Last Updated : 27 Dec, 2013 09:59 AM

Published : 27 Dec 2013 09:59 AM
Last Updated : 27 Dec 2013 09:59 AM

மோடி X கேஜ்ரிவால் போட்டியாக மாறுமா மக்களவைத் தேர்தல்?- யோகேந்திர யாதவ் பேட்டி

யோகேந்திர யாதவ். ஆம்ஆத்மி கட்சியின் வியூகக் குரு. டெல்லியில் நடந்த அசாதாரண மாற்றங்களில், யோகேந்திர யாதவின் பங்கு முக்கியமானது. தேசியக் கட்சிகள் கேஜ்ரிவாலுக்கு அடுத்து பிரமிப்போடு பார்க்கும் யோகேந்திர யாதவிடம் பேசினேன்.

மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் திட்டம் என்ன?

அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது.

எல்லா மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிடுகிறீர்களா?

வழக்கமான அரசியல் கூட்டல் - கழித்தல்படி பார்த்தால், டெல்லியில்கூட நாங்கள் பெரிய சக்தி இல்லை. அமைப்பு ரீதியான அரசியல் கட்சிகளுடன் எங்களால் போட்டிபோட முடியாது. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஒருகட்டத்தில் எங்கள் அமைப்பு பிரச்சாரத்தை நிறுத்திவிட்டது. டெல்லி வாழ் மக்கள் தாங்களே எங்களுக்காகப் பிரச்சாரம் செய்து ஆதரவைத் திரட்டினர். எனவே, டெல்லியில் வெற்றிபெற்றது கட்சி அமைப்பல்ல; மக்களுடைய எண்ணங்களைப் பூர்த்திசெய்ய நாங்கள் ஒரு கருவி யாகிவிட்டோம். மக்களவைத் தேர்தலுக்கும் இந்த நிலைமை பொருந்தும்.

கேஜ்ரிவாலும் அவருடைய ஊழல் எதிர்ப்பு இயக்கமும் ஆற்றிய பங்குகுறித்து ஒரு வார்த்தைகூட கூறப்படாமல், லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. டெல்லி தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சியை அமுக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக இது தோன்றுகிறதா?

உண்மைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இழந்த தார்மீக உரிமையை இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பெற்றுவிடலாம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கலாம். தேர்தல் நாளன்றுதான் தாங்கள் மக்களைத் தவறாகக் கருதிவிட்டோம் என்பது தெரியவரும். ராம்லீலா திடலில் நடந்த ஊழல் எதிர்ப்புக் கூட்டங்களின்போதே ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றியிருந்தால், அதன் விளைவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றிபெற்ற பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் மக்கள் இல்லை.

மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்களை அண்ணா ஹசாரே பாராட்டியிருப்பதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

அண்ணா ஹசாரே பிரிந்து சென்று ஒரு ஆண்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. செய்தி ஊடகங்கள் ஏன் இச்செய்தியை 24 தவணைகளில் வெளியிடுகின்றன? அவ ருடைய பெயரைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அண்ணாவை இதில் இழுக்க வேண்டும், டெல்லி தேர்தல்குறித்து அவருடைய கருத்தைக் கேட்டுப் பிரசுரிக்க வேண்டும் என்று சில சக்திகள் முயன்றன. அது அப்படியே நடந்தது. என்னைப் பொருத்தவரை பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. ஆம், அவர் எங்களை விட்டு விலகினார். அது எங்களுக்குக் கடுமையான ஏமாற்றத்தையும், இங்குமங்கும் சில ஆதரவு- இழப்பையும் ஏற்படுத்தியது.

ஆம்ஆத்மி கட்சியின் வருகை ‘மாற்று அரசியல் கட்சி’ வந்துவிட்டதற்கான அறிகுறியா?

காங்கிரஸ் பரிவார், சங் பரிவார்களுக்கு அப்பாற்பட்டு, மூன்றாவது இடத்தை இட்டுநிரப்ப புதிய சக்திகள், புதிய சமூகக் குழுக்கள், புதிய பிரச்சினைகள் அரசியல்தளத்தில் நுழைந்ததைக் கடந்த 20 ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாலும் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட முடியாததால் மூன்றாவது அணிக்கான இடம் விரிவடைந்துகொண்டே வந்தது. அதே சமயம், மூன்றாவது அணிக்கு அரசியல்ரீதியிலான நம்பிக்கை இல்லை. எனவே அது சுருங்கி, பிளவுபட்டது. ஆம்ஆத்மி கட்சி இந்த அரசியல் வெற்றிடத்தில் நுழைந்தது. மூன்றாவது அணிக்கான இடம் காலியாக இருந்தது. ஆனால், மூன்றாவது அணியில் இடம்பெற வேண்டிய சக்தி சுருங்கியும் பிளவுபட்டும் சிதைந்திருந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் நம்முடைய பொதுவாழ்வுக்கான ஆக்கபூர்வ சக்தி அரசியல் களத்திலிருந்து வரவில்லை, அரசியலுக்கு அப்பாற்பட்ட இடத்திலி ருந்துதான் வந்திருக்கிறது. அரசின் திட்டங் களுக்காக வாழிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டவர்கள், தலித் மக்கள், விவசாயிகள், மகளிர் ஆகிய பிரிவினரிடமிருந்தும் உணவு பெறும் உரிமை, தகவல் அறியும் உரிமை, நிலம், நீர், காடு ஆகியவற்றுக்கான உரிமை கோரும் இயக்கங்கள் மூலமாகவும்தான் அவை வந்துள்ளன. இந்த ஆற்றலுக்கு அரசியல்ரீதியிலான வெளிப்படுத்தல்களோ நம்பிக்கையோ கொண்டுசெலுத்தும் அர சியல் அமைப்போ இல்லை. இத்தகைய இயக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் கோரிக் கைகளுக்கும் ஆம்ஆத்மி கட்சிதான் இயல்பான அரசியல் நம்பிக்கை என்பது என்னுடைய கருத்து.

பொதுத்தேர்தலில் இடதுசாரிகளின் பங்களிப்புடன் கூடிய மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா?

அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. மூன்றாவது அணி பரிசோதனைகள் அனைத்தும் 1996-ம் ஆண்டோடு முடிந்துவிட்டன. முதல் காரணம், ஏதாவதொன்றை மையப்புள்ளியாக வைத்து மூன்றாவது அணியை அமைக்க, வலுவான ஒரு புள்ளி இப்போது இல்லை. இரண்டாவதாக, 1990-களில் மாற்று சக்தியாகக் கருதப்பட்டவை இப்போது தாங்களே ஒரு கட்சியாகிவிட்டன. காங்கிரஸ், பாரதிய ஜனதாபோல அவையும் ஓர் அரசியல் அமைப்பு. நாம் கொண்டுவர விரும்பும் மாற்று அரசியலுக்கு அவை உற்ற சாதனங்கள் அல்ல.

சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் நரேந்திர மோடி ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று நம்புகிறீர்களா?

அவருடைய பங்கு ஓரளவுக்கு இருந்தி ருக்கலாம். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. எப்படியிருந்தாலும் வெற்றிபெற்றிருக்கும். ராஜஸ்தானில் எப்படியிருந்தாலும் காங்கிரஸ் தோற்றிருக்கும். சத்தீஸ்கரில் பா.ஜ.க-வின் வெற்றிக்கு மோடி ஓரளவுக்கு உதவியிருக்கக்கூடும். டெல்லியில் அவர் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினாரா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. பா.ஜ.க. அவருடைய செல்வாக்கை இத்தேர்தலில் பிணை வைக்கவில்லை என்பது நிச்சயம்.

மக்களவைத் தேர்தலின்போது நிச்சயம் அவர் முக்கியத்துவம் பெறுவார். சில சமயங்களில் மதச்சார்பற்ற அமைப்புகள் தங்களுக்கு ஏற்படும் பெரும் சவால்களைக் காண விரும்பாமல் கண்களை மூடிக்கொள் கின்றன. மோடி வளர்ச்சி பெறுவதற்கு யாரையாவது காரணமாகக் கூற வேண்டும் என்றால், அது மோடியல்ல - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.

இந்தச் சூழலில் ராகுல் காந்தி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர் சரியான விஷயங்கள் குறித்துதான் பேசியிருக்கிறார். ஆனால், பேசத் தேர்ந் தெடுத்ததெல்லாம் பொருத்தமில்லாத சந்தர்ப்பங்கள். மோடியை எதிர்க்கும் ஆற்றலும் திறமையும் தனக்கு இருக்கிறது என்பதை அவர் இதுவரை வெளிப்படுத்த வில்லை. அடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்று மட்டும் தேர்தல் களம் சுருங்கிவிட்டால், இந்த நாட்டுக்கே அது பெருத்த சோகமாகி விடும் என்பது என்னுடைய கருத்து.

மோடிக்கும் கேஜ்ரிவாலுக்கும் இடையிலான போட்டியாகப் பொதுத்தேர்தல் அமையும் வாய்ப்பு இருக்கிறதா?

அவ்வளவு சீக்கிரம் அதுபற்றிக் கூறிவிட முடியாது.

ஆம்ஆத்மி கட்சியில் ஏன் சேர்ந்தீர்கள்?

1980-களின் தொடக்கத்திலிருந்தே ‘சமதா சங்கதான்’, ‘சமாஜவாதி ஜன பரிஷத்’ போன்ற அமைப்புகளில் இருந்துவருகிறேன். ‘மக்கள் இயக்கங்களுக்கான தேசியக் கூட்டணி’ என்ற அமைப்பிலும் செயலாற்றிவருகிறேன். ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ போன்றவற்றுக்காகப் பாடுபட்ட இயக்கம் அது. மாற்று அரசியல் அரங்குக்காக 2004, 2009-ல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் இயக்கத்துடன் தொடர்பு உண்டு. அவ்விரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நீதிபதி ராஜீந்தர் சச்சார், குல்தீப் நய்யார், மேதா பட்கர், அண்ணா ஹசாரே ஆகியோரும் அதில் ஈடுபட்டனர். இத்தனை ஆண்டுகளாகச் செய்ய விரும்பியதைத்தான் இப்போது செய்துவருகிறேன்.

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா?

கொள்கை அளவில் உண்டு. ஆம்ஆத்மி கட்சி வேட்பாளராகப் போட்டியிடவே விரும்பு கிறேன். மற்றவர்களுக்கெல்லாம் அறிவுரை கூறிவிட்டு எனக்கென்று வரும்போது, ‘மாட்டேன்’ என்று ஒதுங்க முடியாது.

ஊழலுக்கு எதிரான இயக்கம் பிளவுபட்ட போது அண்ணா ஹசாரேவை விட்டுவிட்டு ஏன் கேஜ்ரிவாலைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

எந்த இயக்கமும் இறுதியில் அரசியலில் போய் நிற்க வேண்டும் என்று தொடக்க நாள் முதலே கூறிவந்தேன். அண்ணா - கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கமானது அரசியல் எதிர்ப்பியக்கமாகவும் மாறியது எனக்குப் பெருத்த வருத்தத்தை அளித்தது. அரசியல் எதிர்ப்பு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது, தவறானது என்று எழுதினேன். அந்த இயக்கத்தை அவர்கள் அரசியல் இயக்கமாக அறிவித்த உடனேயே, ‘இதில் சேர மாட்டேன்’என்று கூறுவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்பதால், உடனே சேர்ந்துவிட்டேன்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x