Last Updated : 02 Aug, 2016 09:03 AM

 

Published : 02 Aug 2016 09:03 AM
Last Updated : 02 Aug 2016 09:03 AM

கூர்நோக்கு இல்லமும் சீர்நோக்குப் பார்வையும்

அன்பும் மன்னிப்பும் புறக்கணிக்கப்பட்ட மனதை சட்டங்கள் எப்படிச் சீர்செய்யும்?



குற்றவாளி பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா என்ற கேள்வி உளவியலில் பெரும் விவாதப்பொருள். இரண்டும் என்பதுதான் உண்மை. ஆனால், சமூகத்தின் பங்கு பற்றி அதிகம் பேசுகிறோம். காரணம், குற்றத்தின் காரணம் மற்றும் பாதிப்பு இரண்டும் சமூகத்தைச் சேருகிறது. இருந்தும்கூட சட்டரீதியாகப் பார்க்கும் அளவுக்குக் குற்றங்களைச் சமூகரீதியாகப் பார்க்கத் தவறுகிறோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

தண்டனையை அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என்ற பார்வையை மீறி இங்கு குற்றங்கள் புரிந்து கொள்ளப் படுவதில்லை. குற்றம் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்கூட இங்கு பாரபட்சமாகத்தான் உள்ளன. சென்ற மாதத்தில், சென்னையின் கூர்நோக்கு இல்லத்தில் நடந்த தப்பித்தல், தற்கொலை முயற்சி, பிடிபடல் சம்பவங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் முழுப் பக்கச் செய்தியாக வந்தது. பிளேடால் அறுத்துக்கொண்டு மிரட்டும் பிள்ளைகளையும், பதைக்கும் பெற்றோர்களின் அவலத்தையும் படமாகப் போட்டது என்னை செய்தியைப் படிக்க விடாமல் அலைக்கழித்தது. அரை குறையாகத்தான் செய்தியைப் படித்தேன். பின் மனதில் மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ படம் ஓடியது. கல்லூரிக் காலத்தில் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கூர்நோக்கு இல்லம் சென்ற நினைவுகள் வந்துபோயின. மறுநாளும் அந்தப் புகைப்படங்கள் வேலைக்கு நடுவில் என்னை அலைக்கழித்தன. அதையெல்லாம்விட என்னைப் பாதித்தது, பேசிய நண்பர்கள் யாரையும் இந்தச் செய்திகள் பெரிதாகப் பாதிக்காததுதான்! நகரம் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பெரும் சமூக நிகழ்வு என்றால், ‘கபாலி’ ரிலீஸ்தான்.

பதினைந்து வயதில் குற்றப் பின்னணி

குற்றம் நடக்கையில் தடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பேசும் நாம், குற்றவியல் பற்றிய அடிப்படை அக்கறையற்ற சமூகமாக மாறிவருகிறோமோ என்ற சந்தேகம் வந்தது. மணிரத்னம் பட நாயகன்போல பால்கனியிலிருந்து பார்த்து, ‘ஏன் இப்படிச் செய்றாங்க?’ என்று கேட்டுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப் போய்விடுகிறோமோ?

பதினைந்து வயதுகளில் குற்றப் பின்னணி என்பது எவ்வளவு கொடுமையானது? அவன் குற்றவாளியா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், குற்றங்கள் நிகழும் சூழலில் வளர்ப்பு, குற்றம் செய்ய வாய்ப்புகள், காவல் துறையில் பிடிபட்டு குற்றவாளியாக நடத்தப்படும் வாய்ப்புகள் போன்றவை, இந்தச் சிறுவர்களை விளிம்பு நிலைக்குச் சுலபத்தில் தள்ளிவிடுகிறது.

இன்று குற்றப் பின்னணியற்ற, நல்ல விழுமியங்கள் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளிடமே நடத்தைக் கோளாறுகள் ஏராளமாக உள்ளதை ஒரு உளவியல் சிகிச்சையாளனாகப் பார்க்கிறேன். ஆனால், அனேகமாக இவை வெளியில்கூட வருவதில்லை. காரணம், வசதி வாய்ப்புகளும் குடும்பத்தின் முழு ஆதரவும், பிற சமூக ஊக்கிகளும் இவர்களை எப்படியோ ஆளாக்கிவிடுகின்றன. பலர் எனக்குத் தெரிந்து, நல்ல படிப்பும், வேலையும், தொழிலும் பெற்று கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பொய்யான கற்பிதங்கள்

ஆனால், நலிந்த பிரிவிலிருந்து வரும் பிள்ளைகளின் நிலை அப்படியல்ல. அவர்களைக் குற்றவாளியாகப் பார்க்க சமூகம் தயாராக உள்ளது. பழைய பேப்பர் வாங்க வரும் பையனைச் சந்தேகமாகப் பார்ப்போம். கூரியர் பையனைச் சுமாராக நடத்துவோம். ஆங்கிலம் பேசும் வெள்ளைச் சட்டை அணிந்த விற்பனை சிப்பந்தியை கெளரவமாகப் பதில் சொல்லி அனுப்புவோம். நம் கற்பிதங்கள் அப்படி. வெள்ளைத் தோல், ஆங்கிலம், நல்ல உடைகள், நாகரிகப் பெயர்கள் போன்றவை நம்மை அவர்கள் மேல் கெளரவம் கொள்ள வைக்கின்றன.

கறுப்பு நிறம், கசங்கிய உடை, சிறுபான்மை அடையாளம், கொச்சை மொழி என்றால், அவர்களை அப்புறப்படுத்தத் தயாராகிவிடுகிறோம். அவர்கள் பொருளாதார நிலையிலோ, கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முன்னேறினால்கூட, நம் ஏற்புத்தன்மை பெரிதாக மாறுவதில்லை.

ஒருமுறை குப்பம் ஒன்றில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியபோது, ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கு மேற்பட்ட வேலை செய்கையில், ஆண்களில் சரி பாதிப் பேர் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது தெரியவந்தது. வேலை இல்லாத மனம் அதற்கான ஒரு வேலையைத் தேடிக்கொள்கிறது. குற்றம்கூட ஒரு தொழில்தான்.

வலைப்பின்னலின் சதி

முறையான கல்வியும், நியாயமான வேலையும் கிடைத்தால் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். எல்லா குற்றங்களிலும் சிறார்களை ஈடுபடுத்துவது தற்செயலான நிகழ்வு அல்ல; ஒரு வலைப்பின்னலாக விரியும் வர்த்தகத் திட்டத்தின் ஒரு செயல் திட்டம்.

போதை மருந்து, பாலியல் தொழில், திருட்டு, பிச்சை என எல்லா தொழில்களிலும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். காவல் துறையால் ஓரளவே தடுக்க முடியும். புனரமைப்பு, கல்வி, திறன் வளர்ப்பு, உளவியல் ஆலோசனை, வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது.

ஒரு நிறுவன அமைப்பு பெரும்பாலும் மனிதர்களை ஒடுக்கி வைக்கும், எத்தனை மேன்மையான குறிக்கோள்களைக் கொண்டிருந்தாலும். ஆலயம் சார்ந்த அமைப்புகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக, பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகள்போல இயங்குகின்றன. மருத்துவமனைகளையும் குறிப்பாக, மன நல மருத்துவமனைகளைச் சொல்லலாம். அதனால், கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகளிலும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

காவல் துறையும் பரிதாபத்துக்குரியதுதான். புதரில் சிறுவர்களைத் தேடும் காவல் துறைப் பணியாளர்கள் பற்றிப் படிக்கையில் ‘விசாரணை’ படம் நினைவுக்கு வருகிறது. ‘விசாரணை’ அதிகம் விமர்சிக்கப்படாமல் போன படைப்பு என்பது என் கருத்து. அதை செளகரியமாக ஒதுக்கிவைத்துவிட்டது தமிழ்ச் சமூகம்.

கவனிக்கத்தக்க வழக்கம்

சில மாதங்களில் கவுதம் மேனனின் இன்னொரு போலீஸ் படம் வரலாம். அதில் ஒட்ட முடி வெட்டி, வெள்ளைச் சட்டை போட்ட நாயகன், கறுத்த… நீள்முடி வில்லனை ஒரு புல்லட்டில் விசாரணை இல்லாமல் சுட்டுத்தள்ளுவார். சமூகத்தைத் துப்புரவாகத் துலக்கிச் சீர்திருத்தும் உடல் மொழியுடன்.

தமிழ் ரசிகர்கள் நாம் அதை வெற்றிப் படமாக்குவோம். அடுத்த முறை குற்றச் செய்தி படித்தால், ‘போலீஸ் என்ன பண்ணுது?’ என்று கேள்வி கேட்டுவிட்டு நம் கடமையை முடித்துக்கொள்வோம். நெஞ்சைக் கீறி தற்கொலைக்கு மிரட்டுவது நம் பிள்ளைகள் என்றால், இப்படி விலகிச் செல்வோமா?

அன்பும், மன்னிப்பும், நன்மதிப்பும், அங்கீகாரமும், ஆதரவும், ஊக்குவிப்பும் பெருகப் பெருக நடத்தைகள் மாறுவதை நான் பலமுறை குழு சிகிச்சையில் கண்டிருக்கிறேன். உபுண்டு என்ற ஆப்பிரிக்கப் பழங்குடியினர், குற்றத்தைக் கையாளும் வழக்கம் கவனிக்கத் தக்கது. தவறிழைத்த மனிதனை நடுவில் நிறுத்தி, அவன் நற்குணங்களைத் தொடர்ந்து கூறுவார்கள். அவன் செய்த நல்ல செயல்களைப் பட்டியல் போடுவார்கள். இரண்டு மூன்று நாட்கள்கூட இந்தச் சடங்கு தொடரும். சம்பந்தப்பட்டவர் மனம் இளகி, தன் தவறுக்கு வருந்தி நல்வழிக்குத் திரும்புவார்.

அன்பும், மன்னிப்பும் புறக்கணிக்கப்பட்ட மனதை சட்டங்கள் எப்படிச் சீர்செய்ய முடியும்?

- ஆர்.கார்த்திகேயன், உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர். இந்தியப் பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் தேசியத் தலைவராகச் சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x