Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

விடுதலை முடிவு அரசியல் சரியா?

இது வெகுஜன அரசியல் முடிவு - டி.கார்த்திக்

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதே மூவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இப்போது நடந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இது வரவேற்கத்தக்க விஷயமே. ஆனால், இந்த முடிவின் பின்னணியில் வெகுஜன அரசியல் - ஓட்டு அரசியல் பொதிந்துகிடக்கிறது என்பதே உண்மை.

ஈழப் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரங்களில் திடீர் ஆதரவு அவதாரம் எடுத்த அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆதரவுத் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும் முடிச்சுப் போட்டுத்தான் பார்க்க வேண்டும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். ஏழு பேரை விடுதலை செய்யப் பரிந்துரைப்பதாக 110 அறிக்கையின் கீழ் சட்டப்பேரவையில் ஜெயலலிதா வாசித்த அறிக்கை அப்பட்டமான அரசியல் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த அறிக்கையில், 1999-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது மூவர் தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததுபற்றியும் விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் அல்லர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 1998-ம் ஆண்டில் குஜ்ரால் அரசு கவிழ்க்கப்பட்டதற்கு என்ன காரணம்? ராஜீவ் கொலையில் தி.மு.க. மீது ஜெயின் கமிஷன் குற்றம் சாட்டியதாகக் கூறி, குஜ்ரால் அரசு ஆதரவை விலக்கிக்கொண்டது.

இந்தச் சூழ்நிலையில், 1999-ம் ஆண்டில் கருணாநிதி தண்டனை குறைப்பு முடிவை எடுக்காதது பெரிய ஆச்சரியமான விஷயமாகத் தெரியவில்லை. 2008-ல் தி.மு.க. ஆட்சியின்போது நீண்ட காலம் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் தன்னைச் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தட்டிக்கழித்தது தி.மு.க. அரசு. காங்கிரஸ் ஆதரவுடன் அப்போது ஆட்சி நடத்திய கருணாநிதியிடம் இருந்து விடுதலையை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். நளினி சில நாட்களுக்கு முன்பு, பரோல் கேட்டு தாக்கல்செய்த மனு என்ன ஆனது? தி.மு.க. ஆட்சியில் என்ன காரணம் சொல்லப்பட்டதோ அதே காரணம், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டித் தட்டிக்கழித்தது அ.தி.மு.க. அரசு. ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் ஞானோதயம். எல்லாம் தேர்தல் ஞானோதயம்தான். ஏழு பேரையும் விடுவிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறார் ஜெயலலிதா. தி.மு.க.வும் சேர்ந்து ஒத்திசைக்கிறது. தேர்தல் நேரமாக இல்லாவிட்டால், இதெல்லாம் சாத்தியமா?

மூவர் தண்டனையைக் குறைக்க உச்ச நீதிமன்றத்திலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் கெடு வேறு. இதை மத்திய அரசு எதிர்த்தால், தமிழின விரோதப்போக்கு என்று காங்கிரஸையும், அதோடு கூட்டணி சேர நினைக்கும் கட்சிகளையும் பிரச்சாரத்தின்போது வறுத்தெடுக்கலாம். மௌனமாக விடுவித்துவிட்டால், நான்தான் விடுவித்தேன் என ஓட்டு அறுவடை செய்யலாம்!

- கார்த்திக், தொடர்புக்கு: karthikeyan.di@kslmedia.in

வெகுஜன அரசியல்தானே ஜனநாயகம்- சமஸ்

ஒரு பொழுதாயினும் நீ என்னை அடித்தது கிடையாது. இருந்தும் உனது முகம் சிவப்பதும் உரத்த குரலில் நீ கத்துவதும் வேகமாகக் காற்சட்டையைச் சரிசெய்வதும். இவையெல்லாம் ஒருத்தனைத் தூக்கிலிடுவதுபோல. தூக்கிலிட்டால் அவன் செத்துவிடுவான். எல்லாம் முடிந்துவிடும். ஆனால் தூக்கிலிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவனை அருகிலிருந்து பார்க்க வைத்து, கழுத்துக்கு முன் கயிறு தொங்கும் அந்தக் கணத்தில், ஆயுள் தண்டனை என அவனுக்குச் சொல்வதைப் போல. வாழ்வு முழுதும் அவனை அந்த வலியில் துடிக்கவைப்பதைப் போல.”

- காஃப்கா தந்தைக்கு எழுதிய கடிதத்தில்.

இதுதான் கொடூரத் தண்டனை என்று எதையாவது முற்றிலுமாக வரையறுத்துவிட முடியுமா? காஃப்காவின் வரிகளைப் படிக்கும்போது, முடியாது என்றே தோன்றுகிறது. மரண தண்டனையைக் கொடூரத்தின் உச்சமாக நாம் நம்புகிறோம். அதனாலேயே, ஆயுள் தண்டனை சாதாரணமானதாகிவிட முடியுமா?

மொத்தம் 23 வருஷ சிறைவாசம். முதலில், நீதிமன்ற விசாரணையின்போது ஏழு வருஷங்கள். அப்புறம் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பின் 13 வருஷங்கள். ஒரு நாளைக்கு 86,400 நொடிகள். ஓர் ஆண்டுக்கு 3,15,36,000 நொடிகள். எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற உணர்வோடு ஒரு நொடியைக் கடப்பது எவ்வளவு கொடூரமானது? எனில், கருணை மனுவைப் பரிசீலிக்கிறேன் என்ற பெயரில், ஆண்டுக் கணக்காக இழுத்தடிப்பது எவ்வளவு கொடூரமான தண்டனை?

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மரண தண்டனையிலிருந்து விடுவித்ததன் மூலம் இந்திய நீதி அமைப்பின் மீது விழுந்த கறையை உச்ச நீதிமன்றம் துடைத்திருக்கிறது என்றால், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் இந்திய அரசியல் அமைப்பின் மீது விழுந்த கறையைத் தமிழக அரசு துடைத்திருக்கிறது. மத்திய அரசு அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அபூர்வமாக இந்தப் பிரச்சினையில், நாடாளுமன்றத்தில்

அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே குரல் கொடுத்திருப்பதை ஆக்கபூர்வமான நகர்வாகவே பார்க்க வேண்டும். ‘தேர்தல் நெருங்கும் சூழலில், இது வெகுஜன அரசியல் நடவடிக்கை' என்று சொன்னால், ஆம் இது வெகுஜன அரசியல் நடவடிக்கைதான்; அதில் என்ன தவறு?

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்றைக்கு மரண தண்டனைக்கு எதிராக இவ்வளவு வலுவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்றால், அதற்கு வெகுஜன எண்ணமும் ஒரு காரணம். இந்திய வரலாற்றிலேயே மரண தண்டனைக்கு எதிராகத் தன்னெழுச்சியாக ஒரு பெரும் இயக்கம் நடந்த மாநிலம் இது. அரசியல் கட்சிகள் தங்கள் முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராக, மக்கள் எண்ணத்தை நோக்கி நகர்வதற்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே… சமூகத்துக்கு அது நல்லது என்றால், வரவேற்கப்பட வேண்டியதுதானே? கடைசியில் ஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே?​

- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x