Published : 01 Jan 2014 10:33 AM
Last Updated : 01 Jan 2014 10:33 AM

ஜனநாயக நீரோக்கள்!

இந்தியாவின் 2013-ன் பெரும் துயரம் முசாபர்பூர் கலவரங்கள். கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி, அவ்வப்போது மூண்ட கலவரங்களில் 62 பேர் உயிரிழந்தனர்; 60 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியிருக்கின்றனர். முகாம்களிலும் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள். முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் போதிய கழிப்பிட வசதிகூடச் செய்யப்படவில்லை. சுகாதாரச் சூழல் இல்லை. குளிரும் சுகாதாரக்கேடும் சேர்ந்து முகாம்களில் இதுவரை 34 குழந்தைகளைக் கொன்றிருக்கின்றன. முகாமைச் சீரமைக்க எந்த அக்கறையும் காட்டாத அரசு, முகாமில் இருப்பவர்களை வெளியேற்றத் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.

“முகாமில் சுகாதார வசதிகள் இல்லையே?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “முகாம் என்ன ஐந்து நட்சத்திர விடுதிபோலவா இருக்கும்?” என்று சொல்லியிருக்கிறார் ஒரு மூத்த அதிகாரி. “நடுக்கும் குளிரில் சரியான கம்பளிகள், போர்வைகள் இல்லாமல் அகதிகள் அவதிப் படுகிறார்களே?” என்ற கேள்விக்கு, “சைபீரியாவில்தான் உலகிலேயே குளிர் அதிகம், அங்கேயே குளிர் காரணமாக யாரும் இறந்ததாக வரலாறு கிடையாது” என்று இன்னோர் அதிகாரி பதில் அளித்திருக்கிறார்.

மாநில அமைச்சர் சிவபால் சிங் யாதவ் தலைமையில் முகாமைப் பார்வையிட்டுத் திரும்பிய 10 அமைச்சர்கள் கொண்ட குழுவோ, “முசாபர்பூர் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு அமைத்துள்ள முகாம்களில் இருப்பவர்கள் அகதிகளே அல்ல; அரசு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மதறஸாக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்” என்று கூறியிருக்கிறார்கள்.

சரி, மாநிலத்தில் முதல்வர் என்று ஒருவர் இருப்பாரே அவர் என்ன செய்கிறார்? அவர் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார். முதல்வர் அகிலேஷும் அவருடைய தந்தையும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங்கும் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் எடாவா மாவட்டத்தில் உள்ள தங்களுடைய மூதாதையர் கிராமத்தில் ‘சைஃபாய் மஹோத்சவ்’ என்ற கலாசார நிகழ்ச்சியை நடத்தி, ‘குத்தாட்டம்’ பார்த்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

கர்நாடகத்திலும் இதே கதைதான். மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. “ரூ.1,016.99 கோடி வேளாண் பயிர்களும் ரூ.702.30 கோடி தோட்டக்கலைப் பயிர்களும் நாசம்” என்று மத்தியக் குழுவிடம் முறையிடப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளை எதுவும் பாதிக்கவில்லை. மாநிலச் சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழு சார்பில் 18 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.7.5 லட்சம் செலவில் பிரேசில், அர்ஜென்டீனா, பெரு என லத்தீன் அமெரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். இதை ஊடகங்கள் சுட்டிக்காட்டி, “மாநிலத்தின் நிலைமை இப்படியிருக்கும் போது பேரவை உறுப்பினர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் தேவையா?” என்று கேட்டால், “தேவைதான்” என்று சொல்லியிருக்கிறார் மதிப்பீட்டுக் குழுத் தலைவர் மல்லிகய்யா குட்டேதார்.

இந்த நாட்டில் என்ன மாதிரி துயரங்களை எல்லாம் எதிர்கொள்ள நிர்ப்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதைவிடவும் எந்த மாதிரி ஆட்சியாளர்களின் நடுவே வாழ நிர்ப்பந்தப்பட்டிருக்கிறோம் என்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x