Published : 01 Aug 2016 09:28 AM
Last Updated : 01 Aug 2016 09:28 AM

ஒலிம்பிக் போட்டிகளும் ஒழுங்கின்மையும்

பிரேசில் நாளிதழில் வெளியான தலையங்கம்



பிரேசிலில் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளர் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், சரியாகச் சம்பளம் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போலீஸார், ‘நரகத்துக்கு நல்வரவு’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். இவற்றுக்கிடையே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ரியோ டி ஜெனிரோ நகருக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரேசில் ஒலிம்பிக்கின் பாதிப்புகள் கணக்கற்றவை. கோல்ஃப் மைதானத்துக்காக, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அழிக்கப்பட்டது. ரியோ அருகே உள்ள பர்ரா டா டிஜுகா பகுதியில் காலங்காலமாக வசித்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ‘குற்றங்கள் மலிந்த குடிசைப் பகுதிகளில், குற்றங்களைக் குறைப்பதற்காக’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ‘யூபிபி’ திட்டமும் படுதோல்வி. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள்.

ஒலிம்பிக் கிராமங்களில் எழுப்பப்பட்டிருக்கும் பல மாடிக் கட்டிடங்கள் பார்க்க சொகுசாக இருந் தாலும், யாரும் வசிக்க முடியாது. காரணம், அக்கட்டிடங் களின் கழிப்பறைகள் அனைத்தும் அடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒலிம்பிக்கின் பலன்தான் என்ன? பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்கான வழிகள் சில மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. வி.எல்.டி. (வெஹிக்கிள்ஸ் ஆன் லைட் ட்ராக்ஸ்) வகை ரயில்கள் உள்ளிட்ட சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங் களுக்கு முன்பே முழுமையான பயன்பாட்டுக்கு வந்தி ருக்க வேண்டிய ‘மெட்ரோ லைன் -4’ ரயில்கள் இனிமேல்தான் செயல்படப்போகின்றன. ஒலிம்பிக்குக்காக வந்திருப்பவர்களை ‘சோதனை எலி’களாக வைத்துத்தான் இந்த ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன. பேருந்து வழித்தடங்களில் இருக்கும் குழப்படிகளால், எங்கு செல்ல… என்ன பேருந்து பிடிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் குழம்பப்போகிறார்கள்.

ரியோ டி ஜெனிரோ மாகாணத்தின் கடன் சுமை காரணமாக பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அரசால் போதுமான செலவு செய்ய முடியவில்லை. மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்கள் அவசரத் தேவைகளுக்கு பொது மருத்துவமனைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

மாகாண போலீஸாருக்கு இரண்டு வாரங்கள் தாமதமாகத்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. பிரிண்டர்களில் பயன்படுத்தப்படும் தாள்களை வாங்கக்கூட அவர்களிடம் காசில்லை. இன்னொரு பக்கம் விளையாட்டு மைதானங்கள். எல்லா மைதானங்களுக்கும், திட்டமிட்டதைவிடக் குறைந்தது இரண்டு மடங்கு செலவு பிடித்திருக்கிறது. 2014 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட பல மைதானங்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

இந்த ஒலிம்பிக்கின் மோசமான இன்னொரு பக்கம், வேலையில்லாத் திண்டாட்டம். உள்கட்டமைப்புகள் தொடர்பான பணிகளில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு உருவானது. ஆனால், செப்டம்பர் மாதத்துடன் இந்த வேலைகள் நிறுத்தப்பட்டுவிடும். ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன், இதற்கென பணியமர்த்தப்பட்ட 50,000 பாதுகாப்பு வீரர்கள் தாங்கள் முன்பு பார்த்துவந்த வேலைகளுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். இதனால் தெருக்களில் குற்றங்கள் அதிகரிக்கும். ஒலிம்பிக் போட்டிகளுக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட ஓட்டல்கள் காலியாகிவிடும். அங்கு பணியாளர்களுக்கும் தேவை இருக்காது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முழுவதும் தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளித்துக்கொண்டிருப்பார்கள் ரியோ நகர மக்கள், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன்!

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x