Last Updated : 01 Jan, 2014 10:51 AM

Published : 01 Jan 2014 10:51 AM
Last Updated : 01 Jan 2014 10:51 AM

எகிப்து எங்கே செல்கிறது?

பிரமாண்டமான பிரமிடுகள் முன் நின்றுகொண்டிருந்தேன். பழைய உலகின் ஏழு அதிசயங்களில் இன்று வரை அழியாமல் இருப்பது பிரமிடுகள் மட்டும்தான். ஏசு பிறப்பதற்கு 2,500 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டவை. சிந்துச் சமவெளி நாகரிகத்துக்குக் கிட்டத்தட்ட சமகாலத்தியவை. இந்த நாகரிகத்தின் குழந்தைகளாகத்தான் இன்றைய எகிப்தியர்களில் பெரும்பாலானோர் தங்களைக் காண்கிறார்கள். நாங்கள் மதத்தால் இஸ்லாமியர். ஆனால், பிரமிடுகளும் எங்கள் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

2008-ல் எகிப்து சென்றிருந்தபோது திரும்பிய இடமெல்லாம் சுற்றுலாப் பயணிகள். பிரமிடுகளைச் சுற்றிலும் நெருக்கி நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள். இப்போதோ பிரமிடுகள் வெறிச்சோடியிருந்தன. பயணிகளை விட சில்லறைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். பேரம்பேசினால் கையில் இருப்பவற்றை எல்லாம் ஒரு டாலருக்குக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று தோன்றியது. எகிப்து முழுவதும் இந்த நிலைமைதான் என்று தெற்கில் இருக்கும் அரசர்களின் பள்ளத்தாக்கைப் பார்த்துவிட்டு வந்திருந்த நண்பர் ஒருவர் சொன்னார். அவர் இருந்த நட்சத்திர ஓட்டலில் 200-க்கும் மேற்பட்ட அறைகள். அவரையும் சேர்த்து, தங்கியிருந்தவர்கள் ஏழு பேர்கள்.

அன்று மதியம் தஹிர் சதுக்கத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற கெய்ரோ அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தோம். அங்கேயும் பார்வையாளர்களைக் காணோம். அருங்காட்சியகத்துக்கு வெளியே வந்தால் சுற்றிலும் டாங்குகள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று வழிகாட்டி சொன்னார்.

எகிப்தின் மக்கள் தொகை சுமார் 8.5 கோடி. இவர்களில் சுமார் 75 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள். கெய்ரோ நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 1.5 கோடிப் பேர் வசிக்கிறார்கள். அலெக்சாண்டிரியா நகரில் 50 லட்சம் பேர். சுற்றுலாத்தலங்கள் எகிப்து முழுவதும் இருப்பதால், மக்கள் தொகையில் கணிசமானவர்கள் சுற்றுலாவைச் சார்ந்து இருக்கிறார்கள். 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் சுற்றுலாத் தொழிலில் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 70க்கும் மேற்பட்ட மற்றைய தொழில்கள் சுற்றுலாவை நம்பியிருக்கின்றன. புரட்சிக்கு முன்னால் சுற்றுலாவிலிருந்து எகிப்துக்கு வந்த வருமானம் சுமார் 1,300 கோடி டாலர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதம். 2013-ம் ஆண்டு 100 கோடி டாலர்கள் வந்தால் அதிசயம் என்கிறார்கள். எனவே, பயணிகள் வராதது மிகப் பெரிய பின்னடைவு என்றுதான் கூற வேண்டும்.

நேற்று…

1981-ம் ஆண்டிலிருந்து 2011 வரை எகிப்தை ஹோஸ்னி முபாரக் ஆண்டார். 2008-ம் ஆண்டு எகிப்தில் நான் சந்தித்த அனைவரும், எங்கள் தலைவரை இறைவன் அழைத்துக்கொள்ளும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்றுவரை உயிரோடு இருக்கிறார். ஆட்சியில் இல்லை. 2011-ம் ஆண்டில் தஹிர் சதுக்கத்தை மையமாகக் கொண்டு நடந்த மக்கள் புரட்சி, முபாரக் அரசைத் தூக்கி எறிந்தது. பின்பு நடந்த தேர்தலில், பல ஆண்டுகள் அடக்குமுறையை அனுபவித்த முஸ்லிம் சகோதரர்கள் அமைப்பின் ஆதரவு பெற்ற விடுதலை-நீதிக் கட்சி (ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டீஸ் பார்ட்டி) 35% வாக்குகளைப் பெற்றது.

சலாஃபி அமைப்புகளைச் சேர்ந்த நூர் கட்சி 255 வாக்குகளைப் பெற்றது. எனவே, மதம் சார்ந்த கட்சிகள் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்றன என்று சொல்லலாம். அதன் பிறகு, இரண்டு சுற்றுகள் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் விடுதலை-நீதிக் கட்சி ஆதரவு பெற்ற மோர்சி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார். அவர் கொண்டுவந்த அரசியல் சட்டம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பெண் விடுதலைக்கு எதிராக அது இருக்கிறது, ஷாரியா சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மக்கள் தஹிர் சதுக்கத்துக்குத் திரும்பினார்கள். ராணுவம் மோர்சியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. கைதுசெய்ததை எதிர்த்து ‘முஸ்லிம் சகோதரர்கள்’ கிளர்ந்து எழுந்தார்கள். 14 ஆகஸ்ட் 2013 அன்று நடந்த ராணுவ அடக்குமுறையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்று…

கெய்ரோ நகரில் மட்டும் இல்லாமல், ராணுவம் எல்லா இடங்களிலும் கண்ணுக்குத் தென்படுகின்றது. தெருக்களில் நமது கார்ப்பரேஷன் லாரிகள் போன்று டாங்குகள் செல்வதைப் பார்க்கலாம். அவற்றின் மீது அமர்ந்திருக்கும் ராணுவ வீரர்கள் பால் மணம் மாறாத பாலகர்களாகத் தெரிகிறார்கள். 2014-ம் ஆண்டு முதல் மாதங்களில் தேர்தல் நடக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிய அரசியல் சட்டத்தின் வரைவு வந்துவிட்டது.

அது மக்களுக்கு உரிமைகளைத் தருகிறது என்றாலும், ராணுவத்துக்குத் தேவைக்கு மேற்பட்ட அதிகாரங்களைக் கொடுத்திருப்பதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். ‘முஸ்லிம் சகோதரர்கள்’ அரசியல் சட்டத்தைக் கொண்டுவருவதற்காக நடைபெறப்போகும் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார்கள். மதம் சார்ந்த மற்றொரு கட்சியான நூர் கட்சி, புதிய சட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. எனவே, மக்களின் ஆதரவோடு புதிய அரசியல் சட்டம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

நாளை?

கெய்ரோ நகரின் மிக முக்கியமான கான் - ஈ- கலீலி பஜாரிலும் கூட்டம் இல்லை. புகழ்பெற்ற அல் ஹூசைன் மசூதியின் அழகிய முகப்பைப் பார்த்துக்கொண்டே நடைபாதையில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு, டீயோ காபியோ அருந்த முடியும். தூய அழகே வடிவு கொண்டுவந்ததுபோல இருக்கும் 10 வயதுச் சிறுமி ஒருத்தி என் மனைவியிடம் ஸ்கார்ஃப் துணிகளைக் காட்டுகிறாள். இப்படி ஒரு பேத்தி இருந்தால் உலகத்தையே அவளுக்குக் கொடுக்கலாம். இரண்டு டாலர்கள் கொடுக்கிறேன். முகமெல்லாம் மலர ‘சுக்ரான்’ என்ற சொல்லோடு சிறுமி விடைபெறுகிறாள்.

டீக்கடைக்காரர் டாலர்களை வாங்க மறுக்கிறார். ஒரு டாலர் நோட்டில் இருக்கும் ஜார்ஜ் வாஷிங்டனின் படத்தைக் காட்டி ‘ஷைத்தான்’ என்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தால் நடப்பது ஏதும் அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. மோர்சியும் மோசம். ராணுவம் அதை விட மோசம் என்கிறார். முபாரக் திரும்ப வந்தால் நல்லது. ஆனால், அது நடக்க முடியாத ஒன்று என்கிறார்.

ஆனால், எங்களை கெய்ரோ அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்ற பெண் வழிகாட்டிக்கு எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ‘‘புது அரசியல் சட்டம் பெண்களுக்கு ஆதரவானது. என்னைப் போன்ற பல பெண்கள் அதைத் தீவிரமாக வரவேற்கிறோம்’’ என்கிறார். ராணுவத்துக்கு அதிக அதிகாரம் இருக்கிறதே என்ற கேள்விக்கு எப்போது குறைவாக இருந்தது என்ற பதில் வருகிறது.

கெய்ரோ நகருக்கு வெளியே நிலைமை வேறு மாதிரி இருக்கும் என்று தோன்றுகிறது.

சூயஸ் கால்வாய்க்குக் கிழக்குப்புறம் இருக்கும் ஸைனாய் பாலைவனத்தில் நெடும் பயணம் செய்து, நடு இரவில் விடுதி ஒன்றை அடைகிறோம். அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் நிலைமையைப் பற்றிக் கேட்கிறேன்.

‘இறைவனின் ஆணைப்படி எல்லாம் நடக்கும்.’

என்னைக் கூர்ந்து கவனிக்கிறார். ‘நீங்கள் கிறிஸ்தவரா?’

‘இல்லை.’

‘புனித காதரைன் மடாலயத்தைப் பார்க்க வந்திருப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. இறைவனின் விருப்பம் அமெரிக்கா அழிய வேண்டும். இங்கிருக்கும் அமெரிக்க அடிமைகள் அழிய வேண்டும்.’

மெல்லிய புன்னகையோடு டீயைக் கோப்பைகளில் ஊற்றுகிறார்.

- பி ஏ கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x