Last Updated : 20 Jun, 2016 09:31 AM

 

Published : 20 Jun 2016 09:31 AM
Last Updated : 20 Jun 2016 09:31 AM

ராஜன் பின்விளைவு என்னவாக இருக்கும்?!

ராஜனின் புறப்பாடு இந்தியாவைப் பாதிக்கும்



இந்திய ரிசர்வ் வங்கியைச் சில மாதங்களாகச் சுற்றிக்கொண்டிருந்த விவாதங்களும் மர்மங்களும் முடிவுக்கு வந்திருக்கின்றன. ஆளுநர் ரகுராம் ராஜன் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். சிகாகோ பல்கலைக்கழகப் பணிக்கே மீண்டும் திரும்புவது எனும் முடிவை அறிவித்துவிட்டார். இதன் மூலம் மூன்றாண்டுகளுடன் முடிவடையவிருக்கிறது அவரது ஆளுகைக் காலகட்டம். அடுத்த ஆளுநருக்கான போட்டியில் அவரது பெயர் இருக்காது. பொதுத்தளத்தில் பலருக்கும் இது மன வலியைத் தரக் கூடிய முடிவு என்றாலும், பாஜகவுக்கு - முக்கியமாக சுப்பிரமணியன் சுவாமிக்கு மகிழ்ச்சி தரக் கூடிய வெற்றியாக ராஜனின் வெளியேற்றம் அமையும்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் பிறந்த ரகுராம் ராஜன், வளர்ந்தது டெல்லியில். அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் எம்பிஏ முடித்தார். இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில்தான், அமெரிக்காவின் சிகோகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார நிபுணராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் அவர் எழுதிய புத்தகம்தான் ‘முதலாளிகளிடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்றுங்கள்’. 2008-ல் மிகப் பெரிய பொருளாதாரத் தேக்கநிலை உண்டாகும் என்றும் முதன்முதலில் முன்கூட்டிக் கணித்தவர் ராஜன். குறிப்பாக, அமெரிக்கா மிகப் பெரிய அளவுக்குப் பாதிக்கப்படும் என்று கூறியவர். தொடர்ந்து, சர்வதேச அந்நியச் செலாவணி மையத்தின் (ஐஎம்எஃப்) தலைமைப் பொருளாதார நிபுணரான பின் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஆளுமையாக உருவெடுத்தார்.

சீர்திருத்தங்களுக்கான உரத்த குரல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தன் ஆட்சியின் கடைசிக் காலகட்டத்தில் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநராகக் கொண்டுவந்தது. 2013 செப்டம்பர். இந்தியப் பொருளாதாரம் தத்தளித்த சமயம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக இருந்தது. நாட்டின் பணவீக்கம் 10%-க்கு மேல் அதிகரித்திருந்தது. அந்நிய முதலீடுகள் வேகமாக வெளியேறின. மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. இப்படியான சூழலில்தான் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினார் ராஜன். அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது நிறுத்தப்பட்டதோடு, அடுத்த சில மாதங்களில் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு நாட்டுக்குள் வந்தது. பொருளாதாரச் சிதைவு தடுத்து நிறுத்தப்பட்டது. ராஜன் அந்த நெருக்கடி ஏற்படாமல் தடுத்ததை அன்று ‘ராஜன் விளைவு’ என்று தலைப்பிட்டுப் புகழாரம் சூட்டின ஊடகங்கள்.

பணவீக்கம் 10% ஆக இருந்தது, இப்போது 6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுவருவதில் ராஜன் மிகுந்த கவனம் செலுத்தினார். நிதிக் கொள்கைக் குழுவை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். பேமென்ட் வங்கிகள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள், தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியது எனப் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

கள்ளக்கூட்டு முதலாளித்துவம்

ரகுராம் ராஜன் ஒரு முதலாளித்துவவாதி என்றபோதிலும், முதலாளித்துவம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று நம்புபவர். திறந்த சந்தையை ஜனநாயகமாகப் பார்ப்பவர். முதலாளித்துவமோ முற்று முதலாக முதலாளிகள் கையிலேயே இருக்கிறது. குறிப்பாக, ‘கள்ளக்கூட்டு முதலாளித்துவம்’ (குரோனி கேப்பிடலிஸம்) அரசியலில் பெரும் ஆதிக்கம் வகிக்கிறது. இந்த இடத்தில்தான் எதிரிகளையும் தன் பதவிக்கு எதிரான அழுத்தங்களையும் சம்பாதித்துக்கொள்ளத் தொடங்கினார் ராஜன். பெரிய அளவில் அவருக்கு எதிராக வேலைசெய்தது வங்கிகளின் வாராக் கடன் தொகையை அவர் கையாண்ட விதம்.

பெருமுதலாளிகள் வங்கிகளிடமிடருந்து கடனாக வாங்கும் பெரும் தொகைகளைத் திருப்பிச் செலுத்துவதில் எப்போதுமே இழுத்தடிப்பது உண்டு. இந்திய வங்கிகளின் வாராக் கடன்களில் பெரும் பங்கு இன்றைக்குப் பெருமுதலாளிகள் நடத்தும் நிறுவனங்களுடையவையே. இதை ஒழுங்கமைக்கும் நோக்கில் வங்கிகள் தங்களது நிதிநிலை அறிக்கையை 2017-க்குள் சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் ராஜன். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியிருந்தும் செலுத்தாத நிறுவனங்களைப் பொதுச் சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கினார். இதன் விளைவுகளையே அரசியல்ரீதியாக அவர் எதிர்கொண்டார்.

ரகுராம் ராஜன் வழக்கமான ஆர்பிஐ கவர்னராக மட்டும் செயல்பட்டிருந்தால் அவர் நீடிக்காதது பலருக்கும் வருத்தத்தைக் கொடுத்திருக்காது. அவர் மத்திய வங்கியின் நலனையோ பொருளாதாரத்தையோ மட்டும் சிந்திக்காமல், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்தும் சிந்தித்தார். உண்மையான வளர்ச்சிக்கான வார்த்தைகளை வெளியிட்டார். தாத்ரி சம்பவத்தின்போது சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் பற்றியும் ‘‘இந்தியா மிகப் பெரிய அளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது’’ என்று பாஜக நாடு முழுவதும் முழங்க ஆரம்பித்தபோது, “பார்வையற்றோர் உலகத்தில் ஒற்றைக் கண் உடையவர் ராஜா” என்று இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும் ராஜன் பேசியது அவருடைய அணுகுமுறைக்கு ஓர் உதாரணம்.

ஆரம்பத்திலிருந்தே அரசுக்கும் ராஜனுக்கும் இடையிலான உறவு, உரசல்களோடு இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் சுவாமி மூலம் மறைமுகமான தாக்குதல்களை ராஜன் மீது தொடுத்தது பாஜக. ராஜன் மனதளவில் இந்தியராகச் செயல்படவில்லை. அவரை அமெரிக்காவுக்கே அனுப்ப வேண்டும் என்று சரமாரியாக வெறுப்புக் குற்றச்சாட்டுகளை ராஜன் மீது சுவாமி வைக்கத்தொடங்கினார். ராஜனை நீக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தொடர்ந்து மோடிக்குக் கடிதம் எழுதினார். சுவாமி மட்டுமல்ல; பாஜக அமைச்சர்களான ஜேட்லி, நிர்மலா சீதாராமன், ஜெயந்த் சின்ஹா ஆகியோரும் ராஜன் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதுமட்டுமல்லாது, “வட்டி விகிதத்தைக் குறைக்கத் தவறிவிட்டார்; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முடிவுகளை எடுக்கவில்லை; சிறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன” என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். எல்லாவற்றுக்கும் மேல் 10 சிறிய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னணியில், பண மோசடியில் ஈடுபட்டார் என்றும் பேசினார். எவ்வளவு கீழே இறங்கியும் அடிக்கத் தயங்காத பாணியைப் பின்பற்றும் பாஜக - சுவாமி பாணி விமர்சனங்களுக்குப் பெரிய எதிர்வினைகள் ஏதும் ஆற்றாமல் கடந்துகொண்டிருந்தார் ராஜன். இப்போது ராஜன் விலகல் கடிதம் வெளியாகியிருக்கும் சூழலில், “ரகுராம் ராஜன் ஒரு அரசாங்க அதிகாரி. அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் மக்கள் விருப்பத்துக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை” என்று சொல்லியிருக்கிறார் சுவாமி.

இழப்பு யாருக்கு?

உண்மையில், ராஜன் பதவியை விட்டுப்போவது பாஜகவுக்குத்தான் மிகப் பெரிய இழப்பாக இருக்கப்போகிறது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால் உலகப் பொருளாதாரம் மேலும் சரிவைச் சந்திக்கும். உலகச் சந்தை வலையின் ஒரு அங்கமாகிவிட்ட இந்தியா ஏற்கெனவே பொருளாதாரரீதியாகத் தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த அரசு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளும் நிறுவியிருக்கும் மாயப் பிம்பங்களும் மக்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டுமானால், ராஜன் போன்ற ஆளுமைகளின் திறன் பாஜகவுக்கு மிக அத்தியாவசியமானது. மேலும், அவர் தொடங்கிய பல சீர்திருத்தங்கள் பாதியிலேயே நிற்கின்றன; அவற்றைத் தொடர அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆளுமை தேவை. ராஜனை வெளியே அனுப்பியதன் விளைவுகளை விரைவில் பாஜக எதிர்கொள்ளும். கூடவே, இந்தியாவும் எதிர்கொள்ளும் என்பதுதான் துயரம்!

பெ.தேவராஜ்

தொடர்புக்கு: devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x