Last Updated : 04 Apr, 2017 10:24 AM

 

Published : 04 Apr 2017 10:24 AM
Last Updated : 04 Apr 2017 10:24 AM

நிமிடக் கட்டுரை: ஆன்மிகவாதியா கத்தார்?

‘அமருலாரா வந்தனம்… வீருலாரா வந்தனம்’ என்று மார்க்சிஸ / மாவோயிஸ மேடைகளில் இசை முழக்கம் எழுப்பும் கத்தார் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பிவிட்டதாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. “இவரைப் போயா இத்தனை நாட்கள் கொண்டாடினோம்?” என்று மார்க்ஸிஸ்ட்டுகள், இடதுசாரி அபிமானிகள் சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். தலித் குடும்பத்தில் பிறந்த கத்தார் ஆந்திராவில் நக்ஸல்பாரி இயக்கத்தின் இசை முகமாகத் திகழ்ந்தவர். 1960-களில் ‘ஜன நாட்டிய மண்டலி’ எனும் அமைப்பில் இணைந்து, பல பாடல்களை மக்கள் முன்னிலையில் பாடியவர். ரிக்‌ஷா தொழிலாளர்களின் துயரத்தைப் பதிவுசெய்த ‘அபுரோ ரிக்‌ஷா’ எனும் பாடல் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமானது. தெலங்கானா மாநிலக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடிவந்தவர் இவர்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தனித் தெலங்கானாதான் என்று நம்பியவர். ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது அதை வரவேற்ற கத்தார், “சிறிய மாநிலங்களில்தான் எளிய மக்களுக்குப் பலன்கள் கிடைக்கும். எனினும் தெலங்கானா மக்கள் நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். நமது சமூகம் பொருளாதாரரீதியாகச் சமமற்றதாக இருந்தால் நமது பிரச்சினைகள் தொடரவே செய்யும்” என்று குறிப்பிட்டார்.

போலி என்கவுன்ட்டர்கள் நடக்கும்போது அவற்றுக்கெதிராக முழங்கும் முதல் குரல் அவருடையதாகத்தான் இருக்கும். அரசு இயந்திரத்தை நோக்கித் தொடர்ந்து கேள்வியெழுப்பியதால் ஏகப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். ஒரு முறை ஹைதராபாத்தில் அவரது வீட்டில் வைத்தே அவரைக் கொல்ல முயற்சி நடந்தது. ஐந்து இளைஞர்கள் அவரைச் சுற்றிவளைத்துச் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினார்கள். ஆறு குண்டுகள் உடலில் பாய்ந்தும் அந்த இரும்பு மனிதர் உயிர் பிழைத்தார். தன்னைக் கொல்ல முயன்றது சாதாரண உடையில் இருந்த போலீஸார்தான் என்று அவர் உறுதியாக நம்புகிறார். வாழ்க்கை முழுவதும் வறியவர்களின் மறுமலர்ச்சிக்காகக் குரலெடுத்துப் பாடியவர்.

சமீபத்தில் போங்கிர் மாவட்டத்தின் யதாரி கோயிலுக்குச் சென்று லக்ஷ்மிநரசிம்ம சுவாமியை வழிபட்டிருக்கிறார் கத்தார். அவர் கோயிலுக்குச் செல்வது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களாகவே குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்றுவந்துகொண்டுதானிருக்கிறார். வேத பாடசாலைக்குச் சென்று மாணவர்களைச் சந்திக்கிறார். விவேகானந்தரைப் போல் உருவாக வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். “இப்போதெல்லாம் பெரிய அளவில் மாவோயிஸ்ட் இயக்கங்களில் பங்கெடுப்பதில்லை என்றாலும், மார்க்ஸியத்தையும் மாவோயிஸத்தையும் அவர் தீவிரமாகப் பின்பற்றுகிறார். இந்தச் சூழலில் அவரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அதிர்ச்சி தருகிறது” என்கிறார்கள் இடதுசாரிகள். ஆனால், “மக்களின் ஆன்மிக ஜனநாயகத்தை மதிப்பவன் தான் உண்மையான மார்க்ஸிஸ்ட்” என்று விளக்கமளித்திருக்கும் கத்தார், கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களுக்கு மத நம்பிக்கை தற்காலிக நிம்மதியை வழங்குகிறது என்றும் கூறியிருக்கிறார். ஆயுதம் தாங்கிய மாவோயிஸப் பாதையைத் தவிர்த்து, ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியிருக்கும் அவர், லட்சியத்தை அடைய ஜனநாயக அரசியலின் பக்கம் செல்வதே சிறந்த வழி என்றும் நம்பத் தொடங்கியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x