Published : 20 Sep 2013 07:44 AM
Last Updated : 20 Sep 2013 07:44 AM

சாலை கற்றுத்தருகிறது

டெல்லி சுல்தான் பக்தியார் கில்ஜி நாளந்தாவை எரித்து அழித்தபோது அங்கே நிலவறையிலிருந்த அரிசியும் எரிந்து கருகிப்போனது. அப்படி எரிந்துபோனதில் எஞ்சிய அரிசியை நாளந்தா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அரிசியை வியப்போடு நான் பார்த்துக்கொண்டிருந்தேன், அது வெறும் அரிசியில்லை, ஒரு வரலாற்று சாட்சி, கருகிய அரிசியில் இந்திய வரலாற்றின் கடந்த காலம் எழுதப்பட்டிருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில், உலகிலே மிகப்பெரிய பல்கலைக்கழகமாக நாளந்தா இருந்தது, பத்தாயிரம் மாணவர்கள் தங்கிப் படித்த உறைவிடக் கல்வி நிலையமான அதை டெல்லி சுல்தான் பக்தியார் கில்ஜி 1203-ல் படையெடுத்து வந்து பல்கலைக்கழகத்தையும் அதை ஒட்டி வாழ்ந்த ஊர்களையும் எரித்தும் இடித்தும் அழித்தார். ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், புத்த பிட்சுக்கள் இதில் கொல்லப்பட்டார்கள், நாளந்தாவின் பிரம்மாண்டமான சுவடி நூலகம் முழுமையாகவே அழிக்கபப்ட்டது.

அந்த நினைவுகளின் உறைந்த வடிவம் போலவே இந்த அரிசி எனக்குத் தோன்றியது, இந்திய வரலாற்றை நமக்கு கற்றுக்கொடுப்பவை எஞ்சியிருக்கும் கோட்டை கொத்தளங்கள், அகழ்வாய்வு பொருட்கள் மட்டுமில்லை, இதுபோல எரிந்த அரிசிகளும்தான்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்குநெடுக்காகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன், எந்தப் பயணத்திலும் எனக்கு நோக்கங்களோ இலக்குகளோ கிடையாது, மனம் விரும்பியபடியே பயணம் செய்துகொண்டிருப்பேன், சாலையின் பாடலை, முணுமுணுப்பைக் கேட்கிற நாடோடிப் பயணி நான்,

இந்தப் பயணங்களில் நான் கண்ட உண்மை என்னைப் போல காரணமேயில்லாமல் ஊர் சுற்றுகிற உதிரி மனிதர்கள் இந்தியாவில் நிறைய இருக்கிறார்கள் என்பதே, எனக்காவது எழுத்தாளன் என்ற அடையாளம் இருக்கிறது, அவர்கள் எதைத் தேடிப் பயணிக்கிறார்கள், எதைக் கண்டடைகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது,

ஒருவர் தன் வீட்டைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும், உறவும் நட்பும் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆழமாக உணரவும் பயணம் தேவைப்படுகிறது, ஆம் நண்பர்களே, எனது பயணங்களின் வழியேதான் வீடும் உறவும் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்திருக்கிறேன், அதே நேரம் வீடு மட்டுமே உலகமில்லை, உலகம் எவ்வளவு பெரியது, எவ்வளவு அழகானது, எவ்வளவு நம்பிக்கை தருவது என்பதையும் அறிந்திருக்கிறேன்,

ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே, பயணம் நமது அச்சங்களிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது, அறியாத மனிதர்களை ஸ்நேகிக்க வைக்கிறது, பிறப்பில் வருவது மட்டும் உறவில்லை, உண்டாக்கிக்கொள்வதும் உறவுதான் எனக் கற்றுத்தருகிறது, ஒருவர் இந்தியா முழுவதும் ஒருமுறை சுற்றியலைந்து திரும்பினால் அவருக்கு வாழ்க்கையின் மீது தானே நம்பிக்கையும் பிடிப்பும் வந்துவிடும்.

பயணம் செய்வது வேறு, சுற்றுலா செல்வது வேறு, பயணம் என்பது உலகை அறிந்துகொள்ளும் வழி, சுற்றுலா என்பது பொழுதைப் போக்குவதற்கான வழி, பெரும்பான்மை சுற்றுலாக்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களே,

பயணி ஒருபோதும் சுற்றுலா செல்ல விரும்புகிறவனில்லை, அவன் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ, சுடச்சுட எழுதி, அச்சிட்டு இணையத்தில் ஏற்றி விளம்பரப்படுத்திக்கொள்வதையோ விரும்பாதவன், வானில் பறந்து செல்லும் பறவையின் நிழல், தண்ணீரில் பட்டுச் செல்வதைப் போல தன்னிருப்பை உலகின் மீது படிய விட்டுப் பறந்து போகிறவனே பயணி.

எனது பயணங்களே என் ஆளுமையை உருவாக்கின, என்னைப் போலவே இலக்கில்லாமல் பயணிக்கும் பலரை நான் அறிவேன், அவர்கள் தங்களின் இருப்பை அர்த்தப்படுத்திக்கொள்ளப் பயணிக்கிறார்கள், ஒவ்வொரு பயணியும் ஒரு ரகசிய ஆய்வாளன், அவன் எதைக் கண்டுபிடிக்கிறான் என்று யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை

இந்தியாவில் பயணம் என்றாலே மலைநகரங்களுக்கு அல்லது இயற்கைக் காட்சிகளைத் தேடிப் போவது என்று பொருள் கொண்டுவிடுகிறார்கள். பெட்டிபெட்டியாக உடைகள், வீட்டுப் பொருட்கள், உணவு வகைகளைத் தூக்கிக்கொண்டு போவதன் பெயர் பயணமில்லை.

பயணம் நமது சமூக அடையாளங்களை மறக்கச் செய்கிறது. ரயில் ஏறிய மறுநிமிடம் படிப்பும் வேலையும் இன்னபிற அடையாளங்களும் உதிர்ந்துபோய்விடுகின்றன, பயணி என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே மிஞ்சுகிறது, அந்த அடையாளமும் நமக்கானதில்லை, பொதுவானது,

பயணம் கற்றுக்கொடுக்கும் முதல் பாடமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். பயணத்தில் நோயுற்றால் பயணம் தடைப்படுவதோடு மனதில் காரணமற்ற நூறு பயங்கள் கவ்விக்கொள்ளத் துவங்கிவிடும். பார்த்துக்கொண்டிருக்கும் போதே பயம் கிளைவிட்டு நம்மை முடக்கிவிடும்,

தேசாந்திரியாக சுற்றியலைந்த எனது பயணங்களில் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் நாக்கிற்கு அடிபணியக் கூடாது என்பதே. தண்ணீரையும் உணவையும் மட்டும் கவனமாகப் பார்த்துக்கொண்டுவிட்டால் எந்த ஊருக்கும் எப்போதும் போகலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றித்திரியலாம்,

என் அனுபவத்தில் மிகமிக மோசமான உணவு ரயிலில் தரப்படும் உணவுதான். அதைத் தவிர்க்க முடியாமல் சாப்பிடும் கொடுமை ஒவ்வொரு முறையும் எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது. படுத்தவுடன் தூங்கத் தெரிந்தவன் தான் ஊர்சுற்றியாக இருக்க முடியும்.

இந்தியாவில் பிறந்த ஒருவன் வாழ்நாளில் ஒருமுறையாவது பரந்த இந்தியாவின் குறுக்குவெட்டில் பயணம் செய்து அதன் வியப்பான ஆறுகளை, மலைகளை, தொன்மையான நகரங்களை, வரலாற்றுச் சின்னங்களை, கலைக்கூடங்களை, பல்வேறு விதமான மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை அவசியம் காண வேண்டும்.

கங்கை செல்லும் வழியெல்லாம் பின்தொடர்ந்து ஒரு பயணம் மேற்கொண்டு பாருங்கள், எந்த ஞானியின் உதவியும் இன்றி நீங்களே முற்றிலும் மனம் மாறிவிடுவீர்கள், மழைக்காலத்தில் பொங்கிப் பெருகியோடும் கங்கையைக் கண்டவன், கோடையில் அதே கங்கை பிரிநூல்போல ஒடுங்கிப்போய் ஆரவாரம் அடங்கி அமைதியாகிவிடுவதைக் காணும்போது இவ்வளவுதான் மனித வாழ்க்கை என்று தானே புரிந்துவிடும் இல்லையா, இந்தியாவின் நிலப்பரப்பு கற்றுக்கொடுக்கக் கூடியது.

பிரம்மபுத்திராவின் குறுக்கே படகில் பயணம் செய்துபாருங்கள், எத்தனை கிராமங்கள் இன்றும் நதிக்கரையில் அதே உயிர்ப்புடன் வாழ்ந்துவருகின்றன என்று புரியும்,. ராஜகிருஹத்தில் உள்ள அஜாதசத்ரு தன் தந்தை பிம்பிசாரனை சிறையிட்டிருந்த கோட்டையின் அடித்தளத்தை இறங்கிச் சென்று பாருங்கள், பிம்பிசாரனின் கண்ணீர் இன்றும் ஈரம் காயாமல் இருப்பதை உணரக்கூடும். மீரட்டின் வீதிகளுக்குள் இன்றும் யாரோ ஒரு முகமறியாத இசைக்கலைஞன் தன்னை மறந்து இசைப்பதை ஒரு நிமிடம் கேட்கிற பாக்கியம் உங்களில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?

பேரழகு ததும்பும் அஜந்தா புத்தச் சிற்பங்களை, ஒவியங்களை, ஒப்பற்ற நேர்த்தி கொண்ட தில்வாரா சமணக் கோவிலை, அமைதியின் உறைவிடமான லடாக்கின் பௌத்த மடாலயங்களை, கழுகுமலைச் சிற்பங்களை, கொனார்க்கின் கலவிச் சிற்பங்களில் கல்லின் மொழி வழியாகக் காமம் பேசப்படுவதைக் காண்பதும் உணர்வதும் அபூர்வமில்லையா.

தார்பாலைவனத்தில் ஒட்டகமேறிப் போய் மணலின் பிரம்மாண்டத்தைக் காண வேணாமா, உடல் முழுவதும் சேறு படிய காண்டாமிருகம் வட்டப் பாதம் அதிர நடந்து செல்லும் காட்சியை அஸ்ஸாம் போய் ஒரு முறையாவது பார்க்க வேண்டாமா, ரங்கனத்திட்டிற்கு வரும் சைபீரிய நாரைகளின் குரலைக் கேட்க வேண்டாமா, உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் சிரபுஞ்சியில் நனைவதற்காக மேகாலயா எப்போது போவது, இவை எல்லாம் அடையாமல் பின் எதற்கு இந்த வாழ்க்கை. உண்டு, உறங்கி, சுகித்து உடல்வளர்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா என்ன? வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது, அதற்குப் பயணமே எளிய வழி.

‘பயணத்தில் சிலர் வியப்பூட்டும் இடங்களைப் பார்க்கிறார்கள், சிலர் மனிதர்களை வேடிக்கை பார்க்கிறார்கள், ஒருசிலரே அங்குள்ள ஆன்மாவைக் காண்கிறார்கள்’ என்ற எமர்சனின் மேற்கோள் ஒன்றை வாசித்திருக்கிறேன், நாளந்தாவிலுள்ள எரிந்த அரிசியைக் கண்டபோது அதன் ஆன்மாவைக் கண்டதாகவே அறிந்தேன், இந்தியாவில் வரலாறு என்பது முடிந்துபோன கடந்த காலமில்லை, அது உயிருள்ள நிகழ்காலம்.

எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x