Last Updated : 16 Feb, 2017 09:57 AM

 

Published : 16 Feb 2017 09:57 AM
Last Updated : 16 Feb 2017 09:57 AM

சொத்துக் குவிப்பு வழக்கு இரு நாயகர்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பியதில் மிகப் பெரிய பங்கு இருவருக்கு உண்டு. ஒருவர், இந்த வழக்கை கர்நாடக அரசு சார்பில் நடத்திய வழக்குரைஞர் ஆச்சார்யா. மற்றவர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா. அந்த அளவுக்குப் பல நெருக்கடிகளைக் கடந்தே இந்தத் தீர்ப்புக்கு அவர்கள் இருவரும் வித்திட்டிருக்கிறார்கள்.

வழக்கு விவரம்

ஜெயலலிதா முதன்முறையாகத் தமிழகத்தில் முதல் அமைச்சராக இருந்த 1991-96 காலகட்டம் ஒரு இருண்ட காலம் என்றே சொல்ல வேண்டும். பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1996 தேர்தலில் அவர் ஆட்சியை இழந்ததற்கு ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியக் காரணமாக அமைந்தன. 1996-ல் சுப்ரமணிய சுவாமி ஒரு புகாரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு மேலாக சொத்து சேர்த்ததாக அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை இழந்துவிட்ட நிலையில், பல்வேறு ஊழல் வழக்குகளை அவர் எதிர்கொண்டார். அந்த வழக்குகளில் ஒன்றே சொத்துக்குவிப்பு வழக்கு. ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்தற்கு முன் ரூ. 2.02 கோடியாக இருந்த சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளுக்குப் பின் ரூ.66.6 கோடியாக உயர்ந்தது என்பதே இந்த வழக்குக்கு முன்பிருந்த ஆரம்பக் குற்றச்சாட்டு. முதல்வர் பதவியை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் புலன் விசாரணையின் அடிப்படையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இவர்கள் ஜெயலலிதாவுடன் சதி செய்து, வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து ஊழல் செய்வதில் உடந்தையாக இருந்தனர் என்பதும் நால்வரும் 32 நிறுவனங்கள் மூலமாக நிர்வகித்து அதன் மூலமாகக் கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செயலில் ஈடுபட்டனர் என்பதும் முக்கியமான குற்றச்சாட்டு.

ஜெயலலிதா மீதான வழக்குகளின் விசாரணைகள் தனி நீதிமன்றத்தில் விரைவுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து தீர்ப்புகளை அவர் எதிர்கொண்டார். சில வழக்குகளில் தண்டனையையும் எதிர்கொண்டார். ஆனால், 2001 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்த பின்னர் வழக்குகளின் போக்கு மாறியது. இதற்கு முன்னால் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்கள் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். மேல்முறையீடுகள் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்தன. பெரும்பாலான வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட வண்ணம் இருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்தச் சூழலில்தான் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை திமுக அணுகியது. எந்த மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு வழக்கின் விசாரணையை நடத்தும் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றும் திமுகவினர் கோரினர்.

ஆச்சரியப்படுத்திய ஆச்சார்யா

2004-ல் விசாரணையைக் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞரான ஆச்சார்யா, கர்நாடக மாநில அரசின் சார்பாக வழக்கு நடத்தும் வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது தான் எதிர்கொண்ட அழுத்தங்களையும், மனஉளைச்சல்களையும் தனது சுயசரிதையிலேயே பதிவுசெய்திருக்கிறார்.

மங்களூரில் சாதாரண வழக்குரைஞராகத் தொழில் தொடங்கியவர் அவர். பின்னர் பெங்களூருக்கு வந்து வழக்குரைஞர் தொழிலைத் தொடர்ந்தார். அவருடைய கடும் உழைப்பு மற்றும் நேர்மையால் கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்குரைஞரானார். ஜெயலலிதா தரப்பு நிறைய அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் அவருக்குத் தந்தது. மிரட்டல், உருட்டல்களுக்கு அவர் அஞ்சாத நிலையில், கர்நாடகத்தை அடுத்து ஆளவந்த பாஜக அரசு மூலம் நெருக்கடிகளைத் தந்தது. “மாநில அரசின் தலைமை வழக்குரைஞர் அல்லது விசாரணை நீதிமன்ற வழக்குரைஞர் என்ற இரு பதவிகளில் ஒன்றில்தான் அவர் இருக்க வேண்டும்; ஒரு பதவியைத் துறக்க வேண்டும்” என்று பாஜக அரசு வற்புறுத்தியது.

அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற மாநிலத் தலைமை வழக்குரைஞர் பதவியை வைத்துக்கொண்டு, விசாரணை நீதிமன்ற வழக்குரைஞர் பதவியிலிருந்து விலகிவிடுவார் என்றே பாஜகவும் ஜெயலலிதாவும் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத் தலைமை வழக்குரைஞர் பதவியைத் துறந்து, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை நடத்தும் வழக்குரைஞராகத் தொடர ஆச்சார்யா முடிவெடுத்தது இந்த வழக்கில் அவர் காட்டிய நேர்மைக்கும் அர்ப்பணிப்புக்கும் உதாரணம்.

நீதியை நிலைநாட்டிய குன்ஹா

வழக்கு விசாரணை பல ஆண்டுகள் நீடிக்குமாறு குற்றவாளிகள் நால்வரும் பல்வேறு விதமான தந்திரங்களைக் கையாண்டனர். மொத்தம் 14 நீதிபதிகள் மாறிய வழக்கு இது. பல சமயங்களில் நீதிபதிகள் வழக்கு இழுத்தடிக்கப்படுவதைப்பற்றி வெளிப்படையாகப் புலம்பினர். இறுதியில் நீதிபதி குன்ஹா, 2014-ல் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிகள் நால்வரின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தார். அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ஜெயலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார். அரசாணைகள் 120 மற்றும் 1183-ல் பிணையில் வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஒரு வழக்கின் தீர்ப்பாக மட்டும் அல்லாமல், இந்தியாவில் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கான என்றென்றைக்குமான வலுவான எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும் என்ற அறவுறுதியையும் தாங்கியே வந்தது. இறுதியில் அதுவே வெல்லவும் செய்திருக்கிறது.

21 நாளில் பிணையில் சிறையிலிருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா. உச்ச நீதிமன்றம், எதிர்த் தரப்பான கர்நாடக அரசுக்கு அறிவிப்பு (notice) அளிக்காமலும் அவர்களின் வாதத்தைக் கேட்காமலும் பிணை வழங்கியதாக என் நினைவு. 18 ஆண்டுகள் விசாரணையை இழுத்தடித்தவர்கள், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பிற்கு மேல் செய்த முறையீட்டைக் கர்நாடக உயர் நீதிமன்றம் விரைவில் விசாரிக்க வேண்டும் என்றனர். மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்தார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கர்நாடக அரசு. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பே சரியானது என்றும், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரியது. கர்நாடக அரசிற்காக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டவரும் ஆச்சார்யாதான்.

இந்த மேல்முறையீட்டில் 14.02.2017 அன்று (வாதங்கள் முடிந்து 8 மாதத்திற்கு பின்னர்) தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதில் குன்ஹாவின் தீர்ப்பே சரியானது என்று கூறி, உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்துசெய்துள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு ஆச்சார்யாவின் வாதங்களைப் பெருமளவில் எடுத்துக்காட்டியுள்ளது. ஆச்சார்யா, குன்ஹா போன்ற நீதிமான்களின் உழைப்பில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது!

- நீதியரசர் ஹரி பரந்தாமன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி, தொடர்புக்கு: hariparanthaman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x