Published : 15 Jun 2017 09:08 AM
Last Updated : 15 Jun 2017 09:08 AM

மக்களின் நம்பிக்கையை இழப்பதுதான் பேரிழப்பு!

அதிமுக தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள சட்ட மன்ற உறுப்பினர்களோடு பண பேரம் நடத்தியதாகச் சொல்லப்படும் விவகாரம் தமிழகச் சட்ட மன்றத்தை ஸ்தம்பிக்க வைத்திருப்பது தமிழக அரசியலின் இழிந்த வரலாற்றின் ஒரு அத்தியாயமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தனித்துப் பார்க்க முடியவில்லை; ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் இரு பிரிவுகளும் அடுத்தடுத்து சிக்கும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே இதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களின் உரிமை சார்ந்து பேச வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணத்தில் ஆட்சியைத் தன் கையில் வைத்திருக்கும் அதிமுகவினர் இப்படியான இழிவான குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கிவருவது அதிமுகவைப் பலவீனப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தின் நலன்களையும் பாதிப்பதாகவே அமையும்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற காலகட்டமே மோசமான ஒன்றாக அமைந்திருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்தின் கட்டாய ராஜிநாமாவை அடுத்து, புதிதாக ஆட்சி அமைக்க வாய்ப்பு கோரிய சசிகலா பிரிவு, சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களிடமிருந்து பிரிந்து பன்னீர்செல்வம் பிரிவிடம் சென்றுவிடக் கூடாது என்று அவர்களை அழைத்துச்சென்று கூவத்தூரில் ஒரு விடுதியில் தங்க வைத்தது. கூவத்தூரில் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நாட்களில் நடந்த பல சம்பவங்கள் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கின.

அப்போதே சட்ட மன்ற உறுப்பினர்களைத் தத்தமது பிரிவுகளில் கொண்டுவர இரு தரப்புகளிலிருந்தும் பேரங்கள் நடந்ததாகப் பேசப்பட்டது. சட்ட மன்றத்தில் பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது கடுமையான அமளி நடந்தது. அதன் விளைவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தது நடந்த அமளிதுமளிகளுக்கான ஒரு குறியீடுபோல அமைந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாலும், அதிமுகவின் இரு பிரிவுகளும் வெளியே சதா ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டுகள், அவதூறுகளை வீசிய வண்ணமே இருந்தனர். இடையில் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இரு தரப்பும் கட்சி யார் கையில் இருக்கிறது என்பதற்கான யுத்தமாக அதை மாற்றினர். ஓட்டுக்காக ஏராளமான பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது ஆதாரத்தோடு சிக்கியதன் விளைவாகத் தேர்தலையே ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.

அடுத்து, கட்சியின் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பிலான லஞ்சக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார் சசிகலா பிரிவின் துணைப் பொதுச்செயலரான தினகரன். இப்போது, ‘நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடந்தபோது உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று ரூ.10 கோடி வரையில் விலை பேசப்பட்டது’ என்று அதிமுகவின் இரு தரப்புகள் மீதும் குற்றம்சாட்டி தனியார் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவுகள் சம்பந்தப்பட்டவர்களால் கடுமையாக மறுக்கப்பட்டாலும் தமிழக மக்களுக்குப் புதிதாக எந்த அதிர்ச்சியையும் அளித்துவிடவில்லை; மாறாக ஏற்கெனவே இது தொடர்பாக இருந்த சந்தேகங்கள் மேலும் வலுப்பெறவே வழிவகுத்திருக்கிறது.

பதவிக்காகப் பண பேரம் நடத்தும் அவலம் இந்திய அரசியலில் புதிதல்ல என்றாலும், தமிழகத்தைப் பொறுத்த அளவில் இந்த இழிவான கலாச்சாரம் அரிதானது என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு விலை பேசும் பொதுவான போக்கினூடே சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கே பேரம் பேச வேண்டிய நிலையை நோக்கி நகர்வது என்பது கூடுதல் அசிங்கமானது. இப்படியான ஒரு குற்றச்சாட்டு எழும்போது எதிர்க்கட்சிகள் அதுகுறித்து சட்ட மன்றத்தில் விளக்கம் கேட்பதோ, விவாதத்துக்கு அனுமதி கோருவதோ இயல்பானது.

மேலும், இது தொடர்பாகப் பதில் அளிக்க வேண்டிய தார்மிகக் கடமையும் கட்டாயமும் முதல்வர் பழனிசாமிக்கு உண்டு. அப்படிச் செய்யாமல் எதிர்க்கட்சிகளை வெளி யேற்றுவது என்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே அன்றி வேறு இல்லை. பிரச்சினையின் மையம் பழனிசாமி முதல்வராக இருப்பதன், இந்த அரசு நீடிப்பதன் மைய ஆதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பத்தோடு ஒன்று பதினொன்று பிரச்சினையாக இதை அணுக முடியாது. சட்ட மன்றத்தில் தன் மீதான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதைக் காட்டிலும் ஒரு அரசுக்கு முக்கியமானது மக்களின் நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்வது. அதிமுக அரசும் ஆளும்கட்சியின் இரு பிரிவுகளும் இன்று அதைப் படிப்படியாக இழந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மைக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x