Published : 07 Jan 2014 12:00 AM
Last Updated : 07 Jan 2014 12:00 AM

தங்க விளையாட்டில் வெற்றி நிச்சயம்

நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்திய மக்களிடம் மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுத்திருக்கிறார், “தங்கம் வாங்க வேண்டாம்” என்று. தங்கம் வாங்குவது தேசத்தைப் பாதிக்கிறது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் நினைக்கிறார். அவரே ‘வழக்கறிஞ’ராக இருக்கும்போது, “லாபம் கருதி தங்கத்தை இறக்குமதி செய்வதில் தவறு இல்லை” என்று கருதுகிறார். அரசு வர்த்தகக் கழகம் (எஸ்.டி.சி.) என்ற அமைப்பு வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்து, இந்திய தங்க வியாபாரிகளுக்குக் கொடுக்க, ஒப்பந்தப்படி கடமைப்பட்டது என்று தங்க வியாபாரி ஒருவருக்கு அளித்த சட்ட ஆலோசனையில் அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இது சகஜம்

தங்கம் தொடர்பான கொள்கை ஒருவிதமாகவும் நடைமுறை வேறு மாதிரியாகவும் இருக்கிறது. கல்லூரிகளில் பெரும்பாலான பொருளாதாரப் பேராசிரியர்கள், தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பதைக் கடுமையாகக் கண்டிப்பார்கள். பங்குகளில் முதலீடு செய்வதுதான் பொருளா தாரம் செழிக்க நல்ல வழி என்பார்கள். அவர்களே தங்களுடைய வருமானத்தில் சேமிப்பை முதலீடு செய்ய வங்கிகள், நிலம் அல்லது வீடு, தங்கம் என்று அந்த வரிசையில்தான் லாபகரமான இனங்களைத் தேர்வுசெய்வார்கள்.

10 பைசாவைக்கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மாட்டார்கள். இந்தியாவில் இப்படித்தான் பலர் பொருளாதாரத்தில், பிரச்சாரத்துக்காக ஒன்றைப் பேசுவதும் நடைமுறையில் மாற்றிச் செயல்படுவதுமாக இருக்கின்றனர். மத்திய அரசின் கொள்கையை வகுப்போர்கூட, தங்க இறக்குமதி குறைந்துவருவதைக் காட்டும் புள்ளிவிவரங்களால் புளகாங்கிதம் அடைந்து தங்களைப் பாராட்டிக்கொள்கின்றனர்.
எந்த அளவுக்குக் குறைந்ததாக புள்ளிவிவரம் கூறு கிறதோ அதைவிட அதிகமாகவே சட்டவிரோத மாகத் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். அரசின் கொள்கைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டதல்ல தங்கம் என்பதை ரிசர்வ் வங்கியும் இப்போது ஒப்புக்கொள்கிறது.

சிறிய வித்தியாசம்தான்!

தங்க விற்பனையையும் கையிருப்பையும் கட்டுப்படுத்த அரசு கொண்டுவந்த நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றைப் படித்தாலே மேற்கத்திய நாடுகளில் ஏன் பலன் தருகின்றன, இந்தியாவில் ஏன் தோல்வியடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். மேற்கத்திய நாடுகளில் அரசுகள் - அவை ஜனநாயகபூர்வமானவையோ, சர்வாதிகாரமானவையோ, சமத்துவமோ, முதலாளித்துவமோ - நீண்ட காலத்துக்கு முன்பே மக்களிடமிருந்த தங்கத்தை எல்லாம் பெற்று தேசியமயமாக்கிவிட்டன.

எனவே, மேற்கத்திய நாடுகளில் தங்கத்தைத் தனிப்பட்ட முறையில் வாங்குவது, சேமிப்பது என்கிற கலாச்சாரம் கிடையாது. தங்கத்தை வைத்திருக்கும் ஏகபோக உரிமை அரசுக்குத்தான். மக்களைப் பொறுத்த வரை அது முதலீட்டுக்கான ஒரு உலோகம், அவ்வளவுதான்.

இந்தியாவில் அப்படி ஒருபோதும் நடக்காது. இந்தியாவில் இறக்குமதியாகும் தங்கத்தில் நான்கில் மூன்று பகுதி நகைகளுக்காக என்றால், மீதிதான் முதலீட்டுக்காக வாங்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளுக்குப் பொருந்தும் தங்கக் கொள்கை இந்தியாவுக்குப் பொருந்தாது என்று சொல்ல ஒரு தீர்க்கதரிசிதான் அவசியம் என்றில்லை, சாதாரணமானவர்களே போதும். இந்திய மக்களின் மனப்போக்குக்கு ஏற்ற தங்கக் கொள்கைதான் அவசியம்.

கேட்க மறந்த கேள்வி

இந்தியாவுக்கேற்ற தங்கக் கொள்கையை வகுக்க வேண்டுமென்றால், இந்தியர்கள் அதிகாரபூர்வ வழியிலோ அல்லது கடத்தல் காரர்களிடமிருந்தோ தொடர்ந்து தங்கத்தை வாங்கிக்கொண்டே இருப்பார்கள் என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். எதுவரை என்றால், உலகம் தங்கத்தை இந்தியாவுக்கு விற்கும்வரை. “பிற நாடுகளிலெல்லாம் தங்கம் கிடைப்பது நின்றுவிட்டால்?” என்பது ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி.

உலகில் விற்கப்படும் தங்கத்தில் கால் பகுதியை இந்தியாவே வாங்குகிறது. இது இந்தியாவில் வெளிவர்த்தகப் பற்றுவரவில் நடப்புக் கணக்கில் கடும் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடுகிறது என்பதால், இது சாபமாகவே பார்க்கப்படுகிறது. “ஓராண்டுக்கு இந்தியா இந்த தங்கத்தை வாங்காமலோ, இறக்குமதி செய்யாமலோ இருந்தால் உலக தங்க வியாபாரம் என்னவாகும்?’’ என்று இந்திய ஆட்சியாளர்கள் தங்களுக்குள் எப்போதும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

இதற்கான விடை மிகவும் வெளிப்படையானது. உலக தங்க வியாபாரம் படுத்துவிடும். அப்படி தங்க வியாபாரம் படுத்துவிட்டால், யாருக்கு அதனால் நன்மை கிடைக்கும்? கேள்விக்கே இடமில்லை - நன்மை இந்தியாவுக்குத்தான். காரணம், தங்கம் வாங்க இந்தியர்கள் குறைவான டாலர்களையே செலவு செய்வார்கள்.

ஒரு நல்லதும் நடந்துவருகிறது - இந்தியத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பி.ஐ.எஸ்.) சுட்டிக்காட்டுவதைப்போல - தங்க விலைதான் இப்போது குறைந்திருக்கிறதே என்று அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை இந்தியர்கள்; தங்க விலை அதிகமாக இருந்தபோதும் விலை ஏறிவிட்டதே என்று வாங்காமலும் இல்லை. இந்தியர்களுக்கு வசதி வந்தால் தங்கம் வாங்குவதும் அதிகரிக்கிறது என்கிறது பி.ஐ.எஸ். எனவே, தங்கம் விலை சரிவ தால் மட்டுமே தங்க இறக்குமதியும் அதிகரித்துவிடுவதில்லை. அன்னியச் செலாவணி கரைவது குறைவாக இருக்கும் என்பதே உண்மை.

©பிசினஸ் லைன், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x