Published : 17 Oct 2013 05:46 PM
Last Updated : 17 Oct 2013 05:46 PM

அலோக் பாஜ்பாய் ஏன் இந்தியா வந்தார்?

க‌னிமவளம் உள்ளிட்ட ஆதாரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. மக்கள்தொகையோ பெருகிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், இளம் தொழில்முனைவோர் தொழில்நுட்பத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளன‌ர்.

உலக மக்கள்தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் புதுதில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில், அவர்களில் பாதிப் பேரைப் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்! அவர்களெல்லாம் நடந்தும் சைக்கிள் ஓட்டிக்கொண்டும் பைக், ஸ்கூட்டர்களில் பயணம் செய்துகொண்டும் இருந்தனர். 'பிக் அப்' வேன்களிலும், நசுங்கிய கார்களிலும் மோட்டார் பொருத்திய ரிக் ஷாக்களிலும் நெருக்கியடித்துக்கொண்டு பயணப்பட்டனர். போலீஸ்காரர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சிக்னல் விளக்குகள் தடுத்தாலும் அனுமதித்தாலும் அவரவர் வேலைக்குப் போய்க்கொண்டே இருந்தனர்.

   எவ்வளவுதான் வறுமை ஒழிப்புத் திட்டங்களை நிறைவேற்றினாலும் பெருகிக்கொண்டே வரும் மக்கள்தொகையில் இவர்களில் கணிசமானவர்கள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்று உங்கள் மனம் சொல்லும்போதே, சில புதிய விஷயங்களையும் காணக் கண்கள் தவறுவதே இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில் சில மைல்களுக்கு ஒரு முறை புதிய செல்போன் கோபுரங்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. கட்டுப்பாடான குழப்பங்களுக்கு இடையிலும் புத்தம் புதிய கட்டடங்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அத்தகைய கட்டடங்களில் உள்ள போர்டுகளில் ஸ்கூல் என்ற வார்த்தை தவறாமல் இடம்பெறுகிறது. இன்ஜினீயரிங் ஸ்கூல்,

ப‌யோடெக்னாலஜி ஸ்கூல், இங்கிலீஷ் லாங்குவேஜ் ஸ்கூல், பிசினஸ் ஸ்கூல், கம்ப்யூட்டர் ஸ்கூல், தனியார் எலிமென்டரி ஸ்கூல் ஆகியவைதான் அவை. 'இயற்பியலில் பட்டம் வாங்க வேண்டுமா? எங்கள் கல்வி நிலையங்களில் சேருங்கள்' என்ற விளம்பரங்களை இன்னமும் இந்தியாவில்தான் பார்க்க முடியும்.

இந்தப் பள்ளிக்கூடங்கள், 60 கோடி கைபேசிகள், 102 கோடி மக்கள் -‍ அவர்களில் சரிபாதி  25 வயதுக்கும் குறைவானவர்கள் - ஆகிய அம்சங்கள்தான் இந்தியாவின் நம்பிக்கை. தொழில்நுட்பத்தையும் இளைஞர்களின் அறிவுத் திறனையும் இணைத்துப் பயன்படுத்தித்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். ஆனால், அப்படி நடக்காமல் போவதற்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும். ஆனால், அப்படி நடப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எதை நடக்கும் என்று சொல்கிறோமோ அது அப்படியே நடக்கிறது. மேற்கத்திய நாடுகளின் உள்அறைகளில் அமர்ந்து அவர்களுக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த இந்திய இளைஞர்கள் இப்போது இந்திய நிறுவனங்களின் முன்னறைகளில் அமர்ந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிறுவனங்கள் இந்தியப் பிரச்சினைகளுக்கு, அதிக செலவுவைக்காத, எளிதான தீர்வுகளை அளிக்கத் தொடங்கிவிட்டன. மறைந்த சி.கே. பிரஹ்லாத் அவற்றைக் காந்தியக் கண்டுபிடிப்புகள் என்று அழைத்தார். அப்படிப் பல கண்டுபிடிப்புகளையும் தீர்வுகளையும் நான் புதுதில்லியில் கண்டுகொண்டேன்.   

'ஏக் காவோன்' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் பிரதாப் சிங் ஆதித்யாவைச் சந்திப்போம். அவரது குறியெல்லாம் இந்திய விவசாயிகள்தான். அவர்கள்தான் இந்திய மக்கள்தொகையில் சரிபாதி. புதிதாக உருவாகிவரும் 'சந்தைக்குள் சந்தை' அவர்கள் என்பது அவருடைய கணிப்பு. எழுத்தறிவில்லாத விவசாயிகளுக்கு, மிக மலிவான விலையில் விற்கப்படும் கைபேசிகள் மூலமே வேளாண் ஆலோசனைகளை வழங்குவதற்கான கணினி மென்பொருளை அவர் உருவாக்கினார். விதைப்பதற்கு எது உரிய காலம், என்ன விதைக்கலாம், எந்த உரம் நல்லது, பூச்சிகள் தாக்காமல் இருக்க எந்தப் பூச்சிக்கொல்லி சிறந்தது, தினமும் எவ்வளவு நீரைப் பாய்ச்ச வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனைகள் கைபேசி வழியாக விவசாயிகளை அடைகின்றன.

விவசாயப் பண்ணை நிலங்களின் உற்பத்தித் திறனைக் கூட்ட வேண்டும். ஆனால், நம்முடைய விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களின் பரப்பு மிகமிகக் குறைவு. வேளாண் விரிவாக்கத் துறை அலுவலர்களால் எல்லா விவசாயிகளையும் சந்திக்க முடியாது. எனவே, மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே கேட்டு விவசாயிகள் செயல்படுகிறார்கள். இதனாலேயே நிலம் சாரம் இழந்து விளைச்சலும் குறைகிறது. அந்தந்தப் பகுதியின் மண்வளம், காலநிலை ஆகியவற்றுக்கேற்பப் பயிர்கள் பரிந்துரைக்கப்பட்டு, உரிய காலத்தில் பயிர்ச் சாகுபடி ஆலோசனைகளும் தெரிவிக்கப்படுகின்றன என்றார் ஆதித்யா. சுமார் 12,000 விவசாயிகள் அவருடைய சேவையை ஆண்டுக்குச் சுமார் 300 ரூபாய் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக்கொள்கின்றனர். 5 ஆண்டுகளில் சுமார் ஒன்றரைக் கோடி விவசாயிகளை வாடிக்கையாள‌ர்களாக ஈர்க்க அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

  அடுத்து 'ஃபோரஸ் ஹெல்த்' இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கே. சந்திரசேகரைச் சந்திப்போம். 'உலகில் உள்ள பார்வையற்றவர்களில் கால்வாசிப் பேர், சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். அவர்களில் 80% பேர், கிராமப்புறங்களில் பயிற்சி பெற்ற கண் பரிசோதகர்கள் இல்லாததால்தான் பார்வையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். சர்க்கரை நோயினால் விழித்திரையில் பாதிப்பு, கண்ணில் புரை வள‌ர்தல், விழித்திரை மீது வெண்படலம் படர்தல், கண்ணின் மணியில் பாதிப்பு ஏற்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான் 90% பேர். விலையுயர்ந்த சோதனைக் கருவிகளும் கண் பரிசோதகர்களும் இருந்திருந்தால் இத்தனை பேரின் பார்வையிழப்பு தடுக்கப்பட்டிருக்கும்.

எனவே, ஃபோரஸ் நிறுவனம் ஒரு கருவியைக் கண்டுபிடித்தது. எங்கு வேண்டுமானாலும் கையில் எடுத்துச் செல்லக்கூடியது. பார்வையைச் சோதிக்கும் அந்தக் கருவி எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் வடிவமைக்கப்பட்டது. அடிப்படையான ஐந்துவிதக் கண் கோளாறுகளில் ஏதேனும் ஒன்றோ, ஒன்றுக்கும் மேலோ இருந்தால் அந்தக் கருவியைக்கொண்டு கண்டுபிடித்துவிடலாம். 'டாக்டரைப் பார்க்க வேண்டும்' என்றோ 'கோளாறு இல்லை' என்றோ அது ஆய்வு முடிவை ஒற்றை வரியில் தெரிவித்துவிடும். இந்தத் தொழில்நுட்பத்தை எங்களிடம் வாங்க பிரேசில் நிறுவனம் ஒன்று விரும்புகிறது. கண்ணாடிகளைத் தயாரிக்க‌ ஹாலந்து நிறுவனம் ஒன்றுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், வர்த்தக மேலாண்மை நடவடிக்கைகளுக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம் உதவ முன்வந்திருக்கிறது என்கிறார் சந்திரசேகர். மற்றவர்களுக்காக, அயல் பணி ஒப்படைப்பு மூலம் உதவிக்கொண்டிருக்கும் நாம், இப்போது மற்றவர்களிடம் வேலையை ஒப்படைக்கும் நிலைக்கு உயர்ந்துகொண்டிருக்கிறோம்.

அடுத்து, அலோக் பாஜ்பாயைச் சந்திப்போம். அவரும் மற்ற இளைஞர்களைப் போலவே மேற்கத்திய நாட்டு நிறுவனங்களுக்காக மாடாக உழைத்து நொந்துபோனார். இந்தியாவுக்குச் சென்று 'சொந்தமாகவே செய்வேன்' என்று சூளுரைத்துவிட்டு வந்தார். 'சொந்தமாக எது?' என்பதைத் தீர்மானிக்கவில்லை. ஆனால், அப்படிப் பிறந்ததுதான் ‘இக்ஸிகோ டாட்காம்’. போக்குவரத்து தொடர்பான இணையதளம் அது. மிக மலிவான கைபேசிகளிலிருந்துகூட தகவல்களைப் பெற அதனால் முடியும். மிகக் குறைந்த கட்டணத்தில் பேருந்து அல்லது ரயிலில் சாமானியர் பயணம் செய்யவும், பெரும் பணக்காரர்கள் விமானத்தில் பாரீஸ் செல்லவும் உதவுவதுதான் ‘இக்ஸிகோ டாட்காம்’. இப்போது 10 லட்சம் பேர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, தங்கள் பயணங்களைச் சுகமாக்கிக்கொள்கின்ற‌னர். பாஜ்பாய் இதற்காக அனைவரும் பயன்படுத்தக்கூடிய இலவச மென்பொருளையே பயன்படுத்தினார். முதலீடு இல்லாமலேயே அவருடைய நிறுவனம் வெகுவேகமாக வளர்ந்துவிட்டது.

கடைசியாக வருபவர் இன்ஃபோசிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி நந்தன் நிலகேணி. இந்தியர் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை மூலம் அடையாள எண் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் அவர்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற எந்த ஆவணமும் இல்லாதோர் எண்ணிக்கை அதிகம் என்ற நிலையில் அவருடைய முயற்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 கோடிப் பேர் ஆதார் அட்டை பெற்றுவிட்டனர். இந்தப் பணி பூர்த்தியானால், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் கைபேசி மூலம் அல்லது அவரவர் வங்கிக் கணக்கு மூலம் மானியங்களையும் உதவித்தொகைகளையும் வழங்கிவிட முடியும். திறமையற்ற, ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் அதில் கைவைக்கவே முடியாது.

‘‘உரிமைகள் மிகவும் மறுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் நவீனத்துவம் வாய்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்’’ என்றார் நந்தன் நிலகேணி. ’ ‘ ‘ ‘‘தொழில்நுட்பத்தால் நன்கு இணைக்கப்பட்டிருக்கும் உலகம், இதுவரை இருந்திராத வகையில் இந்தியா வேகமாகவும் பெருமளவிலும் மாறுதல்களை அடைய வாய்ப்பைத் தந்திருக்கிறது’’ என்கிறார் அவர்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x