Published : 26 Sep 2016 09:54 AM
Last Updated : 26 Sep 2016 09:54 AM

இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி, ‘சிறிசேன - விக்ரமசிங்க அரசு’ கொண்டுவந்த 2016-வது ஆண்டு பொது வரவு-செலவு அறிக்கையை ஆதரித்தே வாக்களித்தது. அப்படியிருந்தும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிக ளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டி ருக்கிறது. மறுகுடியமர்வு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் 1,400 கோடி இலங்கை ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது இலங்கை அரசின் மொத்த செலவில் வெறும் 0.5%. இலங்கையின் வடக்கில் தமிழர் வாழும் பகுதியில் ஏற்பட்ட சேதங்களைக் களைந்து, மறுகட்டமைப்புகளை மேற்கொள்ள டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருந்த நன்கொடையாளர்கள் மாநாடு எந்தவிதச் சந்தடியும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

வீடு கட்டும் திட்டத்துக்கு விடை

ஓராண்டுக்கு முன்னால் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மொத்தம் 65,000 வீடுகளைக் கட்ட இலங்கை (மத்திய) அரசின் அமைச்சரவை முடிவுசெய்தது. 100 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமானமுள்ள அந்தத் திட்டப்படி, ஆர்சிலர் மிட்டல் என்ற பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து முன் கூட்டியே கோக்கப்பட்ட உருக்கு வீடுகளை வாங்குவதென்று அரசு தீர்மானித்தது.

இலங்கையின் வடக்கிலேயே சிமென்ட் பயன்படுத்தி பாதிச் செலவில் நல்ல வீடு கட்ட முடியும் என்றபோது, தயார் நிலையிலான உருக்கு வீடுகள் எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. சிமென்ட் பயன்படுத்தி வீடுகள் கட்டப்பட்டால், இலங்கையின் வடக்குப் பகுதியும் வளம்பெறும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களுக்கும் வேலை கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து இந்தத் திட்டமும் நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது.

இலங்கையின் வடக்குப் பகுதியை ஒரு முறை சுற்றிவந்தால், பளபளவென்று பளிச்சிடும் சாலைகளும், நகர்ப்புறங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் என்றழைக்கப்படும் பல்பொருள் அங்காடிகள், நிதி நிறுவனங்கள் என்று கண்ணில் படுவதால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுவிட்ட மாயத் தோற்றம் ஏற்படுகிறது. இந்தச் சாலைகளை விட்டு இறங்கி, சில மீட்டர் தொலைவு நடந்து தெருக்கள், சந்துகளில் நுழைந்து பார்த்தால் வறுமையும் பசியும் பட்டினியுமே கண்ணில் படுகிறது. அன்றாட வயிற்றுப்பாட்டுக்குக்கூடப் பணம் கிடைக்காமல், கடனில் ஆழ்ந்து கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

நசியும் விவசாயமும் மீன்பிடித் தொழிலும்

மக்களுடைய வருமானமும் வருமானம் பெறுவதற்கான வழிகளும் குறைகின்றன. தமிழர் பகுதிகளில் விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நசிந்துவருகிறது. வடக்கில் போர் நடந்த ஊர்களில் மக்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நாட்டிலேயே குறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதம் முழுக்க வேலை செய்தாலும் மொத்தமாக ரூ.2,157கூடக் கிடைப்பதில்லை. மாவட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர் அளவுக்குக்கூட ஊதியம் பெறுவதில்லை. 2012, 2013-ல் எடுத்த கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது.

இலங்கையின் வடக்கில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணம், அரசியல்ரீதியிலான வீழ்ச்சி. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டும் என்றில்லை, நாடு முழுவதையுமே மறுசீரமைப்பு செய்வதற்கான வலுவான திட்டம் இலங்கை அரசிடம் இல்லை. எந்த வொரு அரசியல் தீர்வை அரசு முன்வைத் தாலும் அதைத் தீவிரப்போக்கு கொண்ட சிங்கள பவுத்த தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் நிராகரித்துவிடுகின்றனர். ஒரு தரப்பார் பெரும்பான்மையினவாதத்தை நிறுவப் பார்க்கின்றனர்; இன்னொரு தரப்பார் பிரிவினைப் போக்கைக் கடைப் பிடிக்கின்றனர்.

தேசத்தையே பாதித்துவரும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆற்றல், திட்டம், துணிவு போன்றவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியிடமோ இல்லை. ஆர்.சம்பந்தன் தலைமையிலான பெடரல் கட்சியின் கொள்கை, முதல்வர் விக்னேஸ்வரன் ஊக்குவிக்கும் தமிழ்த் தேசியவாதக் கொள்கை போன்றவை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் விட்டுச்சென்ற பாசிச நடைமுறையின் எச்சங்களை எதிர்கொள்ளப் போதுமானவையாக இல்லை.

இலங்கையில் போருக்குப் பிறகு மறுகுடியமர்த்தலும் மறுவாழ்வும் பிரச்சினையாக இருக்கும் இந்த நேரத்திலும், சாதிகளுக்கு இடையிலான உறவுகள் குறித்துப் பேசக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். போருக்குப் பிறகு மறுகுடியமர்வுக்காக வீடுகளைக் கட்டித்தர அரசு மானியம் பெற வீட்டு மனைகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது குடியிருப்போரில் 10% பேருக்கு வீட்டு மனைகள் கிடையாது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இதேபோலத்தான், முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்கள் மீண்டும் நல்லுறவை உருவாக்கிக்கொள்வது தொடர்பான விவகாரமும். கடந்த காலச் சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம் மக்களுடன் சமரசம் ஏற்படுத்திக்கொள்வதில் தமிழ் அமைப்பினர் பலருக்கும் அக்கறை இல்லை.

இன ஒற்றுமை இயக்கம்

அரசின் முன் முயற்சியில் அமைக்கப்பட்ட அரசியல் சட்டச் சீர்திருத்தத்துக்கான பொதுப் பிரதிநிதித்துவக் குழு மூலம் அனைவரின் கருத்தும் ஏற்கப்படும் என்பதால், இந்த அவலங்களுக்கு இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், அதன் 2016 மே மாத அறிக்கையோ சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிபுணர்களின் கருத்துகளோடு நின்றுவிட்டது. இப்போது இது மறக்கப்பட்டுவிட்டதைப் போலவே தெரிகிறது. பெரும்பான்மையினவாதம் பேசும் ராஜபக்ச முகாமைச் சமாளிப்பதற்கான அரசியல் நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றாகிவிட்டது. இப்படி இந்தக் குழுக்களுக்கு அஞ்சி தயாரிக்கப்படும் அரசியல் சட்டமானது நிச்சயம் தோல்வியைத்தான் சந்திக்கும்.

புதிய அரசியல் சட்டம் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்திய பெரும்பான்மை யினவாதக் குழுக்களுக்கு அஞ்சினால், புதிய அரசியல் சட்டம் எப்படி அனைத்துத் தரப்பினரின் நியாயமான தேவைகளையும் பூர்த்திசெய்வதாக அமையும்? மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு வலுவாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கே இது ஆபத்தாக முடியும். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை இயக்கங்களால் மட்டுமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதாரத் துயரங்களுக்குத் தீர்வு காண முடியும். அதுவே இலங்கையின் உண்மையான அமைதிக்கு வழிவகுக்கும்!

- அகிலன் கதிர்காமர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் பொருளியல் அறிஞர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி
© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x