Last Updated : 05 Oct, 2013 12:13 PM

 

Published : 05 Oct 2013 12:13 PM
Last Updated : 05 Oct 2013 12:13 PM

வசன சம்பிரதாயக் கதையின் இடம்

'தமிழ் நாவல் : நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்' என்னும் நூலை எழுதிய சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் 'பரமார்த்த குரு கதை'க்குப் பின் உரைநடையில் உருவான படைப்பிலக்கியம் என 'வசன சம்பிரதாயக் கதை'யைக் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குட்டிப் புலவர் சிவகங்கை சமஸ்தானத்தில் வித்வானாக இருந்தவர். இரவிகுல முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர் என்பவர் அப்போது சமஸ்தானாதிபதியாக இருந்தார். வரலாற்றில் புகழ்பெற்ற வேலுநாச்சியாரின் கணவர்தான் முத்துவடுகநாதர். 1775ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று இரவு மக்கள் விழித்துக் கொண்டிருப்பதற்காக முத்துக்குட்டிப் புலவரை ஒரு கதை சொல்லும்படி முத்து வடுகநாதர் பணித்தார். சில நிபந்தனைகளையும் விதித்தார்.

முன் ஒருவராலும் சொல்லப்படாத கதையாக இருக்க வேண்டும். கதைக்குள் ஐம்பத்தாறு தேசங்களிலும் உள்ள இடங்கள், விலங்குகள், தாவரங்களின் பெயர்கள் வர வேண்டும். கதையில் தெய்வ பக்திக்கும் சிவராத்திரி மகிமைக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இத்தகைய நிபந்தனைகளை ஏற்று சொல்லப்பட்ட கதைதான் 'வசன சம்பிரதாயக் கதை' . அவர் கதை சொல்லும்போது கேட்ட 'கற்றுச்சொல்லி'கள் சிலர் அதை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர். ஆனால் ஓலைச்சுவடிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. எனினும் கதை கிடைத்துவிட்டது.

முத்துக்குட்டி ஐயா சொன்ன கதையை ஒருவர் அப்படியே நினைவில் வைத்திருந்தார். பத்தொன்ப தாம் நூற்றாண்டில் அறியப்பட்ட இசை அறிஞரான கவிகுஞ்சரபாரதியின் சகோதரராகிய நாகுபாரதிதான் அவர். நினைவிலிருந்து கதையை முழுவதுமாக அப்படியே சொல்ல அவரது மகன் வைத்தியநாத பாரதி என்பவர் படி எடுத்துக்கொண்டார். பின்னர் 1895ஆம் ஆண்டு ராமசாமி தீட்சிதர் என்பாரின் உதவியுடன் 'வசன சம்பிரதாயக் கதை' என்னும் தலைப்பில் அதை நூலாக அச்சிட்டுத் திருவையாற்றில் வெளியிட்டார்.

இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980ஆம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் 'கண்டெடுத்த கருவூலம்' (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004ஆம் ஆண்டு சிட்டி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கதையைப் பற்றிய தகவல்களில் பல்வேறு ஐயங்கள் ஏற்படுகின்றன. சிலவற்றை யூகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இக்கதைக்கு 'வசன சம்பிரதாயக் கதை' என்னும் பெயரை நூலை அச்சிட்டவரான வைத்தியநாத பாரதியே கொடுத்தாரா, நூலை நினைவிலிருந்து சொன்ன நாகுபாரதி இப்பெயரைச் சொன்னாரா, ஓலைச்சுவடியில் இப்பெயர்தான் இருந்ததா என்பவை நமக்கு எழும் கேள்விகள்.

நூலின் அளவை வைத்துப் பார்த்தால் ஓர் இரவு முழுவதும் சொல்வதற்கேற்ற கதையல்ல இது என்றும் தோன்றுகின்றது. உரைநடைக் கதை இது. சம்பிரதாயக் கதை என்று இதைச் சொல்ல முடியுமா? வாய்மொழியாகச் சொல்லப்பட்டது என்பதற்கான கூறுகள் இக்கதையில் மிகக் குறைவே. கதா காலட்சேப மரபில் இக்கதையை வைத்துப் பார்க்க ஓரளவு வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த எழுத்து வடிவத்தை ஆதாரமாகக் கொண்டு விரித்து இரவு முழுவதும் காலட்சேபம் செய்திருக்கலாமோ. அப்படியும் முடிவுக்கு வந்துவிட இயலவில்லை. இதில் சொல்கதைக் கூறுகள் மிகமிகக் குறைவு. இன்னும் நுணுகிப் பார்த்தால் கதைக்கூறுகளே இல்லை என்றும் சொல்லிவிடலாம்.

இந்நூலின் அமைப்பு விண்ணப்ப முறையிலானது. 'குபேர மகாராஜாஅவர்கள் சீர்பாதம் திக்கு நோக்கி தண்டம் பண்ணி… குடியான அனைவோரும் தண்டனிட்டு விண்ணப்பம்' என்பதே இதன் தொடக்கம். அரசனுக்கு அனுப்பும் விண்ணப்பம் ஒன்றின் அமைப்பில் குபேரனுக்குச் செய்யும் விண்ணப்பம்தான் இது. மழை பெய்யாததால் ஏற்பட்ட பஞ்சம், அதனால் மக்கள் பட்ட துன்பம், இறை வேண்டுதல், மழை பொழிதல், விவசாயம் செய்தல், உணவு உண்டு சுகமாக இருத்தல் ஆகியவையே இதனுள் சொல்லப்படுபவை. முத்து வடுகநாதர் எவ்வாறு குபேரனைவிட உயர்ந்தவர் என்பதை எடுத்துச் சொல்லி அவரைப் புகழும் வகையிலான முடிவைக் கொண்டிருக்கிறது.

விண்ணப்ப மொழியும் ஏராளமான சமஸ்கிருதச் சொற்களும் செய்யுள் நடைக்குரிய புணர்ச்சியும் பேச்சு மொழியும் என எல்லாம் விரவிக் கிடக்கின்றன. அக்காலச் சாதிப் படிநிலைகள் தொடர்பான பதிவுகளும் இருக்கின்றன.

குபரேனின் சிறப்பைச் சொல்லிப் பின் முத்து வடுகநாதரின் சிறப்பையும் அதனோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

'இந்தக் கதை மொழியியில் வழியிலும் வரலாற்று அடிப்படையிலும் விரிவான ஆய்வுக்குரியது' என்று முன்னுரை தெரிவிக்கின்றது. சமூக வரலாற்றுக்கும் இது மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்வது என்பதில் ஐயமில்லை. அஃறிணைப் பொருள்களுக்கெல்லாம் உயர்திணை வடிவம் கொடுத்து உருவக பாணியில் எழுதப்பட்டுள்ள சுவாரசியம் இதில் இருக்கிறது. மேகத்தை மேகவண்ணன் சேர்வைக்காரன் என்றும் காற்றைக் காத்தவராயன் என்றும் மழையை மாரியப்பன் என்றும் எழுதுகிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்து மொழியும் பேச்சுமொழியும் கலந்த நடை. விவரங்களும் உடனடியாகப் புரிபடுபவை அல்ல. பதிப்பாசிரியர் இயன்ற அளவு குறிப்புக் கொடுத்துள்ளார். அது போதுமானதல்ல. நூற்றுக்கணக்கில் ஊர்ப்பெயர்கள் இடம்பெறுகின்றன. அக்கால வழக்கங்கள் வருகின்றன. வேறு பிரதிகள் கிடைக்குமானால் விரிவான குறிப்புகளுடனும் விளக்கங்களுடனும் இதை வெளியிடுவது அவசியம்.

இப்போதைக்கு 'வசன சம்பிரதாயக் கதை'யை பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான உரைநடை இலக்கியம் என்னும் பொதுப்பெயரால் சுட்டலாம். இந்நூலை நவீன இலக்கிய வரலாற்றில் பொருத்துவது இயலுமா என்பது சந்தேகமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x