Published : 22 Dec 2013 12:07 PM
Last Updated : 22 Dec 2013 12:07 PM

ஏன் இந்த தடுமாற்றம்?

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையொட்டி பேட்டியளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், “நீதிபதி ஏ.கே.கங்குலி ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் சாதாரண குடிமகனாகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத் தடை ஏதுமில்லை’’ என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கங்குலி பதவி விலகக் கோரி 24-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரை நியமிக்காமலும், இரண்டு வருடங்களாகப் பதவியை நிரப்பாமலும் உள்ள தமிழக அரசை அவர் ஏன் கண்டிக்கவில்லை என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் தேசிய பெண்கள் ஆணையம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் கோரியுள்ளார் கங்குலி. இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையே சிக்கியுள்ள கங்குலி மீது கூறப்பட்டுள்ள புகார் என்ன?

2012-ம் ஆண்டு சம்பவம்

கொல்கத்தாவிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி ஒருவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை ‘லீகலி இந்தியா’ என்ற இணைய இதழில் கடந்த நவம்பர் 11-ம் தேதி பட்டியலிட்டிருந்தார்.

அந்த மாணவி தனது சட்டப்படிப்பை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் பயிற்சி மாணவியாக சேர்ந்ததாகவும் தன்னிடம் பலவிதத்தில் அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் 2012-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி டெல்லி நட்சத்திர விடுதிக்குத் தன்னை அழைத்ததாகவும் அங்கு தன்னிடம் அத்துமீறியதாகவும் இணைய இதழில் எழுதியிருந்தார்.

மூன்று நீதிபதிகள் குழு

இணைய இதழில் கூறப்பட்ட விவரங்களை ஊடகங்கள் வெளியிட்ட பிறகு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதியிடம் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கோரினார். அட்டர்னி ஜெனரல் குலாம் வானாவதி வழக்கு தொடுத்தார். உண்மை அறியும்படி மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்த தலைமை நீதிபதியை ஊடகங்கள் பாராட்டின.

நீதிபதி குழு, பயிற்சி மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தையும் கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தது. சட்ட தினத்தன்று உரையாற்றிய தலைமை நீதிபதி, பயிற்சி மாணவிக்கு கட்டாயம் நீதி கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தார். சம்பந்தப்பட்ட நீதிபதியின் பெயர் ஊடகங்களில் கசிந்ததோடு, அறிக்கையின் சாராம்சத்தையும் இந்திரா ஜெய்சிங் பகிரங்கமாக்கினார்.

புகாரில் முதல்தோற்றச் சான்று உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின் அடுத்த நடவடிக்கை ஏதுமின்றி, உச்ச நீதிமன்றம் அப்பிரச்சினையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. பயிற்சி மாணவி உச்ச நீதிமன்ற ஊழியர் அல்ல. மேலும், நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றுவிட்டதாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் கூறிய தலைமை நீதிபதி அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி எதிர்காலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க மாட்டோம் என்றும் அறிவித்துவிட்டார். டெல்லி காவல்துறை அறிவிப்பு கொடுத்தும் மீண்டும் ஒரு எழுத்து மூலமான புகார் அளிக்க அந்த மாணவி மறுத்துவிட்டார்.

கங்குலிக்கு எதிர்ப்பும் ஆதரவும்

தலைமை நீதிபதியைக் கண்டித்து சட்ட அமைச்சர் கபில் சிபல் விடுத்த கடுமையான அறிக்கை ஒன்றில், “நீதிமன்றம் இப்பிரச்சினையைக் கைகழுவியது தகாத செயல்” என்று குறிப்பிட்டார். நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றால் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டு, கங்குலியிடம் விளக்கம் ஏன் கோரப்பட்டது என்று புரியவில்லை. மேல்நடவடிக்கை எடுக்க மறுத்த பின்னர் இப்போது பிரச்சினை முச்சந்திக்கு வந்துவிட்டது. மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரி கட்சியினர் கோருகின்றனர். புகார் நிரூபிக்கப்படும் முன்னரே பதவி விலகக் கோருவது நியாயமற்றது என்று முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார். பார் கவுன்சில் உதவித் தலைவர் பிரபாகரன் தலைமையில் சென்னை வழக்கறிஞர்கள் சிலர் சட்டப் பயிற்சி மாணவியைக் கண்டித்து ஊர்வலம் ஒன்றை நடத்தினர். “எதிர்காலத்தில் எந்த பெண்ணும் தன் மீது பொய்ப் புகார் கூறுவதைத் தடுக்க அலுவலகத்தில் ரகசிய கேமராக்களை நிறுவியுள்ளேன்” என்கிறார் கொல்கத்தாவின் மூத்த வக்கீல் மிலான் முகர்ஜி.

இந்தப் புகாருக்குப் பிறகு, ஆண் வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ பெண் பயிற்சியாளர்களை வைத்துக்கொள்ள முன்வர மாட்டார்கள் என்று கூறி பிரச்சினையை சிலர் திசைதிருப்ப முயல்கின்றனர். பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நீதிபதி கங்குலியும் மறுத்துவிட்டார்.

விசாகா வழக்கு

2012-ல் இயற்றப்பட்ட ‘வேலையிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளை (தடுக்க, தடை செய்ய மற்றும் நிவாரணம் வழங்கும்) சட்டத்தின்’ கீழ் ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி 10 உறுப்பினர் கொண்ட புகார் விசாரணைக்குழு ஒன்றை 2013-ம் ஆண்டு நவம்பரில்தான் உச்ச நீதிமன்றம் அமைத்தது. 1997-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் விசாகா வழக்கில் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்கும் விசேஷக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டும் ஏன் 25 வருடங்களாக நீதிமன்றங்களே அந்த உத்தரவை அமல்படுத்தத் தவறின?

விசாகா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர். அவரும் அரசுசாரா நிறுவனங்கள் சிலவும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ராஜஸ்தானில் சமூக சேவகர் ஒருவரைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேலையிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் தொடுத்த அந்தப் பொதுநல வழக்கை அன்றைய தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா விசாரித்தார். ‘‘வேலைக்குச் செல்லும் இடத்தில் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாதது மட்டுமின்றி அவர்கள் மீது கிரிமினல் குற்றங்கள் இழைக்கப்பட்டால் மட்டுமே காவல்துறை உதவியை நாட முடியும். பெண்கள் மேலதிகாரிகள்/ சக ஊழியர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஒழுங்கு விதிகள் இயற்றப்படவில்லை. பாலியல் தொந்தரவு என்பதற்கு சரியான வியாக்கியானமும் சட்டத்தில் இல்லை’’ என்று கூறினார்.

தீர்ப்பே சட்டம்

வேலை செய்யும் இடத்தில் பாலியல் சீண்டல்களைத் தவிர்க்கும் விதத்தில் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றும் வரை அத்தீர்ப்பே சட்டமாகச் செயல்படும் என்றும், அரசு, பொதுத் துறைகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமான உரிமையைச் சட்டம் வழங்கியுள்ளது. சர்வதேசப் பிரகடனங்களும் பெண்களுக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமும் காட்டக் கூடாது என்றே கூறியுள்ளன என்று தெரிவித்த நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள அடிப்படைக் கடமைகளின்படி பெண்களுக்கு எதிரான கேவலமான நடைமுறைகளை ஒவ்வொரு குடிமகனும் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

‘‘முறையற்ற பாலியல் அணுகுமுறை, பெண்களைத் தொட்டுப் பேசுவது, பாலியல் இச்சையை பூர்த்தி செய்ய மறைமுகமாகவோ, நேரடியாகவோ கோருவது, பாலியல்சார் விமர்சனங்கள், உடல், மொழி, செய்கைகளால் வரவேற்கத் தகாத செயல்களில் ஈடுபடுவது ஆகியவையே பாலியல் தொல்லைகள்’’ என்ற விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.

வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவதாக ஒரு பெண் புகார் கூறினால் அதை விசாரிக்க ‘புகார் அமைப்பை’ நிர்வாகங்கள் உருவாக்க வேண்டும். அக்குழுவில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருக்க வேண்டும். அரசுசாரா அமைப்பு ஒன்றிலிருந்து பெண் பிரதிநிதி ஒருவரை அக்குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட ஆண்கள் மீது நிர்வாகங்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் பயிற்சி மாணவி பிரச்சினையில் ஒரு வருடத்திற்குப் பின் இணைய இதழில் பதிவு செய்தது ஏன் என்று கேட்பது தவறு. பாலியல் தொல்லைகள் பற்றிப் புகார் அளிக்க அப்போது குழுக்களும் இல்லை. கிரிமினல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விதிகளும் இல்லை.

புகாரில் ஆதார உண்மை இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு கூறிய பின்னரும், மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அதனால், தேசிய மனித உரிமை ஆணையச் சட்டப் பிரிவு 23(1A)-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு ஆலோசனை நல்கி அவரது வேண்டுகோளின் பின்னர் உச்ச நீதிமன்றம் அவர் மீதுள்ள புகாரை விசாரித்து தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அறிவித்தாலொழிய, பதவியிலிருந்து கங்குலியை குடியரசுத் தலைவர் நீக்க சட்டத்தில் வழியில்லை.

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா?

சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர், தொடர்புக்கு: saraskrish1951@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x