Published : 09 Mar 2017 08:32 AM
Last Updated : 09 Mar 2017 08:32 AM

இயற்கையைப் பாதுகாப்பதில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது!

இயற்கையின் அருட்கொடையாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக, சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றம் தருகிறது. இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவு காண்போம் என்றும், சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைப் புதிதாக அடையாளம் காண்போம் என்றும் அலட்சியமாகச் சொல்கிறது மத்திய அரசு. கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல், அப்பகுதியின் வளர்ச்சியா, சூழல் பாதுகாப்பா எது முக்கியம் என்ற விவாதமாக மாற்றவும் விரும்புகிறது. இது துரதிர்ஷ்டவசமானது.

நாட்டின் இரண்டு பருவக் காற்றுகளையும் தீர்மானிப்பதில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இங்குள்ள வானளாவிய காடுகளும் ஆறுகளும் குளிர்ச்சியான மேகங்களை ஈர்த்து மழைப் பொழிவைப் பெருக்கிவந்தன. இவை அழிக்கப்படுவதால் வானிலை வறண்டு, வர வேண்டிய மழையும் குறைந்துவருகிறது. இப்பகுதியில் உள்ள தாவரங்களும் பூச்சிகள் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரிகளும் இன்னமும் முழுமையாக ஆராயப்படவில்லை. ஆண்டுதோறும் புதிது புதிதாகப் பூச்சிகளும் பிராணிகளும் அடையாளம் காணப்படுகின்றன. இந்நிலையில், ‘உலகமே அஞ்சும் அளவுக்கு இப்பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆபத்து நேர்ந்துகொண்டிருக்கிறது’ என்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஆராய நியமிக்கப்பட்ட மாதவ் காட்கில் நிபுணர் குழு வலியுறுத்திக் கூறியிருக்கிறது. மறுபுறம், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்று காட்கில் குழு அடையாளம் கண்ட பரப்பளவில் மூன்றில் ஒரு பங்குதான் அப்படி முக்கியமானது என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இரு அறிக்கைகளையும் இப்பகுதி மாநில அரசுகளும் தொழில் துறையினரும் கடுமையாக ஆட்சேபித்திருப்பது தனிக்கதை.

கோவாவில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் காட்டிய முனைப்பால் அம்மாநிலத்தின் நீர்நிலைகளும் வனங்களும் கடல்பரப்பும் இதர சுற்றுச்சூழலும் நாசமாக்கப்பட்டுவிட்டன. இதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. அரிய வகை மீன்களும் மூலிகைக் தாவரங்களும் வளரும் இடங்கள் பரப்பளவில் சிறியதாக இருக்கிறதென்று அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் காட்கில்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் ஒவ்வொரு அங்குலமும் காப்பாற்றப்பட வேண்டும். எனவே, இதில் அக்கறை உள்ளவர்களிடமும், இப்பகுதி மக்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகே அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும். மிகவும் நுட்பமான நிலப்பரப்புகளை அப்பகுதிகளில் வாழும் மக்களைக் கொண்டே பாதுகாக்க வேண்டும். அங்கே சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது, சமூகப் பண்ணையம் செய்வது போன்றவற்றை அறிவியல் ஆய்வுகளுக்குப் பிறகே மேற்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாக்கத் தவறினால், அதன் விளைவை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அரசு உணர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x