Last Updated : 25 Jan, 2017 10:29 AM

 

Published : 25 Jan 2017 10:29 AM
Last Updated : 25 Jan 2017 10:29 AM

1965 - 2017: மாறியதும் மாறாததும்!

இன்று மொழிப்போர் தியாகிகள் தினம்

ஜனவரி 25 - இது மொழிப் போர் தியாகிகள் நாள். 1965-ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், தமது இன்னுயிரைத் தற்கொடையாகத் தந்தவர்களுக்கும் காவல் துறையாலும் இந்தியத் துணை ராணுவத்தாலும் கொல்லப்பட்டவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்திவரும் நாள் இது. நம் மொழியுரிமைப் போராளிகளின் நினைவில் நாம் ஆழ்கின்ற இந்தத் தருணத்தில் - இந்த நாளில் - நாம் ஒரு வித்தியாசத்தை உணரவே செய்கிறோம். ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியவில்லை. 1965-க்குப் பிறகு, மற்றுமொரு தன்னெழுச்சியான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாம் இப்போது மீண்டும் பார்த்திருக்கிறோம்.

1950-ல் ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி, ஆனால் 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படலாம்’ என்கிற தலைமேல் கத்தியோடுதான் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலத்தை அறவே நீக்கிவிட்டு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகும் அந்தக் கெடுவின் காலம் 1965. அதற்கு எதிராக வெடித்தெழுந்ததுதான் அந்த மொழிப் போர். தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முதல் மூத்த தமிழறிஞர்கள் வரை அதில் பங்கெடுத்தார்கள். கொடூரமான அடக்குமுறையை ஏவிப்பார்த்த இந்திய அரசு, இறுதியில் தோல்வி அடைந்தது. ‘இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே ஆட்சிமொழி’ என்கிற அதன் கனவு நனவாகவில்லை. ஆனால், அந்தப் போராட்டத்தை ‘இந்திக்கு எதிரானது, ஆங்கிலத்துக்கு ஆதரவானது’ என்று மட்டுமே சொல்ல முடியுமா?

அடிப்படையில், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம் தமிழுக்கானது. தமிழைக் காக்கவே அத்தனை இளைஞர்கள் நஞ்சுண்டும் தீக்குளித்தும் ஈகம் செய்தார்கள். பொள்ளாச்சிப் படுகொலைகளை எதிர்கொண்டார்கள். அது தமிழ் மொழி, இனம், நாட்டுக்கானது. தமிழர்களின் மொழி இறையாண்மைக்கானது.

ஓர் ஒற்றுமை

இன்றைய போராட்டமும் அப்படித்தான். அதன் உடனடி மற்றும் அடையாள முகம்தான் ஜல்லிக்கட்டு. ஆனால், இத்தனை லட்சம் பேர் தமிழகமெங்கும் திரண்டது வெறும் ஜல்லிக் கட்டுக்காக அல்ல. காங்கிரஸ், பாஜக அரசுகளின் வஞ்சகத்துக்கும் திமுக, அதிமுக அரசுகளின் கையாலாகாத்தனத்துக்கும் எதிராகவே வெடித்தது. ஈழ இனப் படுகொலை மற்றும் அதற்குப் பிந்தைய சூழல், மூவர் தூக்குத் தண்டனை, மீத்தேன், கெயில், டாஸ்மாக், இந்தித் திணிப்பு, வெள்ள நிவாரணத்தில் அரசின் முடக்கம், முல்லைப்பெரியாறு, பாலாறு, மீண்டும் காவிரி, இப்போது விவசாயிகள் தற்கொலை என இடை விடாமல் பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தின் மீது நிரந்தரப் புயலாக வீசிக்கொண்டிருந்தன. அதற்கு எதிரான தமிழக மக்களின் மனங்கள் ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தீப்பற்றின.

1965, 2017 ஆகிய இந்தப் போராட்டங்களுமே ஒற்றைக் கோரிக்கையை மையமாகக் கொண்டு பரவினாலும், அவை வேறு ஒரு பெரிய ஏக்கத்தின் வெளிப்பாடுகளே. இரண்டுமே டெல்லி தர்பாரின் எதேச்சாதிகாரப் போக்குகளுக்கு எதிரானவை. தமிழகத்தின் உரிமைக் குரல்கள். இவ்விரு போராட் டங்களிலும் டெல்லி ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினார்கள். பின்பு அலறியடித்துக்கொண்டு இறங்கிவந்தார்கள். தற்காலிகமாகவேனும் கோரிக் கைகளுக்குச் செவிசாய்த்தார்கள்.

ஒரு வேற்றுமை

1937-38-ல் தொடங்கி பல ஆண்டுகளாக நடந்துவந்த மொழியுரிமைப் போராட்டத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் 1965 போராட்டம். தமிழறிஞர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத் தவரால் விரிவுபடுத்தப்பட்ட இப்போராட்டங்கள், அரசியல் நுண்ணறிவும் தியாக உள்ளமும் தீர்க்கமான இலக்கும் கொண்டவர்களால் வழி நடத்தப்பட்டவை. முன்பே மக்களின் செல்வாக்கு பெற்றிருந்து, அமைப்புகளின் வீச்சில் அவற்றைக் காண முடிந்தது.

ஆனால், இன்று ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தில் களம் கண்டவர்களோ முற்றிலும் வித்தியாசமானவர்கள். சில சிறிய அமைப்புகள் போட்டிருந்த விதைகள்தான் இந்தப் போராட்டத்தினூடாக வளர்ந்தன என்பது உண்மை தான் என்றாலும், விஸ்வரூபம் எடுத்த இந்தப் போராட்டத்தின் தலைவர்கள் பற்றி யாருக்குத் தெரியும்? யாரை நம்பி மக்கள் திரண்டார்கள்? இந்த முறை மக்கள் தலைவர்களின் அறைகூவலை ஏற்றுத் திரளவில்லை. காலத்தின் அறைகூவலை ஏற்றுத் திரண்டார்கள்.

1965 மொழிப் போராளிகள், தீவிரமான அரசியல் போராளிகளாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டவர்கள், 2017 தைப் புரட்சியின் செயல் வீரர்கள் ‘நாங்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியலை முன்வைக்கிறோம்’ என்பவர்கள். இது வரை நாம் அறிந்த அரசியல் செயல்பாட்டு அமைப்பு முறைகளின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் (அரசியல் மீது அல்ல).

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் எஸ்டாபிளிஷ்டு அரசியல் செயல்பாட்டாளர்களின் ஆதரவு பெரிதும் கிடைத்திருக்கவில்லை. ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்தில் இந்துத் துவமும் மோடியும் மேட்டிமை சக்திகளும் கடுமையாக எதிர்க்கப்பட்டன. ஆனால், இந்தப் போராட்டத்தைப் பெரும்பாலான பெரியாரிஸ்ட்டுகள் தொடக்கம் முதலே ஏற்க மறுத்துவந்தார்கள். போராட்டக் களத்தில் பீட்டா போன்ற சர்வதேச என்ஜிஓக்களும் பெப்சி, கோக் நிறுவனங்களும் விளாசப்பட்டன.

ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்கள். நியாயமான ஒரே அதிருப்திக் குரல் தலித்துகளுடையதுதான். ஆனால், அவர்கள் ஜல்லிக்கட்டை மட்டுமே பார்த்தார்கள். சமீப காலத்தில் சாதிய வெறியில் சிக்கிக் கிடந்த கிராமத்து இளைஞர்களை இந்தப் போராட்டம் விடுவிக்கத் தொடங்கியிருக்கிறது. முன்பே காலூன்றிய அரசியல் வியூகத்தின் படிப்படியான வெளிப்பாடு 1965. ஆனால், இதுவரை தெளிவாகப் புலப்படாத ஒரு அரசியல் வியூகத்தின் திடீர் வெடிப்பு 2017.

ஒரு தொடர்ச்சி

தமிழகத்தில் அரசியல் ஆட்டத்தை எப்போதுமே இளைய சமூகம்தான் மாற்றுகிறது என்கிற வகையில், அதற்கு தைப் புரட்சியும் விதிவிலக்கல்ல. இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய வெற்றியே சாதி, மத, வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு, தமிழர்களைத் தமிழர்களாக இணைத்ததுதான். “அறத்தால் அடிப்போம்” என்று அடங்காநல்லூரில் முழங்கினார்கள். என்ன ஒரு வார்த்தை!

ஜனவரி 20-ம் தேதி இரவு, மெரினா கடற் கரையில் புயல் மையம் கொண்டிருந்த இடத்தில், தரையில் இறங்கிய செல்போன் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் ஒரு சிலையைப் பார்த்தேன். அது பாரதிதாசனின் சிலை. அந்தச் சிலைக்கு உயிர்வந்து பாடியதை நான் கேட்டேன்: “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!’’

- ஆழி. செந்தில்நாதன்,
மொழி உரிமைக்கும் நிகர்மைக்குமான பரப்பியக்கத்தின் அனைத்திந்தியச் செயலர்.
தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x