Last Updated : 22 Jul, 2016 08:56 AM

 

Published : 22 Jul 2016 08:56 AM
Last Updated : 22 Jul 2016 08:56 AM

மாநிலங்களின் குரல்களுக்கு மதிப்பளியுங்கள்

கூட்டாட்சித் தத்துவம் உண்மை என்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும்

பத்து வருடங்களுக்குப் பிறகு, அதாவது 2006-க்குப் பிறகு மாநிலங்களிடை மன்றத்தைக் கூட்டியிருக்கிறார் பிரதமர். நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த காலத்துக்கேற்ப, நிர்வாக, நிதி, சட்டமியற்றல் ஆகிய துறைகளில் மத்திய அரசுக்கு மாநிலங்களைவிட அதிக அதிகாரங்களை அளித்தது அரசியல் சட்டம். ஆனால், அதிகாரங்களைக் குவிப்பதையே மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

சட்டம் - ஒழுங்கைக் கட்டிக்காத்து பொது அமைதியைப் பராமரிப்பது, பொது சுகாதாரத்துக்குச் செலவிடுவது, வேளாண் வளர்ச்சிக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது, தரமுள்ள கல்வியை அனைவருக்கும் அளிப்பது போன்ற மக்களுக்கான மிக முக்கியமான கடமைகள் அனைத்தும் மாநில அரசின் கீழ்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள்தான் மக்களுக்கு நெருக்கமாக உள்ளன. ஆனால், மாநிலப் பட்டியலில் உள்ளவற்றைக்கூட பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றுவதும், மாநிலங்களின் வரி வசூல் ஆதாரங்களை மத்திய அரசே எடுத்துக்கொள்வதும், மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தைக் குறுக்கி மத்திய அரசே தன் பொறுப்பில் ஏற்பதும் நாளுக்கு நாள் விரிவடைகிறதே தவிர, குறையவில்லை.

புஞ்சி ஆணையப் பரிந்துரைகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ‘கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம்’ தொடர்பாகத் தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரமும் நிதி ஆதாரமும் தரப்படாவிட்டால், ‘கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம்’என்பது வெறும் சொல் அலங்காரமாகத்தான் இருக்கும். மாநிலங்களிடை மன்றக் கூட்டம் என்பது வெறும் சம்பிரதாயத்துக்காகக் கூட்டப்படாமல், பரஸ்பரம் மாநிலங்களுக்கு உதவக்கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் விவாதித்து இறுதிசெய்வதற்காக நடத்தப்பட வேண்டும்.

மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புஞ்சி ஆணையம் அளித்த அறிக்கையை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். புஞ்சி அறிக்கை தொடர்பாக மாநிலங்கள் தெரிவிக்கும் கருத்துகளை மத்திய அரசு அக்கறையோடு கேட்டுச் செயல்படுத்த வேண்டும்.

புஞ்சி ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளில் செயல்படுத்த வேண்டியவை; நிராகரிக்கப்பட வேண்டியவை என்று இரு அம்சங்களும் உள்ளன. இந்த விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்; இதுபற்றி மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்.

மாநிலங்கள் எதிர்பார்ப்பது என்ன?

பொது அதிகாரப் பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டமியற்றும்போது கட்டுப்பாடு தேவை. மாநில அதிகாரப் பட்டியலில் இருப்பவற்றைப் பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு முன்னால் மாநிலங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். அப்படி மாற்றுவதிலும் சுய கட்டுப்பாடு தேவை.

மாநிலங்களின் அதிகாரப் பட்டியலிலிருந்து பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இனங்கள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கல்வியை முன்பிருந்ததைப் போல மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 42-வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் வனங்கள், வன உயிரினத் துறைகள் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அதையொட்டி சுற்றுச்சூழல், சூழலியல், பருவநிலை மாறுதல் என்ற துறைகளும் பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் நிறைவேற்றும் மசோதாவை ஏற்பது அல்லது நிராகரிப்பது என்ற முடிவைக் குடியரசுத் தலைவர் எடுக்க அதிகபட்சம் 6 மாதங்கள் மட்டுமே ஆக வேண்டும்.

மத்திய அரசு வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் போன்றவற்றில் தொடர்புள்ள மாநில அரசிடமும் முன்னதாக ஆலோசனை பெறப்பட வேண்டும். மாநிலங்களிடம் ஆலோசனை கலக்காமல் இருதரப்பு ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் செய்துகொண்டுவிட்டு அவற்றை முறையாக அமல்படுத்தாததால் ஏற்படும் நிதி இழப்பை மட்டும் மாநிலங்கள் சுமக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

மாநில ஆளுநர்களின் பதவிக்காலம், அவர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான புதிய முறை ஆகியவற்றை நன்கு ஆலோசித்த பிறகே இறுதி செய்ய வேண்டும். மாநில அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிப்பதற்கு அந்த மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற இப்போதைய நிலை தொடர வேண்டும்.

உள்நாட்டுக் கலவரம், வெளிநாட்டுத் தாக்குதல் போன்றவற்றிலிருந்து மாநிலங்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டிய கடமை குறித்து புஞ்சி ஆணையம் முக்கியமான பரிந்துரைகளை அளித்துள்ளது. இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அரசு இப்பரிந்துரைகளைப் பரிசீலிக்க வேண்டும். மாநிலங்களைக் கலைப்பதற்கான அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது தொடர்பாக எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் சில பரிந்துரைகளை அளித்தது. அப்பரிந்துரைகளைச் சேர்த்து உரிய திருத்தங்களைச் செய்து, ஆளுநர்கள் மூலம் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.

சமமான பிரதிநிதித்துவம்

மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற புஞ்சி பரிந்துரையை ஏற்க முடியாது. மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர், தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நீதித் துறை நிர்வாகத்துக்கான செலவை மாநில அரசுகளுடன் மத்திய அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும். மத்தியிலும் மாநிலங்களிலும் நீதித் துறைப் பேரவைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை தேவையற்றது. நீதித் துறைக்கான வரவு - செலவுகளைத் தயாரிக்கும் பொறுப்பு உரிய அரசுகளிடம் மட்டும்தான் தொடர வேண்டும்.

புதிய யுகத்தில் மத்திய - மாநில உறவு

இன்றைக்கு மத்திய - மாநில அரசுகளின் நிதி உறவுகளில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு முழுமையாக ஏற்றுள்ளது. அதே வேளையில், மத்திய திட்டக் குழு என்ற அமைப்பே கலைக்கப்பட்டுவிட்டது. திட்டச் செலவு, திட்டமல்லாச் செலவு என்ற பாகுபாடும் நீக்கப்பட்டுவிட்டது. இப்படியான சூழலில், மத்திய சட்டங்களை அமலாக்குவதற்கு ஆகும் செலவுக்கான தொகை மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும். சிறப்பு வரி, கூடுதல் வரி போன்றவை முற்றாகக் கைவிடப்பட வேண்டும்.

பொதுச் சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூலிப்பில் அந்தந்த மாநிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலத்துக்கே தந்துவிட வேண்டும். மாநிலங்களிடை வணிகப் பரிமாற்றத்தின் மீதான வரி வருவாயை மத்திய அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய பொதுச் சரக்கு - சேவை வரி சட்டத்துக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னால், மாநிலங்கள் இழக்கக்கூடிய வருவாயை 100% அளவுக்கு மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும்.

பெட்ரோலியப் பண்டங்களைப் பொதுச் சரக்கு, சேவை வரிக்குரிய பட்டியலிலிருந்து விலக்க வேண்டும். அவற்றின் மீதும் புகையிலை - புகையிலை சார்ந்த பொருட்கள் மீதும் மாநில அரசுகள் வரி விதித்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

உள்ளாட்சியில் இரட்டை அடுக்கு

உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தில் இப்போதுள்ள மூன்று அடுக்கு முறைக்குப் பதிலாக இரட்டை அடுக்கு முறை போதும் எனும் பரிந்துரையை ஏற்க வேண்டும். வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் உள்ளவற்றில் எது தேவை என்பதை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்ய விட்டுவிட வேண்டும்.

வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டாலோ, சட்டம் - ஒழுங்கில் சீர்குலைவு ஏற்பட்டாலோ மத்திய அரசு தானாகவே படைகளை அனுப்ப வேண்டும்; மத்திய ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் எனும் பரிந்துரைகள் ஆபத்தானவை. இது இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரான பரிந்துரை.

மாநிலக் காவல் துறைகளை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் வேண்டும் என்ற பரிந்துரை வரவேற்கத்தக்கது. அதற்காகும் செலவில் கணிசமான பங்கை மத்திய அரசு ஏற்க வேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பாக நடுவர் மன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் அமலாக்கப்பட காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலும் பிரச்சினைகள் ஏற்படும்போது, அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான அமைப்பு இல்லை. மாநிலங்களிடை மன்றத்தை அத்தகைய அமைப்பாக மாற்ற வேண்டும்!

- தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தையொட்டி தமிழகத்தின் சார்பில் கொடுத்தனுப்பிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுருக்கம்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x