Published : 01 Oct 2014 08:43 AM
Last Updated : 01 Oct 2014 08:43 AM

காஷ்மீர்தான் பாகிஸ்தானின் விடிவெள்ளியா?

பாகிஸ்தான் அரசியல் சூழலில் தப்பிப் பிழைப்பதற்கு காஷ்மீர் என்ற பகடைக்காய் மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது. சமீபத்தில் நவாஸ் ஷெரீஃப் நியூயார்க்கில் பேசிய பேச்சு அப்படிப்பட்ட பகடைக்காய் உருட்டல்தான்.

காஷ்மீரைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு பாகிஸ்தானின் இன்றைய நிலை என்ன என்பதையும் நவாஸ் ஷெரீஃப் நினைத்துப்பார்த்திருக்க வேண்டும். அடிப்படை வசதிகள், அடிப்படைக் கட்டமைப்புகள், பொருளாதாரம், மனித உரிமைகள் என்று எதை எடுத்தாலும் உலக அளவில் இந்தியாவைவிட மிகவும் பின்தங்கிய நாடாக இருக்கிறது பாகிஸ்தான். அதிகாரப் போட்டிகள், ராணுவ ஆட்சிகள் போன்றவை பாகிஸ்தானை மாறிமாறிச் சீர்குலைத்திருக்கின்றன. காலம்காலமாக இவற்றுக்கிடையே சிக்கி, அங்குள்ள மக்கள் மிகவும் நைந்துபோன மனநிலையில், விரக்தியின் உச்சத்தில்தான் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானும் சுதந்திர இந்தியாவும் பிறந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் அடிப்படை வசதிகள், பொருளாதாரம், சமூகநீதி போன்ற விஷயங்களில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியையும் பாகிஸ்தான் அடைந்திருக்கும் வளர்ச்சியையும் ஒப்பு நோக்கினாலே தெரியும், அதன் ஆட்சியாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னேற்றத்தில் எந்த அக்கறையும் இருந்ததில்லை என்று. எவ்வளவோ பிரச்சினைகளூடாகத்தான் இந்தியாவும் இன்றைய நிலையை எட்டியிருக்கிறது என்பதையும் மறந்துவிட முடியாது. இதற்கு முக்கியக் காரணம் இதுதான்: இந்தியாவின் செயல்திட்டங்களுள் தலையாயது வளர்ச்சி; ஆனால், பாகிஸ்தானின் தலையாய செயல்திட்டம் காஷ்மீர்.

மக்களை உணர்ச்சிபூர்வமாக விழச் செய்வது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. எப்போதெல்லாம் தங்களுக்கு வீழ்ச்சி ஏற்படுவதுபோல் தெரிகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் காஷ்மீர் என்ற அஸ்திரத்தை எடுத்துப் பிரயோகிப்பார்கள். இம்ரான் கான் உள்ளிட்ட எதிர்ப்பாளர்களால் பாகிஸ்தான் நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டிருக்கும் சூழலில்தான் ஷெரீஃபின் நியூயார்க் உரை அரங்கேறியது என்பதை உற்றுநோக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, எதிர்க் கட்சித் தலைவர்களும் அப்படித்தான். ஆட்சி யாளர்களை வீழ்த்துவதற்காக மக்கள் ஆதரவைப் பெற அவர் களுக்கும் அதுதான் பிரம்மாஸ்திரம். ‘‘காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது. நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று. இந்தியாவிடமிருந்து ஒட்டுமொத்த காஷ்மீரையும் கைப்பற்றுவேன். ஓர் அங்குலத்தைக்கூட விட்டுவைக்க மாட்டேன்’’ என்று பிலாவல் புட்டோ பேசியதும் அதனால்தான்.

வரலாறு காணாத வெள்ளத்தால் காஷ்மீர் மாநிலமே சீர்குலைந்து போயிருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரைப் பணயம் வைத்து ஆட ஷெரீஃப் கூப்பிடுவதை என்னவென்று சொல்வது? ஷெரீஃபின் பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில் பேசியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. உலகம் எதிர்நோக்கியுள்ள வறுமை, கல்வியறிவின்மை, சுகாதாரம் ஆகிய பிரச்சினைகளைத் தொட்டுக்காட்டி, சர்வதேச அரங்கில் பேச வேண்டியவை உலக மக்களின் நலன் சார்ந்த விஷயங்கள்தான் என்பதை ஷெரீஃபுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இடைவிடாமல் இந்தியாவைச் சாடிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் காஷ்மீருக்காகப் பணயம் வைக்கிறார்கள் அதன் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும். இப்படியே போனால், உலகம் முழுவதும் வெகு தூரம் போன பிறகு பாகிஸ்தான் மட்டும் பரிதாபமாகப் பின்னால் ஓடி வர நேரிடும். இதைத்தான் உங்கள் அப்பாவி மக்களுக்காக நீங்கள் செய்யப்போகிறீர்களா நவாஸ் ஷெரீஃப்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x