் திட்டங்களையும் மகளிருக்கான சிறப்புச் சட்டங்களையும் இயற்றி மாநிலத்தை நிர்வகித்தனர். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த மாநில அரசுகள் ஊழலில் ஊறித் திளைத்தாலும் (கருணாநிதி தலைமையில் அடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் உட்பட) பொது நிர்வாகம் திறமையாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள், மின் வாரியம் ஆகியவை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப் பாகச் செயல்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் காமராஜரும் அண்ணாவும் இட்ட அடித்தளங்கள்தான்.

இமாசலப் பிரதேசம்

தமிழகம், கேரளம் இரண்டுமே கடலோர மாநிலங்கள். இரண்டுமே தீவிரமான சமூக, அரசியல் இயக்கங்களை எதிர்கொண்டவை. எனவே அவற்றின் சிறந்த நிர்வாகம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. ஆனால் இமாசலப் பிரதேசத்தின் மிகச் சிறப்பான வளர்ச்சியோ ஆழ்ந்து உற்றுநோக்கப்பட வேண்டியது. அந்த மாநிலம் முழுக்க மலைப்பாங்கானது, சுற்றிலும் பிற மாநிலங்களால் சூழப்பட்டது, கடற்கரை கிடையாது. ராஜபுத்திரர்கள்தான் அங்கு ஆதிக்க சக்திகள். அவர்கள் பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள், புதிய சிந்தனைகளையும் லேசில் வரவேற்றுவிடமாட்டார்கள். நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் இமாசலம் தீவிரப் பங்கு எடுத்துக்கொண்டதில்லை.

ஆனாலும், இந்த மாநிலம் கல்வி - குறிப்பாக பெண் கல்வி - சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஆகிய வற்றில் சமீபத்திய ஆண்டுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அந்த மாநிலத்துக்கென்று தனியான வரலாறு ஏதும் எழுதப்படாவிட்டாலும் அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த டாக்டர் ஒய். எஸ். பார்மர் என்று அழைக்கப்பட்ட யஷ்வந்த் சிங் பார்மரின் இருபதாண்டு கால சிறப்பான ஆட்சிதான் இவற்றுக்கெல்லாம் காரணம். அந்த மாநிலம் மத்திய ஆட்சிக்குள்பட்ட யூனியன் பிரதேசமாக இருந்தபோதும் பிறகு 1971-ல் தனி மாநிலமானபோதும் அவர்தான் முதலமைச்சராகப் பதவி வகித்தார். கல்விக்கும், சாலைகள் அமைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தார். சாலைகள் அமைக்கப்பட்டதால் மாநிலத்தின் தோட்டத் தொழில்துறைக்கு உத்வேகம் கிடைத்தது. சந்தையை எளிதில் அடைய முடிந்தது. சிறிய அளவு நிலம் வைத் திருந்தவர்களும் பணம் சம்பாதிக்க முடிந்தது.

மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிர்வாகத்தில் அவர் ஆர்வம் செலுத்தினார். அவர்களும் அவருடைய ஆர்வத்தால் உந்தப்பட்டு நன்கு செயல்பட்டனர். பிற மாநிலங்களைவிட இமாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தின் நிர்வாகத்தில் தாங்களாகவே அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்படுவதை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

மகாராஷ்டிரம், கர்நாடகம்

நேர்மையற்ற, ஊழலில் திளைக்கும் தங்கள் மாநில நிர்வாகத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் மகாராஷ்டிரர்கள் ஒய்.பி. சவாண், வசந்தராவ் நாயக் ஆகியோரின் காலத்தைப் பெருமையோடும் மகிழ்ச்சி யோடும் நினைவுகூர்கிறார்கள். வசந்தராவ் நாயக்கின் பதவிக்காலத்தில்தான் நாட்டிலேயே முதல்முறையாக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டது.

கர்நாடகத்தில் உள்ளவர்கள் தேவராஜ அரசு, ராமகிருஷ்ண ஹெக்டேபோல இப்போதுள்ள முதல்வர் இருக்கக்கூடாதா என்றே ஏக்கத்துடன் பேசியிருக்கிறார்கள். தேவராஜ அரசு காலத்தில்தான் நிலச்சீர்திருத்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. ராமகிருஷ்ண ஹெக்டே காலத்தில்தான் பஞ்சாயத்து ராஜ் முக்கியத்துவம் பெற்று நிர்வாகம் பரவலாக்கப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறந்த முதலமைச்சர் யார்? தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி குறித்து நிறையவே கேள்விப்பட்டோம். ஆனால், அவருடைய சம காலத்தவர்களிலும் சிலர் நன்றாகவே ஆட்சி செய்துள்ளனர். பிஹார் மாநிலம் என்றாலே குற்றச் செயல்களுக்கும் பின்தங்கிய நிலை மைக்கும் உதாரணமாகத் திகழ்ந்தது. நிதிஷ் குமார் முதல்வராக வந்து கல்வி, சட்டம் - ஒழுங்கு, சாலைகள், பாலங்களுக்கு முக்கியத்துவம் தந்து மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்சென்றார். மத்தியப் பிரதேசமும் பிற மாநிலங்களால் சூழப்பட்ட பகுதி. குஜராத், தமிழ்நாட்டுக்கு உள்ள அனுகூலங்கள் மத்தியப் பிரதேசத்துக்குக் கிடையாது. இருந்தும் சிவராஜ் சிங் சௌகானின் நிர்வாகத்தில் வேளாண்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. பொது விநியோகமும் திறமை யாகச் செயல்படுகிறது. திரிபுரா மாநிலத்தின் நில அமைப்போ மிகவும் சிக்கலானது. அப்படியிருந்தும் மாணிக் சர்க்கார் அங்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்திருக்கிறார்.

மீட்பர் டெல்லியில் இல்லை

டெல்லியிலிருந்துதான் நமக்கு மீட்பர் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மாநிலத்திலிருந்தே நல்ல நிர்வாகி வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களும் செய்தி ஊடகங்களும் தங்களுடைய மாநில முதல்வரின் செயல்பாடு எப்படி என்று துல்லியமாக எடைபோட வேண்டும். மிகப் பெரிய ஆளுமையுள்ள ஒரு பிரதமரைவிட சிறந்த நிர்வாகியாகத் திகழும் 10 அல்லது 12 முதலமைச்சர்கள் இந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுவிட முடியும்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு...’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x