Last Updated : 22 Oct, 2013 03:07 PM

 

Published : 22 Oct 2013 03:07 PM
Last Updated : 22 Oct 2013 03:07 PM

புறக்கணிப்போரே புறக்கணிக்கப்படுவீர்!

நீதிமன்றப் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபடும்போது கிரிமினல் வழக்குகளில் வக்கீல்கள் இல்லாமலேயே விசாரித்து தீர்ப்பு சொல்ல முடியுமா?

ஈரோடு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் செய்த மேல்முறையீட்டை அனுமதித்து வழக்கை மறு விசாரணைக்கு அனுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். அரசுத் தரப்பு சாட்சியங்களை குற்றவியல் நடத்துநர் (Public prosecutor) முதல் விசாரணை செய்த பிறகு குறுக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது. அந்த நாளில் குற்றவாளியின் வக்கீல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் குறுக்கு விசாரணை இல்லாமலேயே முடிக்கப்பட்டது.

செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கடைப்பிடித்த நடைமுறையை ஆட்சேபித்துள்ளது, 'இது வக்கீல்கள் வைத்துக்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் குற்றவாளிகளுக்கு கொடுத்த அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்' என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1998ம் ஆண்டிலேயே ராஜ் மல்லையா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றமும் இதேபோன்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 22வது பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணையில் போதுமான வாய்ப்பளிக்கவும், தற்காத்துக்கொள்வதற்காக விரும்பிய வழக்கறிஞரை வைத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்குகளில் பலர் ஏழைகளாக இருப்பதால், விரும்பிய வழக்கறிஞரை அவர்களால் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கும், நேற்று பதிவு பெற்ற வக்கீல் வாதாடுவதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் உண்டு. விசாரணைக்கு முன்பு நீதிபதி குற்றவாளியிடம் ‘அவருக்கு வக்கீல் உண்டா?’ என்று கேட்டு, இல்லையென்றால் வக்கீல் ஒருவரை நீதிமன்றமே அமர்த்தவேண்டும். அரசு செலவில் அமர்த்தப்பட்ட வக்கீலை State Brief என்றும், அங்குள்ள வக்கீலை அமர்த்தினால் ‘நீதிமன்றத்தின் நண்பர்’(Amicus Curiae) என்றும் அழைக்க வேண்டும். வழக்கில் அவர் இலவசமாக ஆஜராக வேண்டும்.

சட்ட உதவி சேவை ஆணைக்குழு சட்டம் 1987ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. கட்டணம் செலுத்தி வக்கீல் வைத்துக்கொள்ள முடியாதோர்கூட சட்ட உதவி மையம் மூலம் அமர்த்தப்படும் வக்கீல்களைக் கொண்டு வழக்கை நடத்திக்கொள்ளலாம். சட்ட உதவி மையத்தின் பட்டியலில் உள்ள பலர் அனுபவம் குறைந்தவராக இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டோர் ஏழ்மையிலும் மிகுந்த பொருட்செலவில் தனிப்பட்ட வக்கீல்களை வைத்து வாதாடும் சூழ்நிலை இன்று உள்ளது.

குற்றவாளியின் வக்கீல் வரத் தவறினாலும் அவரின்றி விசாரணையை நடத்த மாற்று வக்கீல் ஏற்பாடு செய்த பின்னரே நீதிபதி வழக்கை முடிக்கவேண்டும் என்ற நியதியின் அடிப்படையில்தான் தற்போதைய தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால் குற்ற மேல்முறையீடுகளின் விசாரணையின்போது தக்க காரணமின்றி ஆஜராகாவிட்டால் வக்கீல்கள் இல்லாமலேயே தீர்ப்பளிக்க உயர் நீதிமன்றத்தால் முடியும்.

வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி தாராளவாதியா (அ) கண்டிப்பானவரா என்று அறிந்து வழக்கில் ஆஜராகாமல் வழக்கை தள்ளிப்போட வைத்தாலோ, பட்டியலில் இருக்கும் வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆஜர் மெமோவை வாபஸ் பெற்று சிறைக் கைதிக்கு நோட்டீஸ் அனுப்பி புதிய வக்கீல் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட வேண்டிய நிர்பந்தத்தினால் காலதாமதம் உண்டானாலோ, வழக்கு விசாரணை வேறு நீதிபதி முன்பு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இச்செயல் ‘தடங்களுக்கேற்ப குதிரைகளை மாற்றுவது’ போன்றதே.

தக்க காரணமின்றி வக்கீல்கள் ஆஜராகாத சூழ்நிலையில் கிரிமினல் வழக்கு முடியாதோருக்கு வழி வகை செய்யும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 303ல் வக்கீல் அல்லாதவர்களையும், நீதிமன்ற அனுமதியுடன் நியமித்து வழக்கை நடத்த முடியும்.

தொடர் புறக்கணிப்பால் இனி பாதிக்கப்படப்போவது வக்கீல்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x