Last Updated : 07 Oct, 2014 08:46 AM

 

Published : 07 Oct 2014 08:46 AM
Last Updated : 07 Oct 2014 08:46 AM

அக்கம் பக்கம்: நெரிசல் பலிகள் எனும் பயங்கரவாதம்!

பிஹார் தலைநகரம் பாட்னாவில் தசரா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் மிதிபட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச் சம்பவத்தைப் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிப்படும்போது, மாநில அரசின் அலட்சியம்தான் காரணம் என்பது புரிகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜித்தன்ராம் மாஞ்சி முன்னிலையில் காந்தி மைதானத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை என்ன வென்று சொல்ல?

பிரதமர், முதலமைச்சர், மாநில-மத்திய அமைச்சர்கள் போன்றோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின்போது அவர்களைப் பாதுகாக்க முழுவீச்சில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளில் நூறில் ஒரு பங்குகூடப் பொதுமக்களின் உயிரைக் காப்பதற்கு எடுக்கப்படவில்லை என்பது மக்களின் உயிர் மிகமிகச் சாதாரணமானது என்ற மனப்போக்கைத்தானே காட்டுகிறது?

இத்தனைக்கும் இது முன்னுதாரணமற்ற சம்பவம்கூட இல்லை. ஆண்டுதோறும் நெரிசல் மரணங்கள் ஒரு சம்பிரதாயம்போலவேதான் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் பார்த்தால், பயங்கரவாதச் செயல்கள் பலிகொள்ளும் உயிர்களைவிட நெரிசல் பலிகொள்ளும் உயிர்கள் பல மடங்கு அதிகம். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கோயில்கள் உள்ளிட்ட புனிதத் தலங்களில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2,000. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட நினைப்பவர்கள் வெடிகுண்டுகளை வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதுபோன்ற கூட்டங்களில் குழப்பத்தையும் பதற்றத்தையும் விளைவித்தாலே போதும், அவர்கள் நினைத்தது நடந்துவிடும்.

பெருந்திரள் ஒன்றை எளிதில் பதற்றத்துக்கு உள்ளாக்கிவிட முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் பிஹார் சம்பவம். தசராவுக்காக மக்கள் திரண்டிருந்த மைதானத்திலிருந்த ஒரு கம்பத்திலிருந்து மின்சார வயர் அறுந்து விழுந்திருக்கிறது. உடனே, விளக்குகள் அணைந்து இருள் கவிந்தது. மின்சார வயர் கீழே கிடக்கிறது, மிதிக்காமல் விலகிச் செல்லுங்கள் என்று சிலர் கூச்சலிட்டுள்ளனர். மின்சார வயரில் சிக்கக் கூடாது என்ற உணர்வில், அங்கிருந்து விரைந்து வெளியேற மக்கள் முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட களேபரம், பீதியில் பெண்கள், குழந்தைகள் கீழே விழுந்துள்ளனர். கீழே விழுந்தவர்களைத் தூக்க முயலாமல் அனைவரும் அவர்கள் மீதே ஏறி ஓடியதால் 30-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

கூட்ட மேலாண்மை என்பது இந்தியாவில் துளிகூட இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆட்சியாளர் களுக்கும் அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை உணர்வு கொஞ்சம்கூட இல்லை என்பது இதுபோன்ற சம்பவங்களுக்கு முதல் காரணம்.

இதுபோன்ற சம்பவங்களைப் பற்றிய எந்த முன்னெச்சரிக்கை உணர்வும் இல்லாத ஆட்சியாளர்கள், சம்பவம் நடந்து முடிந்த பிறகு பெயரளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பரபரப்பாக ஏதாவது உத்தரவிடுவார்கள். அப்படியே, ஊடகங்களும் இதைப் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசி ஓய்ந்து போகும்போது, வேறு இடத்தில் வேறு ஒரு நெரிசல் சம்பவம். பலி எண்ணிக்கை வேறுபடலாம். ஆனால், காரணம் மட்டும் வேறுபடாது. அதுதான் ஆட்சியாளர்களின் அலட்சியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x