Last Updated : 28 Jun, 2017 09:14 AM

 

Published : 28 Jun 2017 09:14 AM
Last Updated : 28 Jun 2017 09:14 AM

நிலத்தடி நீரைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா?

விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களிடம் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீரிப் பாசனம் சென்று சேர வழி செய்ய வேண்டும்.

இது தென் மேற்குப் பருவமழைக் காலம். ஆனால், வரலாறு காணாத வறட்சி, கொளுத்துகிற வெயில், தண்ணீர்ப் பஞ்சம் எதிலும் பெரிய மாற்றமில்லை. குடிக்கிற தண்ணீரை மட்டுமின்றி, வாய்கொப்பளிக்கிற தண்ணீர் வரையில் எதையும் ஒரு சொட்டுகூட வீணாக்கக் கூடாது என்று பேசிவருகிறோம். ஆனால், சில விவசாயிகள் மிகமிக அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிற நெற்பயிரை ஏப்ரல், மே மாதத்தில் பயிர்செய்து, இன்னமும் நிலத்தடி நீரைத் தாராளமாகப் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் தொடங்கி வட மாவட்டங்கள் வரையில் இந்தக் காட்சியைப் பார்க்க முடிகிறது. நெல்லுக்கு மிக அதிகமான தண்ணீர் தேவை என்பதாலும், வெயிலின் தாக்கத்தால் வேகமாகத் தண்ணீர் ஆவியாகிவிடுவதாலும் தண்ணீரின் பயன்பாடு வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.

மதுரை கடச்சனேந்தலைச் சுற்றியுள்ள கிராமங்கள் நிலத்தடி நீர்வளம் மிக்கவை. வைகையும் காவிரியும் கைவிட்டுவிட்ட சூழலில்கூட, இப்போதும் மதுரையின் பெரும் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை லாரிகள் வாயிலாகப் பூர்த்தி செய்வது இந்தத் தண்ணீர்தான். தினமும் ஒரே ஒரு பேருந்து மட்டுமே காலையும் மாலையும் வருகிற இந்தக் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான தண்ணீர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனைக் கண்காணிக்கவோ கணக்கெடுக்கவோ அரசு சார்பில் யாருமில்லை. குடிநீருக்காக மட்டுமின்றி, அதே வட்டாரத்தில் விவசாயத்துக்காகவும் கணக்கில்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு மழையே இல்லை என்றபோதி லும், நிலத்தடி நீரை நம்பிப் பலர் வாழை யும் நெல்லும் சாகுபடி செய்தார்கள். இலவச மின்சாரத்தின் புண்ணியத்தால் கிட்டத்தட்ட 5 மாதங்கள் வரையில் வாழையைக் காப்பாற்றிவிட்ட விவசாயி கள், இப்போது கையைப் பிசைகிறார்கள். ஆழ்துளைக் கிணறும் வறண்டுவிட்டது. வேறு வழி இல்லாமல் சூல்கொண்ட வாழை களைக் கண்ணீருடன் வெட்டிச் சாய்த்து விட்டார்கள். பெருநஷ்டம் அவர்களுக்கு.

நம் பயிருக்கும் இதே கதி நேர்ந்து விடுமோ என்று நெல் விவசாயிகளும் கலக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் பேசினேன். “எந்த நம்பிக்கையில் ஐயா நெல் சாகுபடி செய்திருக்கிறீர்கள்? வேறு ஏதாவது பயிர் போட்டிருக்கலாமே” என்றேன். “மழையை நம்பித்தான்” என்றார். தொடர்ந்து, “இந்த வருஷமும் கால்வாய்ல தண்ணி வராதுன்னு தெரியும் தம்பி. ஆனா, ஆள் வெச்சி வேலை பார்க்கிற அளவுக்கு எனக்கு வசதியில்ல. நெல் என்றால் நடுவதற்கும், அறுப்பதற்கும் மெஷினைக் கூப்பிட்டுக்கொள்ளலாம். இடையில் களை எடுக்கிறது, உரம் போடுவதைத் தவிர வேறெதுக்கும் ஆள் தேவையில்லை. அதையும் நானும் என் குடும்பத்தினருமே செஞ்சிடுவோம். வீட்டில் வாயில்லா ஜீவன்கள் இருக்குது. அதுகளுக்கு ஒரு கட்டு வைக்கோல்கூட இல்லை. எத்தனை நாள் விலைக்கு வாங்கிப் போட முடியும்? பெத்த பிள்ளைக்கே முழுக்க முழுக்க கடைப் பண்டம் வாங்கிக்கொடுத்தால் கட்டுப்படி ஆகாது. கூழோ, கஞ்சியோ வீட்டில் ஆக்கியதைப் போல மனத் திருப்தியா சாப்பிட முடியுமா? நெல்லு போட்டாத்தானே வைக்கோல் கெடைக்கும்? பெருந்தீனி எடுக்கிற மாடுகளுக்கும் வஞ்சனை இல்லாம அள்ளிப் போட முடியும்?” என்று கேட்டார். அவரது பதிலை மீறிய கேள்வி என்னிடம் இல்லை. “நீங்க சொல்றதும் நியாயம்தான்” என ஒப்புக்கொண்டேன்.

பின்னாளில் சந்தித்த விவசாய அதிகாரி யிடம் இதுபற்றிக் கேட்டபோது, “அந்த நிலத்தில் ஒரு பகுதியில் மாட்டுத்தீவன மும், மறு பகுதியில் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களையோ, உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகளையோ பயிரிட்டிருக்கலாம். மாட்டுத்தீவனமானது, வைக்கோலைவிடச் சத்துமிக்கது. கம்பு, சோளம், உளுந்துக் குத் தண்ணீர் மிகமிகக் குறைவாகவே தேவைப்படும். அவற்றிலிருந்தும் சத்தான மாட்டுத்தீவனம் கிடைத்திருக்கும்” என்றார். இதையெல்லாம் அந்த விவசாயியிடம் நேரில் போய்ச் சொல்ல நமது வேளாண் அதிகாரிகளுக்கு நேரமில்லை. ஊழியர்களும் போதுமான அளவில் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மனதும் இல்லை. இதே பெரியாறு கால்வாயில் தண்ணீர் வருகிற காலத்தில், தண்ணீர் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகிறது என்பதெல்லாம் தனிக் கதை. மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுமையும் இதுதான் நிலை.

நெல், வாழை மட்டுமல்ல; தென்னை மரங்களும் பட்டுக் கிடக்கின்றன. தமிழகத் தில் எந்த ஊருக்குப் பயணப் பட்டாலும் ஜன்னல் வழியே நம் பார்வையில் படுவது பட்டுப்போன தென்னை மரங்கள்தான். கிணற்றைச் சுற்றி நடப்பட்ட 10 தென்னை களில் 5 தென்னைகள் கருகிவிட்டதைப் பார்க்க முடிகிறது. அதுவே, 1,000 அல்லது 500 மரங்களைக் கொண்ட தோப்பு களாக இருந்தால் 70% மரங்கள் பட்டுப் போய்விட்டன என்பதை வெறும் பார்வை யாலேயே உணர முடியும். தமிழகம் முழுவதும் கணக்குப்போட்டால் எத்தனை லட்சம் என்பது இயற்கைக்கே வெளிச்சம்!

பயிர்வாரிச் சாகுபடியைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் மூத்த விவசாயி வையா புரியிடம் பேசினேன். “தமிழ்நாட்டுல இந்த ஆண்டு நல்ல மழை பெற்ற ஊருன்னு எதுவுமே இல்லை. சில ஊர்கள்ல ‘புழுதி அடங்குற’ மழை, சில பகுதியில ‘வேட்டி நனையிற’ மழை, சில ஊர்கள்ல ‘அரை உழவு’ மழை, ரொம்பவும் குறைவான பகுதிகள்ல மட்டும் ‘ஒரு உழவு’ மழை பெய்திருக்கிறது. இப்போ நெல்லோ வாழையோ பயிரிட்டா காப்பாத்த முடியாதுங்குறது விவசாயிகளுக்கும் தெரியும். ஆனா, நிலத்தடி நீரை அவுங்க நம்புறாங்க. இங்கே அரசியல்வாதிகளும் நிலக்கிழார்களும் செய்ற கூத்துகளைப் பார்த்துப்புட்டு சிறு விவசாயிகளும் அதே தவறைச் செய்யிறாங்க. நிலத்தடி நீரை உறிஞ்சினதால, மண்ணின் ஈரமே குறைஞ்சிபோச்சு. புஞ்சைப் பயிரின் உயிரே இயற்கையான ஈரம்தானே?

ஆக, நஞ்சை நிலத்துல மட்டுமே நஞ்சைப் பயிரைச் சாகுபடி செய்யணும். அறுவடை நேரத்துல ஆத்துலயோ அணையிலயோ குளத்துலயோ தண்ணி இல்லாமப் போயிடுச்சுன்னா மட்டுமே நிலத்தடி நீரைப் பயன்படுத்தணும். முழுக்க முழுக்க நிலத்தடி நீரை நம்பி நஞ்சை விவசாயம் செய்யிறதைத் தடை செய்யணும். இதைப் பத்தி விவசாயி களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துற தோடு, சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் எல்லாம் அவங்களைப் போய்ச்சேர வழி பண்ணணும். அரசும் அதிகாரிகளும் மனசு வெச்சா எல்லாம் சாத்தியம்தான்” என்கிறார்.

நிலத்தடி நீரைக் கணக்கே இல்லாமல் உறிஞ்சிவிட்டோம். ஆறுகளையொட்டி குடிநீர், தொழிற்சாலை, விவசாயத்துக் கெனக் கணக்கில்லாமல் எடுத்த நிலத்தடி நீரை ஈடுகட்ட ஒவ்வொரு ஆற்றிலும் பத்து முறை வெள்ளம் வர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாததால்தான் பல ஆறுகள் முற்றிலும் வறண்டுவிட்டன. சமவெளிப் பகுதியில் நாம் உறிஞ்சிய மிதமிஞ்சிய தண்ணீரால், மலைப் பகுதியில் மிக மோசமான அளவுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுவரையில் தாகத்தால் இறந்துபோன வனவிலங்குகளின் எண்ணிக்கை வெளிவரவில்லை. இன்று விலங்குகளைக் கொன்ற தண்ணீர்ப் பிரச்சினை, நாளை நம்மையும் கொல்லாது என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை!

விவசாயிகள் பிரச்சினைக்கு வறட்சி மட்டுமே காரணமல்ல; தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாததும், நிலத்தடி நீரை மிதமிஞ்சிய அளவில் உறிஞ்சுவதும்கூடக் காரணம்தான். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கென தனிக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இஸ்ரேலில் ஆரம்பித்து, உள்நாட்டிலேயே பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதனைப் பின்பற்றினாலே போதுமானது.

என்ன செய்யப்போகிறது அரசு?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x