Last Updated : 20 Aug, 2016 10:30 AM

 

Published : 20 Aug 2016 10:30 AM
Last Updated : 20 Aug 2016 10:30 AM

கோவை: படைப்பும் வாசிப்பும்

தான் பிறந்த கீரனூரிலிருந்து கோவைக்கு 60 கி.மீ. தூரமும் மிதிவண்டியிலேயே போய் இதழ்களைப் பெற்று வாசித்துவந்த அச்சிறுவனுக்கு எழுத்தின் மீது அளப்பரிய காதல். சிறுகதைகள், நாவல்கள் என ஏராளமாய் எழுதினான். அந்தச் சிறுவன் வளர்ந்த பிறகு தன்னுடைய 22-வது வயதில் செய்த சாதனை என்ன தெரியுமா? கோவை மண்வாசனை மணக்கும் முதல் நாவலான ‘நாகம்மாள்’ எழுதியது. அவர்தான் ஆர்.சண்முகசுந்தரம். 1939-ம் ஆண்டில் அவர் வெளியிட்ட இந்த நாவலை வாசித்தவர்கள், கோவை மாந்தர்களின் ஆளுமை, ஆன்மா, மொழிநுட்பம் போன்றவற்றை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

1890-களில் ‘தட்சிண யாத்திரை’ எனும் முதல் பயண நூலை தந்த பி.வி. நரசிம்மலு நாயுடு. ‘டணாயக்கன் கோட்டை’ சரித்திர நாவலை அளித்த இ. பாலகிருஷ்ணன் நாயுடு, ‘வசந்தம்’, ‘நவஇந்தியா’ இதழ்களை நடத்திய ஆர்.கே. சண்முகம் செட்டியார், பி.ஆர். ராமகிருஷ்ணன் நாயுடு போன்ற 1950-க்கும் முந்தைய இலக்கிய முன்னோடிகள் தொழிலதிபர்களும்கூட. இப்போதும் புத்தகத் திருவிழா உள்ளிட்ட இலக்கிய முயற்சிகளுக்கு கோவை தொழிலதிபர்கள் புரவலர்களாகத் தொடர்வதுகூட அந்த மரபின் நீட்சியே.

அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வானம்பாடிகளாய்ச் சிறகு விரித்தார்கள். அதன் வீச்சு சூரியகாந்தனின் ‘மானாவாரி மனிதர்கள்’, சி.ஆர்.ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நிலம்’ என மண் மணக்கும் நாவல்களாக நர்த்தனம் புரிந்தன.

தமிழின் வெகுஜன வாசிப்பில் தமிழ்வாணன், பி.டி. சாமி, சுஜாதா போன்றவர்கள் ஜொலிக்க, இந்த வரிசையில் கோவையிலிருந்து பிரதிபா ராஜகோபாலன், ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், விமலா ரமணி போன்றோர் புறப்பட்டனர். கோவை கம்பராயன், கோமகன், விழிப்பு நடராஜன், சி. ஞானபாரதி, இரணியன், டி.எம். ராஜாமணி, செந்தலை நா. கௌதமன் எனப் பலரை எழுத்தாளர்களாக்கியதும் கோவை மண்தான்.

கோவை பெண்கள் ஆளுக்கு ஒரு வார இதழை வாங்கி, மாற்றி மாற்றி வாசித்துத் தொடர்களில் மூழ்கி நின்ற வாசிப்பு யுகம் அது. புத்தகம் வாங்கக் காசில்லாமல் வாடகைக்கு எடுத்து வாசித்த காலம். ஒரு புத்தகத்தை சுற்றிப் பத்துப் பேர் உட்கார்ந்து எட்டி எட்டிப் பார்த்து வாசித்துப் பக்கங்களை புரட்டிய காலம்.

அன்றைக்கு கோவை மண்டலத்தில் கிராம, நகரத்து நூலகங்கள் எல்லாம் நிரம்பிவழிந்தன. அந்தக் காலத்தில்தான் மு. வேலாயுதம் விஜயா பதிப்பகம் ஆரம் பித்தார். புத்தகங்களை ‘சேருமிடம் சேர்த்தவர்’ அவர். தற்போதும் கோவை யில் நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன் போன்ற பெரும் இலக்கிய ஆளுமைகள் படைப்புகளையும் வழங்கிக்கொண்டிருக் கிறார்கள். இவர்களுடன் ஷாராஜ், பிர் தௌஸ் ராஜ்குமாரன், மரபின் மைந்தன் முத்தையா, கவிதாசன், பானுமதி போஸ் கோ, கவியன்பன் கே.ஆர்.பாபு, சி.ஆர். இளங் கோவன், பூபாலன், இளஞ்சேரல், பொன் இளவேனில், வேனில் கிருஷ்ணமூர்த்தி, கோவை சதாசிவம், அம்சப்பிரியா, ந. முத்து, சு. வேணுகோபால், மா. நடராஜன், கீதாபிரகாஷ், சரயூ, அகிலா, அறிவன், பேராசிரியர் மணி, பொள்ளாச்சி அபி என எழுத்தாளர்களின் வரிசை நீள்கிறது.

கடந்த ஆண்டு கொடீசியாவில் நடந்த புத்தகத் திருவிழாவில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அன்றாடம் விஜயா பதிப்பகத்துக்குச் சந்தைக் கடைபோல் மக்கள் கூட்டம் வருகிற ஊர் கோவை. அந்தக் கூட்டம் 160 புத்தக அரங்குகள் கொண்ட புத்தகத் திருவிழாவுக்கு வரவில்லை என்றால் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது பொருள். பதிப் பாளர்கள், விற்பனையாளர்கள், ஏன் எழுத் தாளர்கள்கூட இதனை உணர்ந்துகொண்டு, மக்களை நெருங்கி வர முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில், புத்தகங்களை நோக்கிச் செல்வது அறிவார்ந்த ஒரு சமூகத்தின் பெருங்கடமை அல்லவா! அந்தப் பெருங்கடமையை இந்தப் புத்தகத் திருவிழாவில் மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோம்.

- கா.சு. வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu @thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x