Published : 20 Jul 2016 09:40 AM
Last Updated : 20 Jul 2016 09:40 AM

பயிரைக் காக்க உயிரைக் கொல்வதா?

அந்தப் பூங்காவைச் சுற்றி சுமார் 40 சிறுத்தைகள் வசிக்கின்றன. சூழலைக் கிரகித்துக்கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும் விஷயத்தில் சிறுத்தைகள் உண்மையில் 21-ம் நூற்றாண்டு விலங்குகள்தான்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 108 பேர் யானை தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள். 2004 முதல், ரயில்வே பாதையைக் கடக்க முயன்ற 50 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கின்றன.

ஜூன் 14-ல் பச்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்கள் குடியிருப்புகளுக்குள் யானைகளைத் திரியவிட்டதற்காக வனத் துறை அதிகாரிகளைக் காய்ச்சி எடுத்தார். “யானைகள் மீது அதிக அக்கறை காட்டுபவர்கள் உண்டு. எனக்கும் யானைகள் பிடிக்கும். அதேசமயம், மனித உயிர்களும் விலை மதிப்பற்றவை” என்று குறிப்பிட்டார்.

ஆலோசனையில் மேற்குவங்க அரசு

மனிதன் வளர்ச்சிக்காகத் திட்டமிடும்போது, விலங்குகள் விரட்டப்படுகின்றன. ஆனால், அவை திரும்பிவிடுகின்றன. பங்குராவில் மட்டும் கிட்டத்தட்ட 80 யானைகள் தங்கிவிட்டன. அவை திரும்பிச் செல்வதற்கான அறிகுறிகள் இல்லை. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி, மேற்கு வங்கத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 800. யானைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தினாலும், தெற்கு மாவட்டங்களான பங்குரா, பச்சிம் மேதினிபூர், புருலியா ஆகியவற்றின் ஏழு பிரிவுகளில் இதுகுறித்த குழப்பம் நிலவுகிறது. யானைகளைப் பிடித்து வேறு எங்காவது அனுப்புவதன் மூலம் நிலைமையைச் சமாளிக்கலாம் என்று கருதும் மேற்கு வங்க அரசு, இதுதொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறது.

கள நிலவரங்களின்படி, குறைந்தபட்சம் ஏழு மாநிலங்களில், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் தீவிரமான மோதல் நிலவுகிறது. இவ்விஷயத்தில் உதவுமாறு மத்திய அரசுக்கு இந்த மாநிலங்கள் கடிதம் எழுதியிருக்கின்றன.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக வனவிலங்குகள் இருப்பதாக கோவாவில் தீவிர விவாதம் நடந்தது. கோவாவின் மாநில விலங்கான காட்டெருமை, தேசியப் பறவையான மயில், காட்டுப் பன்றி, குரங்கு ஆகியவைதான் அந்த விலங்குகள். இந்த விவகாரத்தில் மனிதர்களின் பங்கைப் பற்றி விவாதிக்க ஒருவரும் தயாராக இல்லை. ரியல் எஸ்டேட்காரர்களாலும், சரியாகத் திட்டமிடாத வளர்ச்சியாலும் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் வேகமாக அழிந்துவருகிறது. கோவாவின் விவசாயத் துறை அமைச்சரான பாஜகவைச் சேர்ந்த ரமேஷ் தவாட்கர், பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் உயிரினமாக மயிலை அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது வேட்டையாடப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

பாதுகாக்கப்பட வேண்டிய பறவை மயில்

ஆனால், வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி மயில் பாதுகாக்கப்பட வேண்டிய பறவை. அதேபோல், காட்டுப் பன்றிகள் விவசாயத்துக்குச் சேதம் விளைவிக்கும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வேட்டையாடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் ரானே கூறுகிறார். கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்தப் பட்டியலில் மயிலைச் சேர்க்கப்போவதில்லை என்று கோவா முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் கூறியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் 1-ல், பிஹாரின் சில மாவட்டங்களில் இரலை வகையைச் சேர்ந்த நீலப்பசு, காட்டுப் பன்றி ஆகியவற்றைப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் விலங்குகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. பிப்ரவரி 3-ல் உத்தராகண்ட் மாவட்டங்களில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் விலங்காகக் காட்டுப் பன்றியை அறிவித்தது. மூன்றாவதாக, மே 24-ல் இமாச்சலப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் உள்ள செம்முகக் குரங்குகளை அவ்வாறு அறிவித்ததுடன் ஓராண்டுக்கு அவற்றை வேட்டையாடவும் அனுமதியளித்தது.

ஆனால், இந்த மூன்று அறிவிக்கைகள் தொடர்பாகச் சர்ச்சை எழுவதற்கு முன்பாகவே, ரணதம்போர் தேசியப் பூங்கா அருகில் வசிக்கும் விவசாயிகள், தங்கள் பயிர்களை நீலப்பசுக்கள் சேதப்படுத்துவதாகத் தங்களைச் சந்திக்க வந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. வன விலங்குகளைக் கொல்லும் அதிகாரம் மாநிலத்தின் தலைமை வனக் காவலரிடம் இருப்பதால், இவ்விஷயத்தில் ராஜஸ்தான் அரசே சொந்தமாக முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது மத்திய அரசு. ஆனால், நீலப்பசுக்களைக் கொல்ல உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த விஷயம் அப்படியே நிற்கிறது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தில் பெருகி வரும் புலிகளுக்கு இந்த மான்கள்தான் உணவு. வனஉயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் இருந்து ஐந்தாவது பிரிவுக்கு நீலப்பசுக்களை மாற்றுவது குறித்தும், அவற்றைக் கொல்ல கிராமத் தலைவருக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் அரசு பரிசீலிப்பதாக ராஜஸ்தான் சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் அறிவித்தது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

மறுபுறம் கர்நாடகாவில், வாழிடம் மற்றும் உணவுக்காக மனிதர்கள், வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு இடையே போராட்டம் நடந்துகொண்டேயிருக்கிறது. கர்நாடகாவில், குறிப்பாக மைசூர், குடகு, மாண்டியா உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், மைசூர் யானைகள் சரணாலயத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள 6,724 சதுர கி.மீ. பரப்பளவில் 6,000-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன.

வாழு… வாழவிடு!

கனியன்பூரா பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான கல்லையாவும் புத்தமாடையாவும், “நாங்கள் வன விலங்குகளுடன் வாழிடத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். அவற்றை வெறுப்பதில்லை” என்கிறார்கள். மும்பையின் மையப் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா அருகில் வசிப்பவர்களிடமும், ‘வாழு, வாழவிடு’ எனும் புரிதல் இருக்கிறது. பூங்காவின் 103 சதுர கி.மீ. பரப்பளவுப் பகுதியில் வசிக்கும் 1,800-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களைப் பொறுத்தவரை புலி ஒரு தெய்வம். தேசியப் பூங்காவுக்கு அருகில் உள்ள ஆரே காலனியில் வசிக்கும் சந்து ஜாதவ் எனும் முதியவர், சிறுத்தைகள் தனது நண்பர்கள் என்கிறார். அவர் வளர்க்கும் கோழிகளை அவ்வப்போது வேட்டையாடி உண்ணும் சிறுத்தைகள் பின்னர், அவர் வீட்டருகே உள்ள மரத்தின் அடியில் இளைப்பாறும். “இந்த நிலம் அவற்றுக்குச் சொந்தமானவை. காலங்காலமாக மனிதர்களும் சிறுத்தைகளும் இங்கு வசித்துவருகிறோம். அவை எங்களைத் தொந்தரவு செய்வதில்லை” என்கிறார் அவர். இங்கு வாழ்ந்துவந்த புலிகள் மறைந்த பின்னர், அந்த இடத்துக்குச் சிறுத்தைகள் வந்துவிட்டன. “கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் என்று எங்கள் காட்டைச் சுற்றியுள்ள இடங்களில் வந்துவிட்டன. எனது நிலத்தை எடுத்துக்கொள்ள முயன்றால் நான் போராடுவேன். சிறுத்தைகளும் அப்படித்தான். அவை என்ன தவறு செய்தன?” என்று கேட்கிறார் அவர்.

அந்தப் பூங்காவைச் சுற்றி சுமார் 40 சிறுத்தைகள் வசிக்கின்றன. “சூழலைக் கிரகித்துக்கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும் விஷயத்தில் சிறுத்தைகள் உண்மையில் 21-ம் நூற்றாண்டு விலங்குகள்தான். அவற்றின் உணவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கவனித்திருக்கிறோம்” என்கிறார், வனஉயிர் ஆய்வாளர் கிருஷ்ணா திவாரி. ஆனால், நவீனத்தின் பாதை அவற்றுக்கு நரகமாகவே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் 12-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உயிரிழந் திருக்கின்றன. சரக்குகளைக் கொண்டுசெல்வதற்கான வழித்தடத்தை அப்பகுதியில் உருவாக்கத் திட்டமிடப் பட்டிருப்பது, சிறுத்தைகள் வந்துசெல்லும் பாதைக்கு இடையூறாக அமையும்.

நீலப்பசுக்களையும் காட்டுப் பன்றிகளையும் கொல்ல மகாராஷ்டிர அரசு அனுமதியளிக்கிறது. பீட், லாத்தூர், உஸ்மானாபாத், ஜல்காவ் ஆகிய நான்கு மாவட்டங்களில் தங்கள் விளைநிலங்களில் நுழையும் நீலப்பசுக்களையும், காட்டுப் பன்றிகளையும் கொல்ல விவசாயிகளுக்கு அதிகாரபூர்வ அனுமதி உண்டு.

சிறுத்தைகளின் நடமாட்டம்

உத்தராகண்டின் டேராடூன் அருகே உள்ள ஃபுல்சைனி பகுதி காடுகளால் சூழப்பட்டது. அங்குள்ள பல பிரச்சினைகளில் சிறுத்தைகளின் நடமாட்டமும் ஒன்று. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயிர்கள் காட்டுப் பன்றிகள், குரங்குகள், யானைகள், நீலப்பசுக்கள் ஆகியவற்றால் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

காட்டுப் பன்றிகளைக் கொல்ல அனுமதியளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். பிப்ரவரி மாதம் பிறப்பித்த அறிவிக்கை ஃபுல்சைனி கிராம சபையின் கீழ் வரும் ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பெரிய ஆறுதலைத் தந்துவிடவில்லை. விவசாயம் அருகிவரும் கிராமங்களில், பயிர்களைச் சேதப்படுத்தும் பன்றிகளைத் தவிர, சிறுத்தைகளின் அச்சுறுத்தலும் அதிகரித்துவருகிறது. “முன்பெல்லாம், இரவுகளில் விளைநிலங்களுக்கு வரும் காட்டுப் பன்றிகளை விரட்ட, மரங்களின் மீது பரண் அமைத்துக் காவல் காத்துவந்தோம். ஆனால், அருகில் உள்ள பஜவாலா கிராமத்தில் கடந்த ஆண்டு 10 வயதுச் சிறுவனை ஒரு சிறுத்தை கொன்றதையடுத்து, அந்த வழக்கம் கைவிடப்பட்டது” என்கிறார் உள்ளூர்வாசியான விஜய் பிரகாஷ். 2008-ன் கணக்கெடுப்பின்படி உத்தராகண்ட்டில் மட்டும் 2,335 சிறுத்தைகள் இருக்கின்றன. சமீபகாலமாக நடந்துவரும் கணக்கெடுப்பு முடிந்தால்தான் தற்போதைய எண்ணிக்கை தெரியவரும்.

காட்டுப் பன்றிகளுடனும் சிறுத்தைகளுடனும் உத்தராகண்ட் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், பிஹாரில் நீலப்பசுக்கள் கொல்லப்பட்ட விவகாரம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே வார்த்தைப் போரை மட்டும் உருவாக்கவில்லை; மனிதர்களின் பிரச்சினைகளுக்காக வனவிலங்குகளைக் கொல்வதா என்ற விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள மொகாமா பகுதியில், 200-க்கும் மேற்பட்ட நீலப்பசுக்கள், ஹைதராபாதில் இருந்து வரவழைக்கப்பட்ட, பயிற்சி பெற்ற இரண்டு துப்பாக்கி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டன.

குடிநீர் தேடி யானைகள்

கடந்த 10 ஆண்டுகளாக அம்மாநிலத்தின் சுமார் 12 மாவட்டங்களில் நீலப்பசுக்களின் பிரச்சினை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இவற்றைச் சுட்டுக் கொல்வதற்காகத் தங்களுக்குத் துப்பாக்கி உரிமம் தேவை என்று பக்ஸார், போஜ்பூர், சரண் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கேட்டிருந்த அனுமதியை அம்மாநில அரசு மறுதலித்துவிட்டது. கடந்த ஆண்டு, சரண் மாவட்டத்தின் மாஞ்சி கிராமத்தில் இதற்காக யாகமே நடத்தியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். 2015 மே மாதம், பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் விலங்காக நீலப்பசுவை அறிவிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதன் தொடர்ச்சியாகவே, கடந்த டிசம்பர் 1-ல் அந்த அறிவிக்கை வெளியானது.

இதேபோன்ற பிரச்சினை குஜராத்திலும் உண்டு. அம்மாநிலத்தின் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங் களில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.80 முதல் ரூ.100 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் 1995-ல் 40,000 ஆக இருந்த நீலப்பசுக்களின் எண்ணிக்கை 2015 வாக்கில் 1,86,000 ஆக உயர்ந்திருக்கிறது. 2007-08-ல் அவற்றைக் கொல்வதற்குக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு அனுமதி வழங்கிய குஜராத் அரசு, 3,475 பேருக்கு அதற்கான உரிமத்தையும் வழங்கியது. ஆனாலும், இதுவரையில் அவை கொல்லப்பட்டதாக அதிகாரிகளுக்குத் தகவல்கள் இல்லை.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பனவள்ளி அருகே சமீபத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தது, பல ஆண்டுகளாக அங்கு நடந்துவரும் கதையின் சமீபத்திய அத்தியாயம்தான். வயநாடு மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமானோர் யானை தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார், வனவிலங்கு தாக்குதல்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மாவட்ட அமைப்பின் தலைவர் ஜோசப். கோடைகாலம் தொடங்கும்போது யானைகள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மாநிலங்களின் முச்சந்திப்பில் உள்ள முதுமலை, பந்திப்பூர் பகுதிகளிலிருந்து உணவு, குடிநீர் தேடி வயநாடு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. பிரச்சினை தொடங்குவது அங்குதான்.

பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பவை என்று இந்த விலங்குகளைப் பட்டியலிடுவது மட்டும் இதற்குத் தீர்வாகாது. ஏனெனில், காடுகள் அருகிவருவது, ஊனுண்ணிகள் வேட்டையாடப்படுவதால் தாவர உண்ணி விலங்குகள் அதிகரித்துவருவது என்று பல்வேறு பிரச்சினைகள் இதன் பின்னணியில் இருக்கின்றன என்கிறார்கள் அவர்கள். தீர்வு காண வேண்டியது அரசின் கடமை!

(ஷிவ் சஹாய் சிங், பிரகாஷ் காமத், முகமது இக்பால், யோகேந்திர சிங் தன்வார், ஆர்.கிருஷ்ண குமார், மகேஷ் லங்கா, கவிதா உபாத்யாய், அலோக் தேஷ்பாண்டே, அமர்நாத் திவாரி, மனோஜ், ஜேக்கப் கோஷி)

© ‘தி இந்து’ ஆங்கிலம் | தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x